Trending News

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்றும்…

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணை 2ஆவது நாளாக இன்று (13) முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த மனுக்கள் தொடர்பில் சட்டமா அதிபர் தமது நிலைப்பாட்டை இன்று விளக்கவுள்ளார்.

13 மனுக்களில் 12 மனுக்கள் மீதான விசாரணைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டதுடன், இன்று மீதமுள்ள மனு மீதான விசாரணை இடம்பெறவுள்ளது.

இதனையடுத்து, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக 13 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதுடன், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தாக்கல் செய்திருந்த மனு முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எஸ். கனக் – ஈஸ்வரன் மன்றில் ஆஜராகி வாதங்களை முன்வைத்திருந்தார்.

பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தால் மாத்திரமே பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும் எனவும் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கமைய பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த நடைமுறையை பின்பற்றாமல் தமது அபிப்பிராயத்துக்கு அமைய பாராளுமன்றத்தைக் கலைத்தமை மக்கள் ஆணையை மீறும் செயல் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, பாராளுமன்றம் கலைக்கபட்டமை மக்களின் இறைமைக்கு விடுக்கப்பட்ட தாக்குதல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பமின்றி நான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் 19ஆம் அரசியலமைப்புத் திருத்தத்தின் 70 (1) உறுப்புரைக்கமைய, ஜனாதிபதியிடமிருந்து மீளப்பெறப்பட்டுள்ளதாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனை கருத்திற்கொள்ளாமல் செயற்பட்டமை பாராளுமன்றத்தை மாத்திரமல்லாது ஒட்டுமொத்த சமூகத்தையும் சீர்குலைக்கும் வகையிலும் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது மனுதாரரான ஐக்கிய ​தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பனவும் ஜனாதிபதி சட்டத்தரணி எஸ். கனக்- ஈஸ்வரனின் வாதங்களை ஆமோதித்து மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் தமது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், மனோ கணேசன் அனுரகுமார திசாநாயக்க ஆகியோருடன் மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து, சட்டத்தரணி அருண லக்சிறி, சட்டத்தரணி லால் விஜேநாயக்க, சட்டத்தரணி ஜே.சி.ஜே. பெரேரா, சட்டத்தரணி இந்திக்க கால்லகே உள்ளிட்டவர்கள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இதனைத்தவிர, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹுலும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பேராசிரியர் சன்ன ஜயசுமன மூன்றாம் தரப்பாக மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா, உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, பிரியந்தஜயவர்தன ஆகியோர் இந்த அனைத்து மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.

 

 

 

Related posts

Sri Lanka wins ‘LMS’ series in South Africa – [VIDEO]

Mohamed Dilsad

රාජිත, රනිල් ට සහය දෙයි.

Editor O

வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்ற மூவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment