(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பரோனஸ் பெற்றீஸியா ஸ்கொட்லான்ட் டுக்குமிடையில் தொலைபேசி உரையாடல் நேற்று(23)
இடம்பெற்றது.
இலங்கையின் அரசியலமைப்பிற்கு ஏற்பவே தான் செயற்படுவதாகவும் ஜனநாயக நடைமுறைகளை தொடர்ந்தும் பேணிவருவதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு ஏற்ப செயற்படுமாறு தான் சபாநாயகரிடம் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இருப்பைத் தீர்மானிக்கின்ற மிக முக்கியமானதொரு விடயம் தொடர்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் குரல்களுக்கு ஏற்ப அல்லாது இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை அல்லது பெயர்களின் மூலம் உரிய நடைமுறைகளை பேணுமாறும் தான் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
பொதுநலவாய அமைப்பின் நீண்டகால உறுப்பினர் என்ற வகையிலும் ஆசியாவின் பழைமை வாய்ந்த ஜனநாயக நாடு என்ற வகையிலும் இலங்கை ஜனநாயகத்தை கடைப்பிடித்து வருவது தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாக செயலாளர் நாயகம் இதன்போது தெரிவித்தார்.
பொதுநலவாய அமைப்பு தொடர்ந்தும் இலங்கையுடன் நெருங்கிப் பணியாற்றும் என்று உறுதியளித்துள்ள அவர்இ தற்போதைய அரசியல் நெருக்கடியை இலங்கை இணக்கமான முறையில் தீர்த்துக்கொள்ளும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.