Trending News

அகதி முகாமிலிருந்து அலரி மாளிகை வரை; சோதனகளை சாதனைகளாக்கி வரும் யுக புருஷர்..!

(UTV|COLOMBO)-இலங்கையில் திடீரென ஏற்பட்ட எதிர்பாராத அரசியல் நெருக்கடி காரணமாக நாடும் அரச இயந்திரங்களும் முடங்கிக் கிடக்கின்றது. பிரதமர் பதவி நீக்கத்தில் ஆரம்பித்து பாராளுமன்ற ஒத்திவைப்பு, திடீரெனக் கலைப்பு மற்றும் நீதிமன்றம் வரை சென்றுள்ள விவகாரங்களால் இலங்கை அரசியலில் மாத்திரமன்றி உலக நாடுகளிலும் இதன் தாக்கம் பரவி, அன்றாட நிர்வாகம் சீர்குலைந்து, பொருளாதார நீதியிலும் பல்வேறு பின்னடைவுகளை சந்திக்க வேண்டி நேரிட்டுள்ளது. இந்த வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் அமைச்சர் பதவியும் காலாவதியாக்கப்பட்டிருப்பதுடன், புதிய அரசை உருவாக்குவதற்கு அவரது தயவில் அனைத்துத் தரப்பினரும் தங்கியிருக்க வேண்டிய தேவை எழுந்திருப்பதை, நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் துலாம்பரமாக்கி வருகின்றன.

பெரும்பான்மை இல்லாத அரசாங்கமொன்றுக்கு பலம் சேர்ப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் வெகுவான உதவியை நாடி வரும் அரசாங்க தரப்பினர், அவரை என்ன விலை கொடுத்தேனும் வாங்க வேண்டுமென்பதில் துடியாய் துடிக்கின்றனர். இந்த வலையில் ரிஷாட்டை வீழ்த்தி விட்டால் அடுத்தடுத்து பல கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் தமது வலைக்குள் சிக்கவைத்து, ஆட்சி அதிகாரத்தை நிலை நாட்டலாம் என அவர்கள் கங்கணம் கட்டி வருகின்றனர்.

பல்வேறு முனைகளிலும் இவர்கள் இதற்கான பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்ற
போதும், ரிஷாட் இந்தக் கோரிக்கைகளுக்கும் இனிப்பு வார்த்தைகளுக்கும் அசைந்து கொடுக்காமல், கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று, ஜனநாயகத்திற்கான இந்த போராட்டத்தில் நிலைத்து நிற்கின்றார். சமூகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டதற்காகவே மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், மஹிந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறி உயிர் அச்சுறுத்தலுக்கும், பேராபத்துக்கும் மத்தியில் தனது உயிரைத் துச்சமென மதித்து,
மைத்திரிக்காக பிரச்சாரம் செய்து, அவரை ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவதற்கு பாடுபட்டார். எனினும், எந்த ஜனாதிபதியை, சிறுபான்மை மக்களின் நலன்

காக்க ஆட்சிக்குக் கொண்டு வந்தாரோ, அவரே இப்போது சிறுபான்மை மக்களுக்கு துரோகமிழைத்து விட்டு, ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைத்து விட்டு, அரசியலமைப்புச் சட்டத் தனது மனம் போன போக்கில் கையிலெடுத்து பேயாட்டம் ஆடுகின்றார். ஜனாதிபதி மைத்திரி யாருக்கெதிராக ஜனாதிபதித் தேர்தல் களத்தில் நின்று போராடினாரோ, அவரையே அரசியலமைப்புக்கு முரணாக பிரதமராக்கி, நாட்டு
மக்களின் ஆணையை மீறியிருப்பதுதான் ரிஷாட் பதியுதீனின் ஆவேசமாக
இருக்கின்றது.

தற்போதைய அரசியல் நெருக்கடியினால் ஐக்கிய தேசிய முன்னணி அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகள் காலாவதியானது போல, ரிஷாட்டின் அமைச்சுப் பதவியும் இல்லாமற் போனது. பதவிகளும் பட்டங்களும் இல்லாமற் போன போதும், அவர் கொண்ட கொள்கையில் உறுதி தளரவில்லை. எடுத்த இலட்சியத்திலும் ஒரு போதும் மாறவில்லை. மகிந்த அரசிலிருந்து வெளியேறிய காலத்திலும் அமைச்சுப் பதவியில்லாமல், எந்த விதமான பாதுகாப்புமின்றி, இறைவனின் துணையுடன் மாத்திரமே மைத்திரிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அமைச்சு பதவியில்லாமல் அதிகாரமில்லாமல் ரிஷாட் அழிந்து விடுவாரென்று கற்பனையில் திளைத்தவருக்கு பேரிடி கொடுக்கும் வகையில், அவரது செயற்பாடுகளும் உறுதியும் உழைப்பும் சிம்ம சொப்பனமாகவே இருந்தது.

அதே போன்று, இப்போதும் அமைச்சர் ரிஷாட்டின் பதவி பறி போய் விட்டதென்ற மகிழ்ச்சியில், அவரது அரசியல் எதிரிகள் மகிழ்ச்சிக்கடலில் குதிக்கலாம். அதே போன்று அவருடன் ஒட்டியிருந்த ஒரு சில அட்டைகளின் சுயரூபங்கள் கூட இனி வரும் காலங்களில் வெளிச்சத்திற்கு வரலாம். மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனில் விசுவாசம் கொண்டவர்களும்,அவரது இலட்சியப் பயணத்தில் இணைந்து பயணிப்பவர்களும் அரசியல் அதிகாரம் இல்லாத நிலையிலும், அவருக்கு உந்துசக்தியாகவே திகழ்வரென்பது கடந்த காலங்களில் நிரூபணமாகியுள்ளது.
மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஒரு கொள்கைவாதி என்பதை கடந்த காலங்களில் பல தடவை, பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துக் காட்டியவர். தனக்கு வரும் துன்பங்களையெல்லாம் சர்வ சாதாரணமாக கையாண்டு வெற்றி கொண்டிருக்கின்றார். இனவாதிகளின்

எரிகணைகளையெல்லாம் தாங்கிக் கொண்டு, தனது விடாமுயற்சியினாலும்
பொறுமையினாலும் எடுத்த காரியத்தை சாதித்துப் பழகியவர். அகதி முகாமில் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து எம்.பியாகி, அமைச்சராகி, கட்சியொன்றின் தலைவராகி, முஸ்லிம்களின் காவலனாகி, செத்துப் போய்க்கொண்டிருக்கும் ஜனநாயகத்தை மீள உயிர்ப்பிப்பதற்காக அலரி மாளிகை வரை சென்று போராடி வரும் உன்னத புருஷர். வட மாகாணத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வெளியேறி
தென்னிலங்கையில் அகதிகளாக சீரழிந்து கொண்டிருந்த போது, 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைச்சர் பதவி வகித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப், அகதி மக்களுக்கு ஆற்றிய பணிகளை நாம் மறப்பதற்கில்லை. புத்தளத்தில் வாழ்ந்த அகதி மக்களுக்கென மர்ஹூம் அஷ்ரப் நாலாம் கட்டையில் ரஹ்மத் நகர் பாடசாலையையும், உளுக்காப்பள்ளம் ஹுசைனியா புரம், அதனை அண்டியுள்ள 25 ஏக்கர் குடியிருப்பு உட்பட சில கிராமங்கள், மர்ஹூம் அஷ்ரப் காலத்தில்
உருவாக்கப்பட்டவை.

அதே போன்று, முன்னாள் அமைச்சர் மர்ஹூம் நூர்தீன் மஷூர், நாகவில்லு – புதிய எருக்கலம்பிட்டி கிராமத்தை அமைத்தார். கரம்பை ஷஃபா மர்வா கிராமம், வேப்பமடு ரஹ்மத் புரம், புத்தளம் தம்பபண்ணி போன்ற கிராமங்கள் முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.எஸ்.எம்.அபூபக்கர் அவர்களினால் உருவாக்கப்பட்டது. இந்த மூன்று முஸ்லிம் தலைவர்களும் வடபுல மக்கள் அகதி முகாம்களில் அனுபவித்த கஷ்டங்களுக்கு விடிவைத் தர ஏக காலத்தில் பாடுபடவர்கள். அகதி மக்களின் நல்வாழ்வுக்காக மர்ஹூம்
அஷ்ரப் பல்வேறு திட்டங்களை செயற்படுத்தியிருந்த போதும், அவர்களது அரசியல் வாழ்வு குறுகியதாக இருந்ததனால் அவர்களால் அந்தத் திட்டங்களை முழுமைப்படுத்த முடியாமல் போய்விட்டது. எனினும், அகதிச் சமூகத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினராகிய ரிஷாட் பதியுதீன், அந்த சமூகத்தின் வலிகளை தனது சொந்த வலிகளென நினைத்து பணிபுரிந்தார். வடபுல முஸ்லிம்களின் வாழ்க்கை நலன் என்று நினைக்கும் போது, ரிஷாட் பதியுதீனின் பணிகளை நினைவு கூறாமல் இருக்க முடியாது.

அந்தளவுக்கு அகதி முஸ்லிம்களின் வாழ்வுடன் அவரது நற்பணி பிண்ணிப்
பிணைந்துள்ளது. அகதி முஸ்லிம்கள் வசதி குறைந்த முகாம்களை விட்டு சொந்தக்
குடியிருப்புக்களில் வாழத்தொடங்கிய போது, அங்கு வாழ்வியல் வசதிகளை மேம்படுத்துவதில் ரிஷாட்டின் பணி பரந்துபட்டுக் காணப்படுகின்றது. கல்வி வசதி கருதி ஆரம்ப, இடைநிலை பாடசாலைகளையும் முன்பள்ளிகளையும் அமைத்தார். ஆசிரியர் பற்றாக்குறை நீங்க ஆயிரக்கணக்கான படித்த இளைஞர், யுவதிகள் ஆசிரியர் நியமனம் பெற உதவினார். முகாம் அதிகாரிகள், சாரதிகள் சிற்றூழியர்கள், சமுர்த்தி உத்தியோகர்தர்கள், கூட்டுறவு உத்தியோகத்தர்கள், சுகாதார தொண்டர் சேவையாளர்கள் மற்றும் இன்னோரன்ன நியமனங்களை அகதி முஸ்லிம்களுக்கு வழங்கினார்.

அவரது அரசியல் வாழ்வில் காலடி எடுத்து வைக்க முன்னர், புத்தளத்தில் மர்ஹூம் அஷ்ரப்பினாலும், வன்னி மாவட்ட பிரதியமைச்சர்களான அபூபக்கர் மற்றும் நூர்தீன் மஷூரினால் ஆக நான்கே நான்கு பாடசாலைகளே ஆரம்பிக்கப்பட்டிருந்தன. புத்தளத்தில் நாலாம் கட்டை ரஹ்மத் நகர் பாடசாலை, நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயம், உளுக்காப்பள்ளம் முஸ்லிம் மகா வித்தியாலயம், கொய்யாவாடி அரபா மகா வித்தியாலயம் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு கல்வி வசதி அளித்தன. இந்த சந்தர்ப்பத்தில் மர்ஹூம்களான அஷ்ரப், நூர்தீன் மஷூர் மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் சுந்தரமூர்த்தி அபூபக்கர் ஆகிய கனவான்களுக்கு அகதிச்
சமூகம் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளது.

ரிஷாட் பதியுதீனுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்த பின்னர், அவர் செய்த சேவைகளில் சிலவற்றை இங்கு பதிவிட்டே ஆகவேண்டும். மாணவர்களின் கல்விக்காக புத்தளம் ரத்மல்யாயவில் அன்சாரி வித்தியாலயம், காஷிமிய்யா முஸ்லிம் வித்தியாலயம், தம்பபண்ணி ஆப்தீன் மகாவித்தியாலயம், கரிக்கட்டை ஹிதாயத் நகரில் ஹிதாயத் நகர் முஸ்லிம் மகா வித்தியாலயம், கரம்பையில் ரிஸ்வான் வித்தியாலயம், 90 ஏக்கரில் ஹஸ்பான் வித்தியாலயம், கல்பிட்டி அல் மனாரில் ஐயூப் வித்தியாலயம், அனுராதபுரத்தில் இக்கிரிக்கொல்லாவ வித்தியாலயம், சாலம்பைக்குளம் வித்தியாலயம் ஆகியவற்றை நிர்மாணித்துக் கொடுத்தார். இதுமட்டுமன்றி அரச மருந்தகங்களை நிர்மாணித்ததுடன் வைத்தியசாலைகளையும் அபிவிருத்தி செய்தார். விதவைகளுக்கான கொடுப்பனவு, திருமணக்கொடுப்பனவு, சுயதொழில் முயற்சியாளர்களுக்கான சுழற்சி முறைக் கடன் வசதி ஆகியவற்றை நடைமுறைப்படுத்தினார். சுய தொழில் வசதியாக இளம் யுவதிகள் தையற்பயிற்சி பெற உதவினார். பயிற்சி பெற்றவர்களுக்கு தையல் மெஷினும் வழங்கினார். கிராமங்களின் உள்ளகக் கட்டமைப்பு வசதிகளைச் செய்ததுடன் தெருக்களையும் அபிவிருத்தி
செய்தார்.

மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது, அகதிகளின் பிரச்சினைகளை ஆய்வு செய்தும் ஒருங்கிணைத்தும் நிவாரணம் பெறுவதற்காக ”வட மாகாண இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கான செயலகம்” ஒன்று அவரின் முயற்சியினால் புத்தளத்தில் அமைக்கப்பட்டது. புத்தளத்தில் இடம்பெயர்ந்த மக்களின் வசதிக்கென புதிய வைத்தியசாலைகள் ரிஷாட்டினால் அமைத்துக் கொடுக்கப்பட்டன. அல் காசிம்மி சிட்டி, ரஹ்மத் நகர், கரம்பை, ஆழங்குடா, 90 ஏக்கர், பாலாவி மற்றும் அநுராதரபுரத்தில்
இக்கிரிகொல்லாவ, சாலம்பைக்குளம் ஆகியவற்றிலேயே புதிய வைத்தியசாலைகள் நிர்மாணிக்கப்பட்டன. அது மட்டுமன்றி சுமார் 500 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டது. சுமார் 170 முகாம் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் தற்போது பல்வேறு அரச நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். அத்துடன் கரம்பையின் 90 ஏக்கரில் அரச காணிகளில் குடியிருந்தோருக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு,
வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டமை அவரின் பாரிய முயற்சிகளே. அரசாங்க உதவியின்றி வெளிநாட்டு நிறுவனங்களினதும் பரோபகாரிகளினதும் உதவியுடனும் புத்தளத்தில் 10000 வீடுகளை ரிஷாட் பதியுதீன் கட்டிக் கொடுத்துள்ளமை, இடம்பெயர்ந்த மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகக் கருத வேண்டும்.

இனவாதிகளினதும் அரசியல் காழ்ப்புணர்வாளர்களினதும் தடைகளுக்கும்,
முட்டுக்கட்டைகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் மத்தியிலேயே, அமைச்சர் இந்த
பணிகளை முன்னெடுத்தார். யுத்தம் முடிந்து வட புலத்திலே அமைதி நிலை ஏற்பட்ட பின்னர், இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேற அவர் மேற்கொண்ட பணிகள்
காலத்தால் அழிக்க முடியாதவை. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகதென்னிலங்கையில் வாழ்ந்த மக்களின் அதிகரித்துள்ள குடும்பங்களின் தொகைக்கேற்ப குடிநிலக்காணிகள் தேவைப்பட்டது. எனவே, ஜானாதிபதி செயலணிக்குழுவின் ஆலோசனைப் படி, அவர் மேற்கொண்ட முயற்சிகளினால் காணி தேவைப்பட்டவர்களுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுத்தார்.

வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டிருந்தது. நாலாம் கட்டையிலிருந்து அரிப்பு, அரிப்பிலிருந்து மறிச்சிக்கட்டி வரையிலான கிராமங்களில் வானோங்கி வளர்ந்திருந்த காடுகளை துப்பரவாக்கும் நடவடிக்கைகளுக்காக அவர் மேற்கொண்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கண்ணி வெடிகளுக்கும் மிதி வெடிகளுக்குமிடையில் காடுகளை துப்பரவாக்க முடியாத நிலையில், அவற்றை மிகவும் கவனமாக அகற்றுவதற்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் எழுத்தில் வடிக்க முடியாதவை. இந்தப் பிரதேசத்தில் காடுகள் துப்பரவாக்கப்பட்டு, அழிந்துபோன ஊர்கள் அடையாளப்படுத்தப்பட்டு, இடிபாடுகள் அகற்றப்பட்டு சீரான பிரதேசமாக அவை உருமாற்றப்பட்ட பின்னரேதான், தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டன. மின்சாரம், நீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அதே போன்று சன்னார், விடத்தல் தீவு, பெரியமடு, தலைமன்னார்,
காக்கையங்குளம் ஆகிய கிராமங்களிலும் இத்தகைய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் சிறிது சிறிதாக மீள்குடியமர்த்தப்பட்டனர்.

கைவிடப்பட்டுக் கிடந்த முஸ்லிம்களின் பூர்வீகக் கிராமங்களில் மாடிக்கட்டிடங்களும், பாடசாலைகளும், புதிய அலுவலங்களும் வெறுமனே வானத்திலிருந்து வந்து குதித்தவை அல்ல. மீளக்குடியேறிய மாணவர்களின் கல்வித் தேவைக்காக, ஒரே தடவையில் 20 பாடசாலைகளை அமைப்பதற்கான அனுமதியை அமைச்சரவையில் பெற்று, மன்னார் மாவட்டத்தில் அந்தப் பாடசாலைகளை அமைத்துக் கொடுத்து சாதனை படைத்தார். அதுமட்டுமின்றி, அதே மாவட்டத்தில் சுமார் 20 பாலர்
பாடசாலைகளை கட்டிக்கொடுத்தார். இதே போன்று வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் புதிய கிராமங்களை அமைத்து, பாடசாலைகளை நிறுவி மாணவர்களின் கல்விக்காக உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார். வன்னி மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக ரிஷாட் இருந்த போதும், அவரது சேவை யாழ்ப்பாண மாவட்டத்திலும் வியாபித்திருந்தது. கன்னி வெடிகளுக்கும், காட்டு
மிருகங்களுக்கும் மத்தியிலே, இரவு – பகல் என்று பாராது, உயிராபத்தையும்
பொருட்படுத்தாது பணியாற்றி இருக்கின்றார். ரிஷாட் அரசியலில் ஈடுபட்ட பின்னர், தொடர்ச்சியாக மேற்கொண்ட பகீரத முயற்சியினாலேயே இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டது என்பதை இங்கு இடித்துரைக்க வேண்டியுள்ளது.

இனவாதிகளினதும் கடும்போக்காளர்களினதும் தடைகள், சூழ்ச்சிகள் சதி முயற்சிகளுக்கு மத்தியிலே, இறைவனை முன்னிறுத்தி அவர் இந்தப் பணிகளை
மேற்கொண்டதனாலேயே, இன்று தென்னிலங்கையில் பல்வேறு பாகங்களில்
சிதறியும் சின்னாபின்னப்பட்டும் வாழ்ந்த வடபுல முஸ்லிம்கள், தமது

மண்ணுக்கு திரும்பி, ஓரளவேனும் நிம்மதியாக வாழும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது என்ற உண்மையை எவரும் மறந்துவிடக் கூடாது. அரசியல் அதிகாரத்தினாலும் சாதூரியத்தினாலுமே அவர் இத்தகைய பணிகளை வெற்றிகரமாக முடித்தார். ஆட்சியின் பங்காளியாக இருந்ததனாலேயே, வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை விரைவு படுத்தும் நோக்கில், தனது கைத்தொழில் அமைச்சுக்குக் கீழே நிதி ஒதுக்கீட்டைப் பெற்று, மீள்குடியேற்ற செயலணியை உருவாக்கி,
மீள்குடியேற்றத்தை முழுமைப்படுத்த பாடுபட்டு வருகின்றார். எனினும், தற்போதைய அரசியல் நெருக்கடி அந்த செயற்பாடுகளுக்கு தற்காலிக தடைக்கல்லாக இருந்த போதும், இறைவன் மீண்டும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நம்பிக்கை எமக்கிருக்கின்றது.

ரிஷாட் வெறுமனே தனது சமூகத்திற்கு மாத்திரம் பணியாற்றுபவரல்ல. மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது, முள்ளிவாய்க்காலில் இருந்து உடுத்த உடையுடன் நிர்க்கதியாகி வந்த 03 இலட்சம் தமிழ் சகோதரர்களை
மீளக்குடியேற்றி, தனது மனிதநேயத்தைக் காட்டியவர். அதன் மூலம் இன நல்லுறவுக்கு பாலம் அமைத்தவர். அகதியக வந்த போதும், இன்னொரு சமூகம் அதே அகதி வாழ்வை அனுபவிக்கக் கூடாதென்பதில் உறுதியாக இருந்து கருமமாற்றியவர். அந்த நன்றிக்காகவே தமிழ் மக்கள் அவரை அரவணைத்து, அவரது அரசியல் நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கின்றனர். தமிழ்ச் சகோதரர்கள் பெரும்பான்மையாக வாழும் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபை, முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபை ஆகியவற்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்தமை, அக்கட்சியின் தலைவர் ரிஷாட்டுக்கு மக்கள் வழங்கிய அங்கீகாரம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

 

 

-முஹம்மட் ரிஸ்வான்-

 

 

 

Related posts

Iran says to release seized British oil tanker ‘soon’

Mohamed Dilsad

தடைசெய்யப்பட்ட பொலித்தீன் பாவனை தொடர்பில் விசேட சோதனை

Mohamed Dilsad

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக மனு

Mohamed Dilsad

Leave a Comment