Trending News

எங்களுக்கு அனுதாப விதவை அரசியல் வேண்டாம் – சர்வதேச மகளிர் தின நிகழ்வில் மட்டு மாவட்ட அரசாங்க அதிபர்

(UDHAYAM, COLOMBO) – எங்களுக்கு அனுதாப அரசியல் வேண்டாம். விதவை அரசியல் வேண்டாம். அரசியலுக்காக துணிவோடு, அர்ப்பணிப்போடு, நேர்மையோடு திட சங்கல்ப்பத்தோடு பங்காற்றுவேன் என்கிற பெண்கள் தான் அரசியலுக்கு வேண்டும் என்று மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்நுட்பக் கல்லூரி அதிபர் ரி.ரவிச்சந்திரன் தலைமையில் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்; இதனைத் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பெண் விடுதலை பற்றியும், சமூகத்தில் பல இடங்கள் பற்றியும் இன்று உலகமெங்கும் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் பெண் விடுதலை என்பது சமூகத்திற்கு எதிரான, எமது கலாசாசரத்திற்கும் பாரம்பரியத்துக்கும் எதிரானதொன்றல்ல என்பதனை பெண் விடுதலை பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

இலங்கை போன்ற ஜனநாயக நாட்டிலே சகல பிரஜைகளும் சம உரிமையும் அந்தஸ்தும் கொண்டுள்ள நாட்டில், அடிமை என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லாத கட்டத்தில் சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற சில ஆதிக்கம் மிக்கவர்களால் பெண்கள் துன்புறுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு மிக அடிப்படைக்காரணமாக பாடசாலையில் எங்களுக்குப் புகட்டப்படுகின்ற பாடங்களில் தமிழ் இலக்கியத்தினை எடுத்துக் கொண்டால் கண்ணகிகை கைவிட்ட கோவலன், பாஞ்சாலியை சபையில் துகிலுரிய விட்ட பாண்டவர்கள், தமயந்தியை காட்டிலே கைவிட்ட நளன், மனைவியையும் மகனையும் கைவிட்ட அரிச்சந்திரன், மனைவியையும் பிள்ளைகளையும் காட்டுக்கு அனுப்பிய ,ராமன், இப்படியெல்லாம் பெண்களை வதைப்படுத்திய காவியங்களைச் சொல்லிக் கொடுத்து, பெண்களை கீழாக்கியும், ஆணாதிக்கத்தை மிகைப்படுத்தியும் காட்டிக் கொண்டிருக்கின்ற சமூகத்தில் பெண்கள் எப்படி தலைநிமிர்ந்து வாழலாம். ஏன் இந்தக் காவியங்கள் எல்லாம் கற்பிக்கப்படுகின்றன என்ற கேள்விக்கு இன்றுவரை யாருக்கும் பதில் தெரியாது. இது அடிப்படையில் அடி மனதிலே புகட்டப்பட்டு வருகின்ற ஒரு அடிமைத்தனமும் ஒரு ஆணிதிக்க முறையும் என்று திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் குறிப்பிட்டார்.

இன்று அரசியலமைப்புத்திருத்தத்தில் 25 வீதமான இடம் பெண்களுக்குத் தேவை என்கிற குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.என்னுடைய தகுதியென்ன, திறமையென்ன, ஆற்றலென்ன என்னுடைய சக்தி என்ன என்று தங்களைத் தாங்களே உணர்ந்து கொண்டு சமூகத்துக்கு முன்னால் தன்னை வளர்த்துக் கொண்டு, நான்தான் இவள் என்று தனக்குத்தானே அடையாளமிடுகின்ற பெண்கள்தான் எங்களுக்கு வேண்டும்.

துணிவோடு, அர்ப்பணிப்போடு, நேர்மையோடு அரசியலல் வேண்டும். அதற்காகத்தான் இந்தப் பெண்கள் சமூகம் மாறவேண்டும். விடுதலைக்கு வீதியில் இறங்கிப்போராடுவதில் அர்த்தமல்ல, விடுதலை என்பது உங்களுடைய மனங்களில் தான் இருக்கிறது. இல்லங்களில் தான் இருக்கிறது. உணர்வுகளில்தான் இருக்கின்றது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு பெண் தான் இந்த உலகத்தினுடைய ஆணி வேர். பெண்கள்தான் குடும்பத்தை, நிர்வகிக்கின்றார்கள். இந்த சக்தி , இந்த ஆத்மீக சக்தி, இந்த ஆளும் சக்தி அத்தனையும் வெளியே வரவேண்டுமென்றால் உங்களை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். உங்களுக்குள்ளே இருக்கின்ற சக்தியைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே அத்தகைய சமூகம் உருவாக வேண்டுமென்றால் நீங்கள் விடுதலை என்ற சொல்லை விட்டுவிட்டு உங்களை நீங்கள் விடுவித்துக் கொண்டு வாழ்வதற்குப் பழகிக் கொள்ளவேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

ஊரடங்குச்சட்டம் அமுலில்

Mohamed Dilsad

பலத்த காற்றுடன் கூடிய மழை

Mohamed Dilsad

Sri Lanka welcomes more Chinese investment

Mohamed Dilsad

Leave a Comment