(UDHAYAM, COLOMBO) – கோட்பாடு மற்றும் செயல்முறை விளக்க அறிவு கொண்ட அரசியல்வாதிகள் இந்த நாட்டுக்குத் தேவைப்பபடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் முன்னிலையில் அனைத்துக்கும் ஆமாம் சாமி போடுகின்ற அரசியல்வாதிகளாக அல்லாமல், அவ்வாறல்ல இவ்வாறு என விடயங்களைச் சுட்டிக்காட்டக்கூடிய இளம் அரசியல்வாதிகளை நாட்டில் உருவாக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
சுதந்திர கட்சியின் அரசியல் துறைசார்ந்த பாடநெறியை போதிப்பதற்கான நிறுவன அங்குரார்ப்பன நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் இளைஞர் முன்னணியினால் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் கலாநிலையத்தைத் நேற்று திறந்துவைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
துதிபாடும் அரசியல் பாரம்பரியத்திற்கு இனிவரும் காலங்களில் இடம்கிடையாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அறிவு மற்றும் சிந்தனையுடன் செயற்படும் அரசியல் இயக்கத்திற்காக இந்த கலாநிலையத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இன்று தூய அரசியல் இயக்கமொன்றைக் கட்டியெழுப்புவதற்குள்ள முக்கிய சவால் அரசியல்வாதிகளுக்கு அனுபவம் இல்லாமையாகும் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, சில நேரங்களில் வீழ்ந்து சில நேரங்களில் எழுந்து முன்னேறிவரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் பயணம் தொடர்பாகக் கட்சியின் அனைத்து அரசியல்வாதிகளிடமும் தெளிவு காணப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
எந்தவொரு ஊழல்வாதியும் வெண்ணிற ஆடையை அணிந்துகொண்டு தேர்தலில் வெற்றிபெற முடிந்திருப்பது விருப்புத்தேர்வு முறைமை காரணமாகவேயாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியல் கட்சிகளின் வீழ்ச்சி மற்றும் தனிநபர் வழிபாடு அரசியல் நிலைமையைச் சரி செய்வதற்கு அறிவையும் தெளிவையும் பெற்றுக்கொடுப்பது அவசியமாகும் எனக் குறிப்பிட்டார்.
அரசியல் நிகழ்ச்சி நிரலைப் பார்கிலும் சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையின் தேசியத்தையும் பாரம்பரியத்தையும் பேணி இலங்கை கலாசாரத்தை மதிக்கும் தேசாபிமானத்துடன்கூடிய அதிகாரத்தின் தேவையை நிறைவேற்றும் வகையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உருவானதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சரியான கொள்கை மற்றும் நிகழ்ச்சித் திட்டத்துடன் கட்சி அன்றும் இன்றும் ஒரு பலமான அரசியல் கட்சியாக முன்னோக்கிப் பயணிப்பதாக குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் வலுவுடன் முன்னெடுத்துச் செல்வதற்கு தூய்மையும் நேர்மையும் கொண்ட ஒர் அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வலுவான ஒரு பாதையில் பயணிப்பதாகவும் கட்சியின் மகளிர் மற்றும் இளைஞர் அமைப்புகள் வெற்றிகரமாகச் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
சரியான கொள்கை மற்றும் நிகழ்ச்சித் திட்டமின்றி ஒரு அரசியல் இயக்கமாக முன்னேறிச் செல்வதற்கு ஒருவராலும் முடியாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, உலகில் எங்குமே இடம்பெறாத அத்தகையதொரு நிகழ்வு எதிர்காலத்திலும் இடம்பெறாது எனக் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் தூய அரசியல்வாதிகளை உருவாக்குவதற்காக இந்த அரசியல் கலாநிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மூன்றுமாத பயிற்சி நெறியின் பின்னர் சர்வதேச தரம்வாய்ந்த சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. கடந்த சில தசாப்த காலமாகப் பேசப்பட்டுவந்த கட்சி வரலாற்றில் நிறைவேற்றப்படாதிருந்த இந்த அரசியல் கலாநிலையத்தை தனது தலைமைத்துவத்தின் கீழ் ஆரம்பிக்கக் கிடைத்திருப்பதையிட்டு ஜனாதிபதி மகிழ்ச்சி வெளியிட்டார்.
அரசியல் கலாநிலையத்திற்குச் சேர்த்துக்கொள்ளப்பட்ட முதல் மூன்று உறுப்பினர்களுக்கான பதிவு அட்டைகளை ஜனாதிபதி வழங்கிவைத்தார். ‘நிதஹஸ்’ என்ற செய்திப் பத்திரிகை இதன் போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, சுசில் பிரேமஜயந்த, பைஸர் முஸ்தபா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார, செயலாளர் எரிக் பிரசன்ன வீரவர்த்தன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.