Trending News

சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார்

(UTV|COLOMBO)  நேற்று (17)  சீன – இலங்கை நட்புறவு தேசிய விசேட வைத்தியாசாலையின் நிர்மாணப்பணிகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  பார்வையிட்டார்.

ஜனாதிபதி மைத்ரிபால 2015 மார்ச் மாதம் சீனாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போது சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் அவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பெறுபேறாக சீன அரசாங்கத்தின் அன்பளிப்பில் இந்த சிறுநீரக வைத்தியாசலை இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

நோய்க்காரணி கண்டறியப்படாத சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நாடெங்கிலுமுள்ள மக்களுக்கு நீண்டகால தேவையாக இருந்த இந்த வைத்தியசாலை தெற்காசியாவில் மிகப்பெரும் சிறுநீரக வைத்தியசாலையாக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலைக்கு 2018 ஜூலை 21ஆம் திகதி ஜனாதிபதி அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டது.

204 படுக்கைகள், 100 குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள், சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கூடம் உள்ளிட்ட நவீன பரிசோதனை வசதிகள் மற்றும் தொழிநுட்ப வசதிகளை கொண்டுள்ள இந்த வைத்தியசாலைக்காக 12 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

நேற்று முற்பகல் அங்கு சென்ற ஜனாதிபதி, வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகளை பார்வையிட்டதுடன், குறித்த நிர்மாணப்பணிகளை மேற்கொண்டுவரும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி அதன் முன்னேற்ற நிலைமைகளை கேட்டறிந்தார்.

வைத்தியசாலையின் கட்டிட நிர்மாணப்பணிகள் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள பணிகளையும் விரைவில் நிறைவு செய்து 2020 ஜூலை மாதம் 30ஆம் திகதி வைத்தியசாலையை பொதுமக்களிடம் கையளிக்க முடியுமென்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை இவ்வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகளை பார்வையிடுவதற்காக அண்மையில் சீன அரசாங்கத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டதுடன், குறித்த திட்டத்திற்கும் நியமங்களுக்கும் அமைவாக இதன் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் உறுதிப்படுத்தியது.

இந்த வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகளை துரிதமாக மேற்கொண்டு சீறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்கு நன்மைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இந்திக்க சம்பத் குமார உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

Related posts

12 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்

Mohamed Dilsad

மஹாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுதலை…

Mohamed Dilsad

மெல்போர்ன் நகரில் தீப்பரவல்! மூச்சுத்திணறலால் மக்கள் வெளியேற்றம்

Mohamed Dilsad

Leave a Comment