Trending News

தடம் புரளும் தர்மத் தேர்

(UTV|COLOMBO) – இலங்கைச் சிறுபான்மை சமூகங்கள் குறிப்பாக முஸ்லிம்கள் தேசப்பற்றிலிருந்து திட்டமிட்டு தூரமாக்கப்படும் சாட்சியங்கள் நாளாந்தம் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன.

போருக்குப் பிறகு கிடைத்த நிம்மதியும் அமைதியும் தேரவாத மேலாண்மையின் வளர்ச்சிப்படிக்கு உதவியுள்ளதையே 2010 லிருந்து அவதானிக்கப்பட்டு வரும் உண்மைகள்.

சிங்கள மொழிக்கும் ஆரியப் பரம்பலுக்கும் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற விடுதலைப் போர் ஆபத்தாகுமென்ற இவர்களின் கவலையைத் தீர்த்து வைத்த பெருமை மஹிந்தவுக்கு மட்டுமே உரியதென்பதும் இவர்களின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடுகளை நிறுத்தி அமைக்கப்படும் புதிய ஆட்சியில் பௌத்தத்திற்கு மாத்திரம் முன்னிலை வழங்கி ஏனைய கலாசாரங்களை குறிப்பாக இஸ்லாமிய கலாசாரத்தை மட்டுப்படுத்தி, மலினப் படுத்துவதே இவர்களின் நோக்கம்.

ஜப்பான், சீனா, தாய்வான், திபெத் உள்ளிட்ட தேரவாத நாடுகளில் பௌத்தம் சவாலுக்குள்ளானதில்லை. இனிமேல் இலங்கையிலும் இந்தச் சவாலில்லாத நிலையை ஏற்படுத்தவே தேரவாத மேலாண்மை காலூன்றியுள்ளது. இவர்களின் விரிவான வேலைத்திட்டத்துக்கு இலங்கையின், சமாதானக் கள நிலவரமும் விரிந்து கொடுத்துள்ளது.

ஒரு காலத்தில் தென்னிலங்கைக்கு மட்டும் உரித்தாக்கப்பட்டதேரவாத சித்தாந்தம் பரந்த நிலத்தில் வேரூன்றப் பங்களித்த பெருமைக்குச் சொந்தக்கார்களை மீண்டும் ஆட்சிக்குத் தேர்ந்தெடுப்பதே இவர்களின் திட்டம். அனைத்தையும் சாதிக்கச் சாத்தியமான இவர்களின் விம்பத்தை வியூகத்தின் அடிப்படையில் ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் இவர்களிடமுள்ளன.

மதங்களுக்கு எதிரான குரோதத்தை வளர்த்து பழைய ஆட்சியாளர்களின் பெருமைகளை பெயர் கூறாமல் உச்சரிப்பதூடாக தேரவாதத்துக்குப் பொருத்தமான அரசை ஏற்படுத்தும் மேலாண்மைக் கனவு தெற்கு அரசியல்வானில் மிக நீண்ட காலமாக கலைக்கப் படாதிருந்தது. எனினும் ஈஸ்டர் தினத் தாக்குதல்களுக்குப் பின்னரே இவர்கள் ஈசல்கள் போலப் புறப் பட்டுள்ளனர். இந்த தேரவாதத்துக்குப் பக்கபலமாக உள்ளோரை முஸ்லிம்கள் அடையாளம் கண்டு கொள்வது காலத்தின் தேவையாகும். தமிழ்,சிங்கள சமூகங்களின் சமய நம்பிக்கைகள் சிந்தனைகளால் வேறுபட்டவையல்ல.

மொழி வேறுபாடுகள் ஒரு காலத்தில் இணைந்தாலும் கலாசார முரண்பாடு கள் இணையச் சாத்தியமில்லை. இந்த வேறுபாட்டை வேரூன்றச் செய்து முஸ்லிம்களை தனிமைப் படுத்துதல்,தமிழர்களை கலாசார ரீதியாக உள்ளீர்த்தல், தெற்கிலுள்ள முஸ்லிம்களை உள ரீதியாக அச்சுறுத்துதல் உள்ளிட்ட பல இரகசிய திட்டங்களின் ஒட்டு மொத்த முதலீடுகளும் வெவ்வேறு வடிவங்களில் வைப்பிலிடப்படவுள்ளன.

சிறுபான்மைச் சமூகங்களை அரசியல் ரீதியகாப் பிளவுபடுத்தும் பௌத்த மேலாண்மை அரசுகளின் தந்திரங்கள் போருக்குப் பின்னர் பெரிதாகப் பலிக்கவில்லை.

உரிமை அரசியல் மக்களிடமிருந்து படிப்படியாக தூரமாவதால் சிறுபான்மைச் சமூகங்களை வேறு வடிவில் பிளவுபடுத்தும் தந்திரங்களையே தெற்குக் கடும்போக்கு களமிறக்கவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியைக் கலப்பினக் கொள்கையின் இருப்பிடமாக் காட்டிவிட்டால் சிங்கள ராஜ்யம் அமைவதில் ஆசையுள்ள சிங்களவர்களை வேறுபக்கம் திருப்பிவிடலாம். இத்திரும்பலுக்கான நியாயத்தை கலாசாரத்தைக் காக்கும் தர்மமப் போராகக் கருதுவதற்கான மூளைச் சலவைகளையே தற்போது தேரவாதம் செய்து வருகிறது. இதுமட்டுமல்ல முஸ்லிம் சமூகத்திலுள்ள சமயக் கூறுகளும் இவர்களுக்கு வாய்ப்பாகிப் போயுள்ளதே பெரும் கவலை.

இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் பிளவை ஏற்படுத்துவதில் தோற்றுப்போன சில சியோனிச சக்திகள்,கோட்பாடுகளைப் பின்பற்றும் நடைமுறைக் கொள்கைகளில் முரண்பாடுகளை ஏற்படுத்தி வெற்றியும் கண்டுள்ளமை இஸ்லாமிய வரலாற்றில் விழுந்த ஒரு வடுவாகும்.

வஹாபிசம், சூபிசம், சலபி முஸ்லிம்கள், தப்லீக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, தௌஹீத் ஜமாஅத் இவை அனைத்தும் இஸ்லாமிய சித்தாந்தத்தை பிசகின்றி ஏற்றுள்ள போதும் கொள்கைகளில் முரண்பட்டுள் ளன. இந்தக் கொள்கைகளில் தமக்குப் பிடித்தவை மட்டுமே இலங்கையில் இருக்க வேண்டுமென, தேரவாதம் தூக்கிப்பிடிப்பது, பௌத்தத்தின் விழுமியங்களுக்கு வலுவூட்டுவதற்காகவா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சமயங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்பட்டாலும் நல்லிணக்கம் ஏற்பட முடியாது என்பதே எனது கருத்து. நல்லிணக்கம் ஏற்பட்டிருந்தால் ஒருமித்தல் வந்திருக்கும் இவ்வாறு ஒருமித்திருந்தால் ஒரு மதமே இருந்திருக்கும். எனவே உலகிலுள்ள மதங்களின் கோட்பாடுகள் பற்றி பிற மதங்கள், மதத் தலைவர்கள் புரிந்துணர்வுடன் செயற்படுவதே, அமைதிக்கு வழிகோலும்.இதைவிடுத்து சமயங்களின் உட்பிளவுகளை பிற சமயத்தவர் தூற்றுவது, சந்தேகிப்பது தனி மனிதனின் சிந்தனையை அச்சுறுத்துவதாகவே கருதப்படும்.

இந்த அச்சுறுத்தலுக்கான ஆரம்பமாகவே கண்டியில் நடந்த போகம்பரை மைதானத் தீர்மானங்கள் உள்ளன. 1950 ஆம் ஆண்டு சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆனையே பின்பற்ற வேண்டுமென ஆலோசனை கூறப்பட்டுள்ளதையும் கருத்துத் திணிப்பாகவே கொள்ள வேண்டியுள்ளது. முஸ்லிம்களின் வேத நூலான குர்ஆனுக்குப் பொருள் தேடுவது அரபு மொழிப்  புலமையுள்ளோராலும் பூரணமாக முடியாது. ஒரு வசனம் அருளப்பட்ட பின்னணி, காலச்சூழல், இடம் என்பவையும் அதற்கான பொருளைப் பெறுவதில் பங்காற்றுகிறது. முஸ்லிம்களின் கிப்லாவாக (தொழும் திசை) ஆரம்பத்தில் ஜெரூசலத்திலுள்ள பைத்துல் முகத்தஸ் இருந்தது. பின்னர் மக்காவிலுள்ள கஹ்பாவே தொழும் திசையானது. ஆரம்பத்தில் விசுவாசிகளில்லாதோரையும் திருமணம் முடிக்க முஸ்லிம்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னரே அது தடுக்கபப்பட்டது. சில வேளைகளில் குர்ஆன் வசனங்களுக்கு பொருள் காண முடியாது போனால் இறைதூதரின் வழிகாட்டல்களிலும் தௌிவுகள் பெறப்படுகின்றன.

இஸ்லாத்தின் இலட்சியம் மாறாமல் காலவோட்டத்துக்கு ஏற்ப முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நெகிழ்வுப்போக்கையே இது காட்டுகிறது. இற்றைக்கு 1500 வருடங்களுக்கு முன்னரே இஸ்லாம் வழங்கிய கருத்து, சிந்தனை சுதந்திரங்களே இவை. எனவே நவீன கருத்தியல் விளக்கங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் குர்ஆன் வசனங்களில் பொருள் தேடப்படுவது உலகமுள்ள வரைக்கும் இருக்கப்போகிறது. இந்த நியதியில் 1950 ஆம் ஆண்டின் மொழிபெயர்ப்பை வைத்துக் கொண்டு  59 வருடங்களுக்குப் பின்னர் வரப்போகும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது எப்படி என்பதை போகம்பரை மாநாடு தௌிவுபடுத்த வேண்டும்.

– சுஐப் எம் காசிம்-

Related posts

தற்கொலைக்கு முயன்றாரா மைக்கேல் ஜாக்சன் மகள்? இதுதான் காரணமா?

Mohamed Dilsad

Letter distribution recommences

Mohamed Dilsad

LSE wins Markets Choice Awards for Best Global Exchange Group

Mohamed Dilsad

Leave a Comment