(UTVNEWS | COLOMBO) – ஆப்கன் தலைநகர் காபூலில், ஷாஷ் தரக் என்ற இடத்தில் நேற்று(05) நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த தாக்குதலை தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
முன்னதாக, காபூல் நகரில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் அங்கு தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக கட்டார் தலைநகர் தோஹாவில் அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில், விரைவில் உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற இந்நிலையில் தலிபான்கள் நடத்தி வரும் இத்தகைய தாக்குதல் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.