(UTV|COLOMBO) – அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் எரியும் காட்டுத்தீ காரணமாக 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிவேகமாக பரவிய காட்டுத்தீயால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளும் பாதிக்கப்பட்டன. காட்டுத்தீ காரணமாக அப்பகுதியில் 5,000 ஏக்கர் அளவிலான காடுகள் தீக்கிரையாகின.
தீயை அணைக்க தீயணைப்பு படை வீரரகளும், மீட்புப்படையினரும் போராடி வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட வீரர்கள் ஹெலிகாப்டர்கள், ஏர் டேங்கர்கள் முயற்சியோடு தீயை அணைத்து வருகின்றனர்.
கடுமையான சூறைக் காற்று, அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த ஈரப்பதம் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டு வேகமாக பரவியுள்ளது. இதுவரை உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், வடக்கு கலிபோர்னியா பகுதியில் உள்ள ஒயின் கண்ட்ரி பகுதியில் காட்டுத்தீ பரவியதன் காரணமாக அப்பகுதியில் உள்ள 2,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரவிடப்பட்டனர். சில நூறு ஏக்கர்களில் பற்றிய காட்டுத்தீ, 16,000 ஏக்கர்கள் அளவிற்கு பரவியுள்ளதாக அப்பகுதி அதிகாரிகள் தெரிவித்தனர்.
லாஸ் ஏஞ்சல்ஸுக்கு கிழக்கே 60 மைல் தொலைவில் உள்ள சான் பெர்னார்டினோ கவுண்டியில் ஏற்பட்ட மற்றொரு காட்டுத்தீ காரணமாக 75 ஏக்கர் அளவிலான பகுதிகள் எரிந்து நாசமாகின. மேலும் அங்குள்ள மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மலைப்பகுதிகளில் வசித்து வந்த சுமார் 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.