(UTV|COLOMBO) – உலக பாரம்பரியத்தைக் கொண்டதும் ஜப்பானின் 600 ஆண்டுகள் பழமையானதும் அந்நாட்டு மக்களால் மதிக்கப்பட்டு வந்ததுமான ஷூரி அரண்மனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
தெற்கு ஜப்பானிய தீவான ஒகினாவாவில் உள்ள குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரண்மனையிலேயே இந்த தீ பரவியுள்ளது.
இத்தீவிபத்தில் உயிர்ச்சேதம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. அருகில் குடியிருந்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
தீயணைப்பு குழுவினர் பல மணிநேரம் போராடி தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இவ்வாறு தீ பரவிய அரண்மனையான ஷூரி அரண்மனை யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.