Trending News

சாய்ந்தமருது பள்ளிவாசல் தனது முடிவை மாற்றி அறிக்கையிட முன்வர வேண்டும்

(UTV|COLOMBO) – இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையையும் சுய கெளரவத்தினையும் பலப்படுத்த சாய்ந்தமருது பள்ளிவாசல் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எடுத்துள்ள முடிவினை மாற்றி மீள் அறிக்கையிட முன்வரவேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் பகிரங்க அழைப்பு விடுத்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும் நெடா நிறுவனத்தின் தவிசாளருமான சிறாஸ் மீராசாஹிப் தலைமையில் புதன் கிழமை மாலை (13) சாய்ந்தமருது சிறுவர் பூங்கா வளாகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். இந்த தேர்தல் நமது உயிர், சொத்துக்கள், இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் இந்த சமூகத்தின் எதிர்கால இருப்பை பாதுகாப்பதற்கானதொரு தேர்தலாகும். பர்மா போன்ற நாடுகளில் முஸ்லிம்களுக்கு நடக்கின்ற அநியாயங்கள் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு நடந்தால் செல்வந்தர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து விடுவார்கள். நமது சமூகத்தின் சிறுவர் , சிறுமியர்களின் நிலை என்னவாகும்? என கேள்வி எழுப்பினார்.

நாம் பேரினவாதிகளின் அடிமைகளாகவும் கோலைகளாகவும் வாழ்வதா? இல்லை, நமது சமூகம் தன்மானத்தோடு வாழ்வதா? என்பதை நீங்கள் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம். ஆதலால் நகர சபையோ பாராளுமன்ற பிரதிநிதித்துவமோ நமது இருப்பும் பாதுகாப்பும் உறுதிப்பட்டுள்ள ஒரு நாட்டில் வாழ்ந்தால்தான் அவற்றை நாம் அனுபவிக்க முடியும். நாம் இந்த தேர்தலில் இனவாதிகளின் கூட்டணிக்கு வாக்களித்தால் நமது அத்தனை சுதந்திரமும் பறிபோய்விடும் அபாயமுள்ளது.

இந்த தேர்தலில் சாய்ந்தமருது மக்கள் விளையாடிவிடாதீர்கள். சாய்ந்தமருது சுயேச்சைக்குழுவினர் கோதபாய ராஜபக்‌ஷவை ஆதரிக்க எடுத்த முடிவானது தவறானது. சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நியாயமானது அதனையும் நாங்கள் சஜித் பிரேமதாசவிடம் எடுத்துக் கூறியுள்ளோம். நான்
சஜித் பிரேமதாசவிடம் நகரசபை விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கி தருகிறேன் என பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கேட்டேன். ஆனால் அவர்கள் ஒருதலைப்பட்சமாக கோதபாய ராஜபக்‌ஷவை ஆதரிக்க ஒப்பந்தம் செய்த செய்தி கேட்டு கவலையடைந்தேன்.

சாய்ந்தமருது பள்ளிவாசல் எங்களை கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவினரது தேர்தலில் தலையிட வேண்டாம் என கோரியிருந்தனர். அதனை நாங்கள் மதித்தோம் . நாங்கள் இன்றும் கூட பள்ளிவாசல் நிர்வாத்தினரை மதிக்கின்றோம். இந்த உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுக்கொள்ளும் பணியில் என்னாலான பணிகளை சாய்ந்தமருதூர் பள்ளிவாசலுக்காக செய்து கொடுத்துள்ளேன்.

சாய்ந்தமருது பள்ளிவாசல் எடுத்த தவறான முடிவினை இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் ஒருபொழுதும் மன்னிக்கமாட்டார்கள். இனவாத கும்பல் ஆட்சிக்கு வந்தால் இந்த நாடே நாசமாகிவிடும். நமது பெண்கள் பாதைகளிலே நடமாட முடியாது. நமது பொருளாதாரம், சொத்துக்கள், நமது பிள்ளைகள் நிம்மதியாக வாழ முடியாது.

அமைச்சர் ரவூப் ஹக்கீமும் நானும் இந்த நாட்டின் மூலை முடுக்குகளெல்லாம் அலைந்து திரிகின்றோம். எதற்காக என்றால் நாளை நமது சமுதாயம் நிர்க்கதியான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் ஆகும்.

இந்த ஜனாதிபதித் தேர்தல் ஒரு சாதாரண தேர்தலல்ல. சிறுபான்மை முஸ்லிம்களாகிய நாம் நிம்மதியாக, சமாதானமாக, பிற சமூகங்களுடன் சகோதரத்துவமாக வாழ்வதற்கும், நமது தொழில், மதக் கடமைகள் என அத்தனை விடயங்களினையும் சுதந்திரமாக செய்வதற்குமானதொரு தேர்தலாகப் பார்க்கப்பட வேண்டும்.

இந்த பேரினவாத சக்திகள் தான் இந்த நாட்டிலே இனவாதத்தை, மதவாதத்தை தோற்றுவித்து இந்த நாட்டை குட்டிச்சுவராக்கி சுமார் 1200 வருடங்களாக இந்த நாட்டில் ஒற்றுமையாக, சமாதானமாக ஜனநாயகத்தை நம்பி வாழ்ந்த நமது சமூகத்தை நிர்க்கதி நிலைக்கு தள்ளியுள்ளார்கள்.

அநியாயமாக கடந்த 10 வருடங்களாக நமது நிம்மதியை சீர்குலைத்து, நமது இதயங்களில் நிலையூன்றியுள்ள அல்லாஹ்வின் மாளிகைகளை இடித்து, சேதப்படுத்தி, அட்டகாசம் புரிந்து, நமது வர்த்தக நிலையங்களை தீ வைத்து, அத்தனை விடயங்களினையும் அரங்கேற்றியது இந்த இனவாத கும்பல் தான் என்பது நாடறிந்த உண்மையாகும்.

கடந்த ஏப்ரல் 21 க்கு பிறகு மினுவான்கொட மற்றும் கெட்டிப்பொல போன்ற பிரதேசங்களில் நமது சகோதரர்களின் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. இந்த நாசகார கும்பல் மூன்று வாரங்கள் திட்டமிட்டு இதனை செய்தார்கள். சுமார் 300 காடையர்களை இந்த அரசாங்கம் கைது செய்தது. இதில் 14 பேர் பிரதேச சபை உறுப்பினர்களும் வேட்பாளர்களாகவும் போட்டியிட்டவர்களாகும். இவர்கள் அனைவரும் மொட்டு கட்சியினராகும். இவர்களை இந்த அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

தம்புள்ளையில் ஆரம்பித்து கிராண்ட்பாஸ் என்று வியாபித்து நோலிமிற், பெஷன்பக் போன்ற வியாபார ஸ்தாபனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த தேர்தலில் ஒரு வாக்கையேனும் வீணாக்கிவிடாதீர்கள். சஜித் பிரேமதாசவினை தோற்கடித்து விடாதீர்கள். நமது இருப்பு பாதுகாக்கப்பட வேண்டுமானால் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழ வேண்டுமானால் இந்த பிரதேச முஸ்லிம்கள் 90% மேல் சஜித்தை ஆதரிக்கவேண்டும்.

அற்ப சொற்ப சலுகைகளுக்காக ஆசை வார்த்தைகளுக்காக நீங்கள் உங்களது வாக்குகளை பயனற்றதாக்கிவிடாதீர்கள். நகர சபை அல்லது பிரதேச சபை பெற்றுதருவோம் என உங்களிடம் வந்து பொய் வாக்குறுதிகளை விதைப்பார்கள். ஆனால் அண்மையில் இந்த சுயேச் சைக்குழுவினர் மஹிந்த ராஜபக்‌ஷவின் மொட்டு கட்சியினை ஆதரிக்க எடுத்த முடிவினையிட்டு கவலையடைகிறோம்.

கடந்த அரசாங்கத்தில் நாங்கள் அங்கத்தவர்களாக இருந்தோம் என்பதற்காக நாங்கள் வாய்மூடி மெளனிகளாக இருந்தோம் என்பதல்ல. எங்களது குரல்கள் நசுக்கப்பட்டன. இந்த அரசாங்கத்தில் ஓரளவாவது நமது பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கண்டோம். இந்த தேர்தலில் உங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக இந்த சமூகத்தின் பாதுகாப்பை கொச்சைப்படுத்திவிடாதீர்கள் என கேட்டுக்கொண்டார்.

Related posts

சிரியா பள்ளிவாசல் மீது அமெரிக்கப் படை வான் தாக்குதல்!! 40-க்கும் அதிகமானோர் பலி – [VIDEO]

Mohamed Dilsad

Traffic on Kaduwela-Colombo Road Restricted on 27th

Mohamed Dilsad

நியாயமான விலைக்கு விவசாயிகளிடமிருந்து கிழங்குகளை பெற்றுக்கொள்ள சதொச ஆயத்தம்

Mohamed Dilsad

Leave a Comment