(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் கட்சி சார்பில் பிரேரிக்கப்படும் பட்சத்தில் 25 இலட்சம் ரூபா கட்டுப்பணமும் சுயேட்சை வேட்பாளராயின் 30 இலட்சம் கட்டுப்பணமும் செலுத்தும் வகையில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப்பிரிவு பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
10 வருடங்களுக்கு மேல் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாயின் முன்வைக்கப்பட்டுள்ள கட்டுப்பணத்தில் நான்கில் ஒரு பங்கை செலுத்துவது போதுமானதாக அமையும் எனவும் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
புதிய திட்டத்திற்கு அமைய பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் 5,000 ரூபா கட்டுப்பணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் பிரேரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொதுத் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் 7,500 ரூபா கட்டுப்பணம் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.