(UTV|COLOMBO) – நேபாளத்தில் இடம்பெற்றுவரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான டைக்கொண்டோ போட்டியில் ரனுக்க பிரபாத் இலங்கை சார்பில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றதோடு இரட்டையர் பிரிவிலும் மற்றொரு தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
நேபாளத்தின் மூன்று நகரங்களில் இடம்பெற்று வரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று(02) பல பதக்கங்களுக்கான போட்டிகளும் நடைபெற்றன. இதில் காத்மண்டு நகரில் நடைபெற்ற டைக்கொண்டோ போட்டியில் இலங்கை சார்பில் ஆண்களுக்கான 17–23 வயதுப் பிரிவின் பூம்சே போட்டியில் பங்கேற்ற ரனுக்க பிரபாத் தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் வெற்றியீட்டினார்.
இந்நிலையில் இரட்டையர் பிரிவின் டைக்கொண்டோ பூம்சே போட்டியில் ரனுக்க பிரபாத் மற்றும் இசுரு மெண்டிஸ் தங்கப் பதக்கத்தை வென்றனர்.
இதேவேளை ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு கராத்தே போட்டியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் வெண்கலப் பதக்கம் வென்றார்.
மறுபுறம் டைகொண்டோ போட்டிகளில் இலங்கை மேலும் மூன்று வெள்ளிப் பதக்கங்களை வென்றது. 29 வயதுக்கு மேற்பட்ட பூம்சே ஆடவர் ஒற்றையர் பிரிவு, 23 மற்றும் 29 வயதுக்கு இடைப்பட்ட பூம்சே இரட்டையர் பிரிவு மற்றும் மகளிர் ஒற்றையர் பூம்சே போட்டிகளிலும் இலங்கை வெள்ளிப் பதக்கம் வென்றது.
தவிர, டைக்கொண்டோ போட்டிகளில் இலங்கை மேலும் நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்றது.
இதேவேளை நேற்று ஆரம்பமான கராத்தே போட்டிகளிலும் இலங்கை வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை அள்ளியது. ஆண்களுக்கான குழுநிலை காடா போட்டியில் இலங்கையின் எல்.பி. ஹேரத், டீ.ஜி. தயானந்த மற்றும் வர்ணகுலசூரிய இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் இறுதிப் போட்டியில் நேபாளத்திடம் தோல்வியை சந்தித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
கராத்தே காடா பெண்கள் குழுநிலை பிரிவில் இலங்கை வெண்கலப் பதக்கம் வென்றதோடு பெண்களுக்கான தனிநபர் பிரிவில் ஹேசானி ஹெட்டியாரச்சி வெண்கலப் பதக்கம் வென்றார்.
இலங்கை ஆடவர் கரப்பந்தாட்ட அணியின் மூன்றாம் இடத்திற்கான போட்டியும் நேற்று நடைபெற்றது. இதில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை ஆடவர் அணி 3-1 என்ற கணக்கில் வெற்றியீட்டி வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தது. இதன்போது முதல் சுற்றில் 25–23 என பின்தங்கிய இலங்கை வீரர்கள் அடுத்த மூன்று சுற்றுகளையும் 25–23, 25–16 மற்றும் 25–16 என வென்றமை குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் வெண்கலப் பதக்கத்திற்கான பெண்கள் கரப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை மகளிர் அணி மாலைதீவை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்தது.
இலங்கையின் பதக்க எதிர்பார்ப்புகளில் ஒன்றான பெண்களுக்கான ரி-20 போட்டிகள் நேற்று ஆரம்பமாகின. லீக் அடிப்படையில் நடைபெறும் முதல் சுற்றுப் போட்டியில் நேற்று நேபாள மற்றும் மாலைதீவு அணிகள் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய மாலைதீவு 16 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்போது நேபாள பந்துவீச்சாளர் அஞ்சலி சாந்த் ஓட்டங்கள் விட்டுக்கொடுக்காமல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
பதிலெடுத்தாடிய நேபாள அணி 5 பந்துகளில் வெற்றி இலக்கான 17 ஓட்டங்களை எட்டியது. இலங்கை கிரிக்கெட் அணி இன்று தனது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. மறுபுறம் ஆண்களுக்கான ரி-20 போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இதில் இலங்கை 23 வயதுக்கு உட்பட்ட அணி நேபாள அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த தொடரில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஷ் 23 வயதுக்கு உட்பட்ட அணிகளே பங்கேற்பதோடு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கவில்லை.
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் மெய்வல்லுநர் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. இதில் எட்டுப் பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டி இன்று நடைபெறுள்ளன.
100 மீற்றர் ஓட்டப் போட்டிகளின் ஆடவர் பிரிவில் ஹிமேஷ ஏஷான் மற்றும் வினோஜ் சுரஞ்சய பங்கேற்கின்றனர். அதேபோன்று பெண்களுக்கான 100 மீற்றர் போட்டிகளில் டபிள்யூ.வி.சுரன்தி மற்றும் அமாஷா டி சில்வா பங்கேற்கின்றனர்.
இதன்படி இலங்கை இரண்டு தங்கங்கள், 4 வெள்ளி மற்றும் 8 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.
எனினும் போட்டியை நடத்தும் நேபாளம் 9 தங்கங்களை வென்று முதலிடத்திலும் இந்தியா 2 தங்கம் மற்றும் 6 வெள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
எம்.எஸ்.எம்.பிர்தௌஸ்