(UTV|COLOMBO) – எதிர்வரும் பண்டிகையை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் வசதி கருதி, இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு இதுதொடர்பாக தெரிவிக்கையில், 26ம் திகதி தொடக்கம் ஜனவரி 1ம் திகதி வரை இலங்கைபோக்குவரத்துச் சபையின் பஸ் சாரதிகள், நடத்துனர்கள் ஆகியோரின் விடுமுறைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில், அனைத்துப் பிரதேசங்களுக்கும் மேலதிக பஸ்சேவைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேக வீதியின் மாகும்புர, கொட்டாவை, கடவத்தை, கடுவலை, மாத்தறை, காலி, நீர்க்கொழும்பு நுழைவுகளின் ஊடாக பண்டிகை காலப்பகுதியில் அதிகபட்ச பஸ் சேவையைப் பயன்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு கோட்டையில் இருந்து கண்டிக்கு இடையில் 23ம் திகதிவரை விசேட ரயில் சேவைகளும் பதுளை -கொழும்புக்கு இடையில், 24ம் 27ம் மற்றும் 29ம் திகதிகளில் விசேட ரயில் சேவைகள் இடம்பெறும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.