(UDHAYAM, COLOMBO) – 2 ஆண்டுகளுக்கான மத்திய வீரர்கள் ஒப்பந்தம் வழங்குவதன் மூலம் ஐபிஎல் கிரிக்கட்டை தேர்வு செய்யும் அவுஸ்திரேலிய வீரர்களை மனம் மாற்ற அவுஸ்திரேலிய கிரிக்கட் வாரியம் முயற்சி மேற்கொண்டது.
இது தொடர்பாக சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, கிரிக்கட் அவுஸ்திரேலியாவின் செயல் பொதுமேலாலர் பேட் ஹோவர்ட் அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர்கள் வாரியத்தை அணுகியுள்ளார்.
ஏற்கெனவே அவுஸ்திரேலிய வீரர்கள் வாரியத்திற்கும், கிரிக்கட் அவுஸ்திரேலியாவுக்கும் வேறுபாடுகள் தோன்றியிருந்த நிலையில் வீரர்களுக்கு 2 ஆண்டுகள் ஒப்பந்தம் என்ற புதிய உத்தியை பேட் ஹோவர்ட் முன்மொழிந்துள்ளார்.
டெஸ்ட் தலைவர் ஸ்மித், துணைத்தலைவர் டேவிட் வார்னர், மற்றும் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், பேட் கமின்ஸ் உள்ளிட்டோருக்கு இந்த 2 ஆண்டுகால ஒப்பந்த முறையை முன்மொழிந்துள்ளார், ஆனால் வீரர்களிடமிருந்து இதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்று கூறுகிறது அந்தச் செய்தி.
அதிகாரபூர்வமாக அல்லாமல் வீரர்களிடம் இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டதாகவும் வீரர்கள் இதற்கு ஆர்வம் காட்டவில்லை என்றும் தெரிகிறது.
ஐபிஎல் கிரிக்கட்டை ஆடாமல் இருக்க வேண்டுமெனில் 3 ஆண்டுகால ஒப்பந்தம் தேவை அப்போதுதான் ஐபிஎல் வருவாயை ஓரளவுக்காவது ஈடுகட்ட முடியும் என்று வீரர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஐபிஎல் அணி உரிமையாளர்களிடமிருந்து ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் ஆண்டொன்றுக்கு 1 மில்லியன் டொலர்கள் வருவாய் பெறுகின்றனர்.
மேலும் தற்போது ஐபிஎல் தொடரின் புதிய ஒளிபரப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது வருமானம் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது ஐபிஎல் வீரர்கள் வருவாய் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கட் அவுஸ்திரேலியாவிலிருந்து வார்னருக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆண்டொன்றுக்கு வருவாய் கிடைக்குமென்றால் அடுத்த 3ஆண்டுகளில் ஐபிஎல் தொடர் மூலம் மட்டுமே வார்னர் 10 மில்லியன் டொலர்கள் வரை வருவாய் ஈட்டுவார்.
ஐபிஎல் கிரிக்கட் மூலம் முக்கிய வீரர்கள் முக்கிய சர்வதேச தொடருக்கு முன்பாக காயமடைவதைத் தவிர்க்கவே கிரிக்கட் அவுஸ்திரேலியா இந்த மாற்று ஒப்பந்தத்தை முன்மொழிந்ததாக கிரிக்கட் அவுஸ்திரேலியா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.