(UDHAYAM, COLOMBO) – சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் தொடர்பாக அரசாங்கத்திற்கு விசேட பொறுப்பு காணப்படுவதுடன், அதற்கு அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பும் அத்தியாவசியமானதாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலைக் கருத்திற் கொள்ளாமலும், இயற்கை தொடர்பான ஆழமான உணர்வின்றி வாழ்வதன் மூலமுமான மோசமான நேரடி விளைவுகளை நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். உயிர்ப் பல்வகைமையின் தாயகமாகக் காணப்பட்ட எமது நாடு அந்தப் பல்வகைமையின் செழுமை, பெறுமதி மற்றும் அழகினை இழந்து வருவது கவலைக்குரிய விடயமாகும். எல்லையற்ற ஆசைகள் மற்றும் சுயநலம் காரணமாக மேற்கொள்ளப்படும் மனித செயற்பாடுகளினால் இயற்கையின் சமநிலைத்தன்மை அற்றுப் போய் அதன் மொத்த இருப்பும் பிரச்சினைக்குரியதாக மாற்றப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுடன் ஒன்றிணைந்து வாழ்ந்த எமது வாழ்க்கை ஒழுங்குகள் மாற்றமடைந்தமை மற்றும் மாறிச் செல்லும் உலகில் முன்னேற்றத்தை தேடிச் செல்லும்போது இயற்கையினை கருத்திற் கொள்ளாமை என்பன இந்த துரதிஷ்டவசமான நிலைமை உருவாவதற்கு காரணமாகும். இவ்வாறான துன்பியல் நிலைமைகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் தொடர்பாக அரசாங்கத்திற்கு விசேட பொறுப்பு காணப்படுவதுடன், அதற்கு அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பும் அத்தியாவசியமானதாகும்.
மானிட இருப்புக்கும் உலகின் இருப்புக்கும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதன் முக்கியத்துவம் தொடர்பாக தெளிவான புரிதலுடனும், பொறுப்புடனும் நாம் இன்று செயற்படாவிடின் அது மிகவும் மோசமாகவும், அழிவினை ஏற்படுத்தக் கூடியதாகவும் எமது எதிர்காலத்தை ஆக்கிரமித்து விடும்.
உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் இயற்கை மீதான அன்பு, கௌரவம் மற்றும் அதன் மீதான கவனம் என்பவற்றை நாளாந்த வாழ்வின் ஓர் பகுதியாக மாற்றிக் கொள்ள அனைத்து இலங்கையருக்கும் அழைப்பு விடுக்கிறேன். சுற்றுச்சூழல் நேயத்தினை ஓர் நாளுடன் மாத்திரம் சுருக்கிக் கொள்ளாது அதனை வாழ்க்கை ஒழுங்காக மாற்றிக் கொள்வது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.
ரணில் விக்கிரமசிங்க
பிரதம அமைச்சர்
- 06. 04