Trending News

ஞானசாரரை உருவாக்கியது யார்? ஐ தே க தலைவர் ரணிலிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் -விஜேசிறிக்கு அமைச்சர் ரிஷாட் சாட்டை

 

(UDHAYAM, COLOMBO) – பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரரை உருவாக்கியது யார்? என்று தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

”ஞானசார தேரர் உருவாகுவதற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனே காரணம்” என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்திருக்கும் கூற்றுத் தொடர்பில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

2014 ஆம் ஆண்டு வில்பத்துக் காட்டை அழித்து முஸ்லிம்களை அமைச்சர் ரிஷாட் குடியேற்றியதனாலேயே ஞானசார தேரர் உருவாகினார் என்று பொருப்பற்ற வகையில் கூறியிருக்கும் கருத்து எல்லோரையும் முட்டாளாக்கும் செயல் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

20 வருடங்களாக எதிர்க்கட்சியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியை முஸ்லிம்கள் ஆட்சிக்குக் கொண்டு வந்து, தங்களது தலைவரை பிரதமராக்கியதற்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடனும் கைமாறுமா இது? என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒட்டு மொத்த முஸ்லிம்களும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களும் அவர்கள் சார்ந்த சிவில் அமைப்புக்களும் இந்த அரசை ஆட்சிக்குக் கொண்டுவந்தமைக்கு கிடைக்கின்ற பரிசு தான் இது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் பல மில்லியன் பெறுமதி வாய்ந்த சொத்துக்கள் நாசமாக்கப்பட்டும், தீக்கிரையாக்கப்பட்டும் கொண்டிருக்கின்றன. ”வயர் ஷோர்ட்” என்றும் ”இன்ஷூரன்ஸ் தந்திரோபாயம்” என்றும் சட்டத்தைப் பாதுகாப்பவர்கள் இன்னும் கூறிக்கொண்டு குற்றவாளிகளை தொடர்ந்தும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் பொறுமையின் உச்ச கட்டத்தில் இருக்கின்றார்கள். இந்த நிலையில் உங்களது கூற்று வெந்த புண்ணில் வேல் பாய்வது போன்று உள்ளது.

உலகிலே எந்த நாட்டிலும் இல்லாத புதுமை ஒன்றைத்தான் இந்த நாட்டிலே நாங்கள் காண்கின்றோம். முஸ்லிம்களின் அழிவுகள் குறித்து நாங்கள் பேசும் போது எங்களை இனவாதிகள் என்று முத்திரை குத்துகின்றீர்கள். நாங்கள் ஊமைகளாக, பேசா மடந்தைகளாக இருக்க வேண்டுமென்றா இன்னும் எதிர்பார்க்கின்றீர்கள்?

வில்பத்தை யார் அழித்தார்கள்? ஞானசாரரை யார் உருவாக்கினார்கள் என்ற விடயங்களை உங்கள் தலைவரிடம் நீங்கள் கேட்டுத்தெரிந்த பின்னர் அவை பற்றி பேசுங்கள். இந்த விடயங்களை நீங்கள், நீங்களாகவே பேசவில்லை. உங்களை யாரோ பேச வைத்திருக்கின்றார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். (Courtesy – www.rishadbathiudeen.lk)

Related posts

Veteran US senator John McCain dies aged 81

Mohamed Dilsad

Commanding Officer of FNS Auvergne calls on Commander of the Navy

Mohamed Dilsad

Special Trial-at-Bar appointed to hear Welikada riot case

Mohamed Dilsad

Leave a Comment