(UTV|COLOMBO)-ஆசிரியர்களை இடமாற்றஞ் செய்யும் போது, அந்தந்த பாடசாலைகளில் பதிலீட்டு ஆசிரியர்களை நிரப்பாமல் அதனை மேற்கொள்ள வேண்டாம் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
நானாட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று காலை (21) நானாட்டான் பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் ஸ்ரீஸ்கந்த ராஜாவின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி, காதர் மஸ்தான் எம்.பி ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தின் போது, பல்வேறு நிறுவனங்களினதும், திணைக்களங்களினதும் அதிகாரிகள் கலந்துகொண்டு பிரச்சினைகளை ஆராய்ந்தனர்.
யுத்தத்தின் முடிவின் பின்னர், நானாட்டான் பிரதேசத்தில் மீள்குடியேறி வாழ்கின்ற மக்களினதும், தொழிலாளர்களினதும் பிரச்சினைகள் இங்கு ஆராயப்பட்டன. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் கவனஞ்செலுத்தியதுடன், மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.
“மாணவர்களின் நலன் கருதியே பாடசாலைகள் தொடர்பான செயற்பாடுகள் அமைய வேண்டும். கல்வி நடவடிக்கைகளை பாதிக்கக்கூடிய வகையில், இடமாற்றங்களோ வேறு நடவடிக்கைகளோ மேற்கொள்வதற்கு அனுமதிக்க முடியாது. இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சின் வரைமுறைகளையும், சுற்றுநிருபங்களையும் அச்சொட்டாக பின்பற்ற வேண்டுமென்று விரும்பும் அதிகாரிகள், மாணவர்களின் கல்வியை இடையறாது வழங்கும் வகையில், அதற்கான பதிலீட்டு ஆசிரியர்களையும் உரிய பாடங்களுக்கு வழங்குவதே மனிதாபிமான நடவடிக்கை ஆகும்” இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
நானாட்டான் பிரதேச மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி மற்றும் மஸ்தான் எம்.பி ஆகியோர் இந்தப் பிரச்சினை தொடர்பில் எடுத்துரைத்தனர்.
மன்னார் மாவட்டத்தில் கிராமத்துக்கு கிராமம் மீன்பிடித் தொழில் முறையில் வேறுபாடுகள் இருப்பதனால், தொழிலாளர்களுக்கிடையே பல்வேறு சச்சரவுகளும், பிணக்குகளும் இருப்பதாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தமது கருத்துக்களை வெளியிட்ட போது, மன்னார் மாவட்டத்தின் அடுத்த அபிவிருத்திக்குழுக் கூட்டம் இடம்பெறுவதற்கு முன்னர், மாவட்ட மீனவர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மீனவர் பிரச்சினையை சுமுகமாகப் பேசி தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மீனவர்களுக்கு அந்தந்த கிராமங்களில் அவர்களின் வளங்களைப் பொறுத்து தேவையான வசதிகளை செய்து கொடுத்தால், மீனவர் அத்துமீறலை தடுக்க முடியுமென ஆலோசனை வழங்கினார்.
எல்லோரும் ஜீவனோபாயத்துக்காகவே போராடுவதாகவும் எனவே, சட்டம் மற்றும் விதிமுறைகளை தளர்த்தி, விட்டுக்கொடுப்புடன் அதிகாரிகள் பணி செய்தால், இந்தப் பிரச்சினையை குறைக்க முடியுமெனவும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், நானாட்டான் மக்களின் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. முசலி கல்வி வலயம் ஒன்று உருவாக்கப்பட்டால், நானாட்டான் கல்விக் கோட்டத்தை அதனுடன் இணைக்க வேண்டாம் எனவும், இது நானாட்டான் மக்களின் கோரிக்கையாக இருப்பதாகவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி இங்கு தெரிவித்தார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]