Trending News

“பின்கதவால் சென்று அரசியல் செயற்பாடுகளை நாம் ஒருபோதும் மேற்கொள்வதில்லை”

(UTV|COLOMBO)-முஸ்லிம்களின் பாரிய பங்களிப்புடனும், எமது கட்சியின் முதன்மைப் பங்களிப்புடனும் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம், இந்த மூன்று வருட காலப் பகுதியில் நமது சமூகத்துக்கு குறிப்பிடத்தக்க அளவு எந்தவொரு நன்மையையும் மேற்கொள்ளாத போது, நாங்கள் அரசாங்கத்துக்குள்ளேயே இருந்து, முடிந்தளவு சமூகத்தின் நன்மைக்காக போராடி வருகின்றோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர்கள், உள்ளூராட்சித் தேர்தல் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்கள் ஆகியோரை, இன்று காலை (04) கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

மஹிந்தவின் அரசாங்கத்தில் நாம் பலமான அமைச்சராக இருந்த போதும், சமூகத்துக்கு பாரிய துன்பங்கள் ஏற்பட்ட போது, பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு அந்த அரசை விட்டு வெளியேறியவர்கள். திருட்டுத்தனமாகவோ, அல்லது “அடுத்த கட்சியின் தலைவர் போய்விட்டார்; நாங்களும் போனால்தான் அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்” என்றோ மஹிந்தவின் அரசாங்கத்திலிருந்து வெளியேறியவர்கள் அல்லர். அந்த அரசின் காலத்தில் சமூகத்துக்கு ஏற்பட்டுக்கொண்டிருந்த அநீதிகளை எழுத்து மூலம், அப்போதைய ஜனாதிபதிக்கு எழுதிக்கொடுத்துவிட்டு வெளியேறினோம். அதேபோன்று பசில் ராஜபக்ஷவை நேரில் சந்தித்து எமது நிலைப்பாட்டை எடுத்துரைத்தோம்.

அதேபோன்றுதான், இந்த அரசிலும் நாம் நேர்மையாகவே நடக்கின்றோம். யாரையும் பின்கதவால் சந்தித்து ஆட்சி மாற்றம் பற்றியோ, வேறு எதைப் பற்றியோ நாம் கதைப்பதில்லை.

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், மக்கள் காங்கிரஸின் வருகை தூங்கிக் கிடந்தவர்களைத் தட்டியெழுப்பி ஓடச் செய்துள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸைத் தவிர்ந்த மாற்றுக் கட்சியில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள், தமது பிரதேசத்துக்கு அவ்வப்போது அந்தந்த அரசாங்க காலத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்ள திட்டமிட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்த போது, அவற்றை குறிப்பிட்ட முஸ்லிம் கட்சி, அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க விடாது தடுத்தது. ஆனால், அவ்வாறு தடுத்தவர்கள் இற்றைவரை அவர்களேனும் முறையாக அபிவிருத்தி செய்தார்களா என்பது கேள்விக்குறியே?

“நாங்கள் உரிமைக்காகவே அரசியல் செய்கின்றோம். அபிவிருத்தி எமது நோக்கமல்ல” என்று இற்றைவரை காலம் கூறித்திரிந்தோர், மக்கள் காங்கிரஸின் வருகை மற்றும் அக்கட்சியின் செயல்பாடுகளை அடுத்து தாங்களும் ஏதோ செய்கின்றார்கள். அபிவிருத்தி பற்றி மேடைகளில் பேசுகின்றார்கள். இதுதான் அம்பாறை மாவட்டத்தின் தற்போதைய யதார்த்தமாகவும், அரசியல் சங்கதியுமாகவும் இருக்கின்றது.

இந்த மாவட்டத்திலே கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது, அண்மைய காலங்களில் பிரதேசவாதம் உச்சக்கட்டத்துக்கு வந்து ஒவ்வொரு ஊரிலும் வியாபித்து நிற்கின்றது. முன்னர் தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை உருவாக்கி, அதன்மூலம் இந்த மாவட்டத்தின் அரசியலில் கோலோச்சி வந்த முஸ்லிம் கட்சியினர், இப்போது பிறிதொரு வடிவம் எடுத்து பிரதேசவாதம் மூலம் மக்களை உசுப்பேற்றி, தமது அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். அம்பாறை மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பற்றியோ, அபிவிருத்தி தொடர்பிலோ யாரும் கரிசனை காட்டுவதாகத் தெரியவில்லை.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குறுகிய காலத்தில் வளர்ச்சி பெற்ற கட்சியாயினும், இந்தக் காலத்தில் முடிந்தளவு மக்களுக்கு பணியாற்றுகின்றது. சமூகத்துக்காக உருவாக்கப்பட்ட இந்தக் கட்சி, சமூக அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு தொடர்ந்து செயற்படும்.

அதேபோன்று, சமூகத்துக்கு எந்த ரூபத்தில் அநீதிகள் வந்தாலும் நாங்கள் வாளாவிருக்கப் போவதில்லை. தேர்தல் முறை மாற்றம் மற்றும் அரசியல் அமைப்பு மாற்றங்களில் சமூகத்துக்கு அநீதி இழைக்கப்பட்ட போதிலும், நாங்கள் தைரியமாக எதிர்த்து இருக்கின்றோம். அதேபோன்று, மாகாண தேர்தல் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு வந்தபோது, மனச்சாட்சிக்கு மாற்றம் இல்லாது, அதனை நாங்கள் எதிர்த்த போது, காட்டிக்கொடுப்பினால் வந்த வலுவான அழுத்தங்களினால் எமது கையை மீறி அது போய்விட்டது.

எமது கட்சியில் கண்ணியமானவர்களும், அரசியல் நேர்மை உள்ளவர்களும் இருப்பதையே பாராளுமன்ற உறுப்பினர் நவவி, மாகாண சபை உறுப்பினர் ரிப்கான், பிரதேச சபை உறுப்பினர் சனூஸ் ஆகியோர் தலைமைக்கு கட்டுப்பட்டு மேற்கொண்ட இராஜினாமாச் செய்த சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இவர்களுக்கு கட்சியின் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மக்களுக்காகவே மக்கள் பிரதிநிதிகள் இருக்கின்றனர் அந்தவகையில், உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களும், ஏதோ காரணங்களுக்காக வெற்றி பெறாமல் போனவர்களும், வாக்களித்த மக்களுக்கு நன்றிக்கடன்பட்டவர்கள். எனவே, மக்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்த நீங்கள் அனைவரும் உழைக்க வேண்டும்.

கட்சித் தலைமையும், உயர்பீட உறுப்பினர்களும் உங்களின் அபிவிருத்திப் பணிகளுக்கு ஒத்துழைப்பையும், உதவியையும் நல்கக் காத்திருக்கின்றோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் தவிசாளர் பிரதி அமைச்சர் அமீர் அலி, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ஹசன் அலி, செயலாளர் சுபைர்தீன், அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி, கட்சியின் முக்கியஸ்தர்களான ஜெமீல், முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், சட்டத்தரணி சஹீட், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தாஹிர், அட்டாளைச்சேனை முன்னாள் பிரதேச சபைத் தலைவர் அன்சில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத், அக்கரைப்பற்று முன்னாள் எதிர்கட்சித் தலைவர் ஹனீபா மதனி, சட்டத்தரணி மில்ஹான்,மௌலவி முபாரக் அப்துல் மஜீத், டாக்டர்.பரீட் உட்பட உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

 

-சுஐப் எம்.காசிம்-

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

ஊரடங்குச்சட்டம் அமுலில்

Mohamed Dilsad

கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இருவர் பணி நீக்கம்

Mohamed Dilsad

Premier Ranil congratulates Australian Counterpart on election win

Mohamed Dilsad

Leave a Comment