(UTV|INDIA)-திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான முத்துவேல் கருணாநிதி சென்னை, காவேரி மருத்துவமனையில் நேற்று செவ்வாய்க்கிழமை, மாலை காலமானார்.
1924 ஜூன் 3-ஆம் திகதி , நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை கிராமத்தில் பிறந்தார்.
சமீப நாட்களாக கடுமையான உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஜூலை 27ஆம் திகதி நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதுமையால் உண்டான உடல் நலக் குறைவால் சுமார் இரண்டு ஆண்டு காலமாக பொது வாழ்வில் இருந்து கருணாநிதி விலகி இருந்தார். அதனால் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கட்சியின் செயல் தலைவராக 2017இல் பொறுப்பேற்றுக்கொண்டார்.
1969இல் சி.என்.அண்ணாதுரை மறைவிற்கு பிறகு தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட அவர் ஐந்து முறை தமிழக முதலமைச்சராக பதவி வகித்துள்ளர்.
1969 ஜூலை 27 ஆம் திகதி திமுக தலைவராக பதவியேற்றுக்கொண்டார் கருணாநிதி. கடந்த ஜூலை 27 அன்று அப்பதவியில் 49 ஆண்டுகளை நிறைவு செய்து 50ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
அரசியலில் மட்டுமல்லாது திரைத் துறையிலும் வெற்றிகரமான கதையாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் கருணாநிதி விளங்கினார்.