(UDHAYAM, COLOMBO) – களுத்துறை கட்டுகுறுந்த கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகு நேற்று பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கடற்படைக்கு சொந்தமான டொரா மற்றும் டிங்கி படகுகளின் உதவியுடன் விபத்துக்குள்ளான படகு கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, விபத்தில் காணாமல் போனதாக சந்தேகிக்கப்படும் மேலும் பேரை தேடி இன்றும் தேடுதல் பணிகள் இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
காணாமல் போயுள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களுள், இரண்டு குழந்தைகள், இளைஞர் ஒருவர் மற்றும் யுவதியொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருவளை மற்றும் பயாகல காவற்துறைக்கு அவர்கள் காணாமல் போயுள்ளதாக நேற்று முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதேவேளை, விபத்து தொடர்பாக கடலோர காவல்படை அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளிடமும் காவற்துறை வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.
இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 27 பேர் பேருவளை மற்றும் நாகொட மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேருவளை சென் லாசரஸ் தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவம் ஒன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், குறித்த தேவஸ்தானத்தை நோக்கி பயணித்தவர்களே விபத்துக்கு உள்ளாகினர்.