(UTV|COLOMBO)-இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையிலான பொருளாதார மீள் உறவு இலங்கைக்கு பாரிய நன்மைகளை ஏற்படுத்தும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
குவைத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நேற்று மாலை (10) குவைத் வாழ் இலங்கை சமூகத்தை சந்தித்தபோதே இத்தகவலை வெளியிட்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குவைத் கிளை ஏற்பாட்டில், குவைத்துக்கான இலங்கை தூதரகத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது, அந்த நாட்டில் வாழும் இலங்கையர்களும், தொழில் புரிவோரும் பங்கேற்றிருந்தனர்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,
குவைத்துக்கும் இலங்கைக்கும் இடையே சுமார் 21 வருடங்களுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட வர்த்தக உறவை மீண்டும் புதுப்பிக்கவே கைத்தொழில் வர்த்தக அமைச்சர் என்ற வகையில், சுமார் 10 அமைச்சுக்களின்
அதிகாரிகளுடன் நாம் இங்கு வந்துள்ளோம். பரஸ்பர நாடுகளுக்கிடையிலே வர்த்தக, பொருளாதார, கலாச்சார உறவுகளை எவ்வாறு மீளக்கட்டியெழுப்புவது என்பது குறித்து, குவைத் நாட்டின் வர்த்தக அமைச்சருடன் விரிவான கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருக்கின்றோம்.
அத்துடன், குவைத்தில் தொழில்புரியும் இலங்கையர்களின் நலன்கள் குறித்தும் பேசியுள்ளோம். இரண்டு நாடுகளுக்கிடையிலே ஏற்படுகின்ற ஒப்பந்தம் நமது நாட்டுக்கு பாரிய நன்மைகளை ஏற்படுத்த உள்ளது. அதுமாத்திரமின்றி, இலங்கையில் பல்வேறு முதலீடுகளைச் செய்ய குவைத் முதலீட்டளர்கள் முன் வந்திருக்கின்றனர்.
இலங்கையிலிருந்து கடல் கடந்து வந்து இங்கு வாழும் உங்களை சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த நிகழ்வுக்கு வந்திருக்கும் பலர் எமது கட்சி விசுவாசிகள் மாத்திரமின்றி, அரசியல் ரீதியில் எனக்கு பல்வேறு
வழிகளிலும் பலம் சேர்த்தவர்கள்.
ஊடகங்களின் வாயிலாகவும் சமூக வலைத்தளங்களின் வழியாகவும் இலங்கையின் நிலவரங்களை நீங்கள் உடனுக்குடன் அறிகின்றீர்கள். இலங்கை அரசியலில் எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
வகிபாகம் என்ன? மக்கள் சார்ந்த செயற்பாடுகள் என்ன? சமூக உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக கட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் எவை? என்பவற்றை எல்லாம் நீங்கள் ஓரளவு தெரிந்து வைத்திருப்பீர்கள். பல்வேறு சவால்களுக்கும், பிரச்சினைகளுக்கும் மத்தியிலேதான் கட்சியும், தலைமையும் பயணித்து வருகின்றது என்பதையும் அறிவீர்கள்.
பல தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் நமது சமூகமும் சிக்கிச் சீரழிந்துவிட்டது. அத்துடன், போதாக்குறைக்கு பேரினவாதத்தின் அடக்குமுறைகளும் நமக்கு துன்பங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதன் மத்தியிலேதான் புதிய அரசாங்கத்தைக் கொண்டுவர உதவினோம். அந்த அரசை ஆக்குவதில் நாம் வழங்கிய பாரிய பங்களிப்புக்கு உரிய பலன் கிடைத்ததா? என்ற கேள்வி நமக்கு முன்னே எழுந்துள்ளது.
இவ்வாறானதொரு நிலையிலே, அடுத்த ஜனாதிபதித் தேர்தலைப் பற்றியும் ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்பது பற்றியும் இப்போது பேசிக்கொண்டிருக்கின்றோம். முஸ்லிம் சமூகம் யாருக்கு ஆதரவு வழங்கப் போகின்றது? முஸ்லிம் தலைவர்கள் எந்தக் கட்சியை ஆதரிக்கப் போகின்றார்கள்? என்ற கேள்விகள் எல்லாம் தொக்கி நிற்கின்றன.
முஸ்லிம் நாடுகள் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதுடன், அங்கு வாழபவர்கள் துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்து வருகின்றனர். வளங்களையும் செல்வங்களையும் இறைவன் வழங்கியுள்ள போதும், நாளாந்தம் அந்த நாடுகளில் பிரச்சினைகளே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலே முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் அட்டூழியங்களும் அக்கிரமங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
இலங்கையைப் பொறுத்தவரையில் முஸ்லிம் சமூகம் ஜனநாயக நீரோட்டத்தில் குறிப்பாக, பாராளுமன்றம், மாகாண சபை போன்றவற்றில் ஓரளவு அதிகாரங்களைக் கொண்டிருப்பதும், ஜனாதிபதியைத் தீர்மானிக்கும்
சக்திகளில் ஒன்றாக விளங்குவதும் நமக்கு ஓரளவு பாதுகாப்பைத் தரக்கூடியதாக உள்ளது. எனவே, எமது கட்சியைப் பொறுத்தவரையில் எதிர்கால அரசியல் முடிவுகள் தொடர்பில், கட்டியம் கூறிக்கொண்டு காலத்தை வீணடிப்பது பயனற்றது என நாம் கருதுகின்றோம்.
சொந்த நாட்டை விட்டு இந்த நாட்டுக்கு வந்து தொழில்புரியும் நீங்கள், வந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். இங்கே இருக்கும் காலத்தை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இங்கு கிடைக்கின்ற
சந்தர்ப்பங்களையும், தொடர்புகளையும் உங்கள் முன்னேற்றத்துக்காக பயன்படுத்துவதொடு, சமுதாய நலனைப் பற்றியும் சிந்திப்பது நல்லது எனக் கருதுகிறேன்.
எமது கட்சியைப் பொறுத்தவரையில் துரித வளர்ச்சி கண்டு வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். சமூகத்தின் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற பல சவால்களுக்கு மத்தியில் நாங்கள் பாடுபட்டு வருகின்றோம். புத்தளத்தில்
தஞ்சமடைந்த வடக்கு மக்களின் நல்வாழ்வுக்கு உதவிய நாங்கள், வடக்கிலே உள்ள சொந்தக் கிராமங்களில் நமது சமூகம் மீளக்குடியேற சந்தர்ப்பம் கிடைத்த பின்னர், அங்கும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து,
புதிய வாழ்க்கையை தொடங்க வழிவகுத்துள்ளோம். எனவேதான், காடுகளை வெட்டியதாகவும் வில்பத்துவை அழிப்பதாகவும் எம்மீது குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.
அரசியல் கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இருந்த போதும், சமூகப் பயணத்தை நோக்கிய ஓர் இலக்கிலே பயணிக்கின்றது. உரிமை சார்ந்த விடயங்களிலும் ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்கி வருகின்றோம்.
பல்வேறு மாவட்டங்களில் நாங்கள் வியாபித்து வருவதனால், கட்சியையும் தலைமையையும் அழிக்க வேண்டும் என்ற தீய நோக்கில், சதிகள் இடம்பெற்று வருகின்றன. இதன் மத்தியிலே எமக்கு கிடைத்த அரசியல் அதிகாரத்தைக் கொண்டே இந்த விடயங்களையும், அபிவிருத்திகளையும் சாதிக்க முடிகின்றது.
எமது பணிகளைப் பொறுக்கமாட்டாதவர்கள் இந்தக் கட்சியை முடக்குவதற்காகவும், தலைமையை நசுக்குவதற்காகவும் எந்தெந்த வழிகளில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அத்தனையையும்
செய்கின்றார்கள்.
எம்மை வீழ்த்துவதன் மூலம் அவர்களின் நோக்கங்களை அடைவதற்கு எத்தனிக்கின்றார்கள். சதிகளையும் சவால்களையும் தாண்டி, புதுப்புது பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து இறைவனின் உதவியால், தொடர்ந்தும்
பயணித்து வருகின்றோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குவைத் கிளையின் முக்கியஸ்தர் அப்துல் சமத்தின் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், ஏற்பாட்டாளர்களில் ஒருவரான மௌலவி ஹாரிஸ், அமைச்சரின் பாராளுமன்ற விவகாரச்
செயலாளரும், சிரேஷ்ட ஒலிபரப்பாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ஆகியோரும் உரையாற்றினர்.
-ஊடகப்பிரிவு-
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]