(UTV|COLOMBO)-மூன்று தசாப்தகால துன்பத்திலிருந்த அகதி மக்களுக்கென, பல்வேறு பகீரத முயற்சிகளினாலும் போராட்டங்களின் மத்தியிலும் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணியின் நடவடிக்கையில் அரசாங்கம் கை வைத்தால், அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டி நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எச்சரிக்கை விடுத்தார்.
முசலியில் அமைக்கப்படவுள்ள 500 வீட்டுத்திட்டத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும் பயனாளிகளுக்கான அனுமதிக் கடிதம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். முசலி பிரதேச சபை உறுப்பினரும் அமைச்சரின் இணைப்பாளருமான பைரூசின் தலைமையில் நேற்று காலை (14) மன்னார், முசலி தேசிய பாடசாலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் நாமே முன்னின்று, முழுமூச்சுடன் உயிர் அச்சுறுத்தல்களுக்கும் ஆபத்துக்களுக்கும் மத்தியிலே உழைத்தவர்கள். நல்லாட்சி அரசு உருவானதன் பின்னர், துன்பத்திலும் வேதனையிலும் வாழ்ந்த வடக்கு முஸ்லிம் மக்களை தமது சொந்தப் பிரதேசங்களில் குடியேற்றி, அவர்களுக்கு நிரந்தர விமோசனம் பெற்றுக்கொடுப்பதற்காக மீள்குடியேற்ற அமைச்சை நாம் கோரியபோது எமக்கு அது மறுக்கப்பட்டது.
“எந்த அமைச்சு வேண்டுமானாலும் கேட்டுப்பெறுங்கள். இதை மட்டும் கேட்காதீர்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு இதை உங்களுக்கு வழங்குவதில் பிரச்சினை இருக்கின்றது. ஆட்சி அமைப்பதற்கு அவர்களின் தயவும் தேவைப்படுவதனால் அதனைத் தர முடியாது” என்று அப்போது கைவிரிக்கப்பட்டது.
அதன் பின்னர், மீள்குடியேற்ற அமைச்சுக்கு அப்போது வரவு – செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 14 பில்லியன் ரூபாவில் வடக்கு முஸ்லிம்களின் நல்வாழ்வுக்கென ஆகக்குறைந்தது 14 வீடுகளையோ, 14 மலசலகூடங்களையோ கட்டிக்கொடுக்காத நிலையே இருந்தது. இதனாலேயே நாம் விழித்தெழுந்தோம்.
இந்த நிலையிலேதான் பாதிக்கப்பட்ட இந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக விஷேட செயலணி ஒன்றுக்காக போராடினோம். உயர்மட்டத் தலைவர்களுடன் எமது நியாயங்களை முன்வைத்து, எத்தனையோ சந்திப்புக்களை மேற்கொண்டோம். எனது அமைச்சான கைத்தொழில் வர்த்தக அமைச்சின் மூலம் அமைச்சரவைக்கு விஷேட பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து, தடைகளையும் சவால்களையும் தாண்டி பெறப்பட்டதே இந்தச் செயலணி. ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமைய அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவும் இதில் அங்கம் வகிக்கின்றார்.
மீள்குடியேற்றச் செயலணியின் துரித வேகத்தையும் முனைப்பான அபிவிருத்திச் செயற்பாடுகளையும் பொறுக்கமாட்டாதவர்களே, இன்று வெந்து நொந்துபோய் அதை எம்மிடமிருந்து பிரித்தெடுக்க – பறித்தெடுக்க வேண்டும் என்பதில் கங்கணங்கட்டி செயற்படுகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு, முஸ்லிம் அரசியல்வாதிகளே இந்தப் பாதகச் செயலில் இறங்கியுள்ளனர்.
முன்னரெல்லாம் மீள்குடியேற்றத்தை தடுத்தவர்கள் பெரும்பான்மை, பேரினத்து இனவாதிகளே, ஆனால், இப்போது அரசியல் காழ்ப்புணர்வுடன் தமது அரசியல் இருப்புக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில், எமது பணிகளைக் கண்டு நடுங்குபவர்கள், மறைமுகமாகவும் மேடைகளிலே நேரடியாகவும் தமது செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். இந்த முயற்சிகளிலே அவர்களுக்கு ஒருபோதும் வெற்றிகிடைக்கப் போவதில்லை. அநியாயங்களுக்கு இறைவனும் ஒருபோதும் துணைநிற்க மாட்டான். எமது நடவடிக்கைகளுக்கு எதிராக சதி செய்வோரையும் அபாண்டங்களைப் பரப்புவோரையும் இறைவன் ஒருபோதும் மன்னிக்கவும் போவதுமில்லை.
மீள்குடியேற்றச் செயலணியை நாம் உருவாக்கிய பின்னர், எமக்கான நிதியை முடக்குவதிலே முன்னின்று செயற்படும் அரசியல்வாதிகளையும் வைத்துக்கொண்டு, நான் தெளிவான செய்தி ஒன்றை பிரதமரிடம் தெரிவித்தேன். “கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான இந்தச் செயலணியை பறித்தெடுத்தால், எனது அமைச்சை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். நான் வெறுமனே பாராளுமன்ற உறுப்பினராகச்
செயற்படுகின்றேன்” என்று மிகவும் ஆணித்தரமாகக் கூறினேன். எவருக்கும் பயந்து நாங்கள் கடந்த காலங்களில் அரசியல் செய்தவர்களும் அல்லர். இனியும் அவ்வாறு அடங்கி அரசியல் செய்யவும் மாட்டோம் என்பதை, மிகவும் தெளிவாக இந்த சந்தர்ப்பத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
இடம்பெயர்ந்த மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக, ஒரு நீண்டகால இலக்குடன் பயணிக்கின்றோம். தேர்தலுக்காக மட்டும் இங்கு வந்து அற்ப ஆசைகளைக் காட்டி, அவ்வப்போது அரசியல் செய்யும் ஏமாற்றுக் கலாச்சாரம் எம்மிடம் என்றுமே இருந்ததில்லை. அகதி முஸ்லிம் மக்களின் வரலாற்றிலே வரவு – செலவு திட்டத்திலே அவர்களின் நல்வாழ்வுக்கென, மீள்குடியேற்றத்துக்கென பிரத்தியேகமாக நிதி ஒதுக்கப்பட்டதில்லை. கடந்த வரவு – செலவு திட்டத்திலேதான் கைத்தொழில் அமைச்சுக்கு கீழான இந்த மீள்குடியேற்ற செயலணிக்கு இவ்வளவு தொகையான நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
கைத்தொழில் அமைச்சராக இருந்துகொண்டும், இந்த மக்களின் வலியை அவர்களுடன் சேர்ந்து அனுபவித்தவன் என்ற வகையில், மீள்குடியேற்றப் பணிகளையும் செயற்படுத்தி வருகின்றேன் என்று அமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் ஷரீப், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீன், முசலி பிரதேச சபைத் தவிசாளர் சுபியான், பிரதித் தவிசாளர் முகுசீன் றயீசுத்தீன், மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் முஜாஹிர், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வடமாகாண பணிப்பாளர் முனவ்வர், மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீபுர் ரஹ்மான் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.
-ஊடகப்பிரிவு-
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]