(UDHAYAM, COLOMBO) – சீனா எதிர்காலத்திலும் இலங்கையுடன் உண்மையான நண்பராக இருக்குமென சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழுவின் வெளிவிவகார திணைக்கள தலைவர் Song Tao உள்ளிட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நேற்று முற்பகல் ஜனாதிபதியின்; உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதியை அவர்களை சந்தித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலுள்ள நீண்டகால உறவுகளை எதிர்காலத்தில் மேம்படுத்து குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. அதற்கென இரண்டு கட்சிகளையும் சேர்ந்த அலுவலர் மட்ட சந்திப்புகளை அதிகரிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
எதிர்வரும் ஜூன் மாதத்தில் சீனாவில் நடைபெறும் மாநாட்டில் பங்குபற்றுமாறு சீன கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு அழைப்பு விடுத்தது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது முக்கியமானதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி;, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தூய்மையான அரசியல் கட்சியாக கட்டியெழுப்பி சிறந்த அரசியல் இயக்கமாக முன்னெடுப்பது தனது இலட்சியமென தெரிவித்தார்.
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக சீனா வழங்கும் ஒத்துழைப்பை நன்றியுடன் நினைவுகூர்ந்த ஜனாதிபதி;, அந்த பாரிய அபிவிருத்தி திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பெரும் பங்களிப்பை வழங்குவதாகவும், சீன – இலங்கை உறவுகளை அனைத்து வகைகளிலும் பலப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் தெரிவித்தார்.
தனது கோரிக்கைக்கமைய சீன அரசாங்கத்தின் உதவியில் இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள சிறுநீரக மருத்துவமனை வேலைகளை இந்த ஆண்டில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளும் செயற்திட்டங்களை பாராட்டிய சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள், சீன உதவியுடன் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை வெற்றிகரமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு தமது நன்றிகளை தெரிவித்தனர்.