(UDHAYAM, COLOMBO) – சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி கிறிஸ்டினா லகார்ட் மார்ச் மாதம் 21ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
நிதியத்தின் உள்நாட்டு அலுவலகம் இவரின் வருகைக்குத் தேவையான ஒழுங்குகளை மேற்கொண்டு வருகின்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் கடந்த மாதம் சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற சமயம் திருமதி லகார்டை சந்தித்து பேசியமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் உள்ள வெளிநாட்டு நிதி கையிருப்பை அதிகரிப்பதற்காக 1.5 பில்லியன் டொலர்களை நீண்டகால கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் கடந்த வருடம் ஜுன் மாதத்தில் நடவடிக்கை எடுத்தது.
இதற்கமைய, இதன் முதலாவது தொகை கடந்த ஜுன் மாதத்திலும் இரண்டாவது தொகை நவம்பர் மாதத்திலும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. ஜுன் மாதத்தில் கடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டதன் பின்னர், இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரமடைய ஆரம்பித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்திருந்தமை இங்கு மேலும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.