Trending News

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எவரிடமும் சரணாகதி அடையவில்லை – மஹ்ரூப் எம் பி திட்டவட்டம்

(UTV|COLOMBO)-அரசியலமைப்புச் சட்டத்தை பிழையான வழியில் கையிலெடுத்து,
நிறைவேற்று அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொண்டிருப்பதனாலேயே ஜனநாயகத்தை நிலைநாட்ட விரும்பும் கட்சிகளுடன் குறிப்பாக சிறுபான்மைக் கட்சிகளுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போராடி வருவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம் பி தெரிவித்தார்.

ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்துவரும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து நீதிக்காகவும் நியாயத்துக்காகவும் நாம் போராடி வருவதை திரிபுபடுத்தி, எமது கட்சி தமது கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு, ஏனைய கட்சிகளுடன் இரண்டறக் கலந்து விட்டது – சங்கமித்து விட்டது – தேர்தல் கூட்டுக்காக ஒன்றித்து விட்டது என்று எவரும் நினைக்கத் தேவையில்லையென்றும் அவர் குறிப்பிட்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறான விடயங்களில் மிகவும் தெளிவான நிலைப்பாட்டுடனும் உறுதியுடனும் இருப்பதாக அப்துல்லாஹ் மஹ்ரூப் எம் பி தெரிவித்தார்.

கிண்ணியாவில் இடம்பெற்ற கட்சியின் ஆதரவாளர்கள் சந்திப்பின் போதே தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம் பி, தற்போதைய அரசியல் நெருக்கடி, கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள், சமூகத்தின் மீதான அக்கறை குறித்து மிகவும் தெளிவான விளக்கங்களை வழங்கினார்.

“எமது கட்சியின் தலைமையானது இறைவனைத் தவிர எவருக்கும்
சரணாகதியடையாது. சோரம் போகவும் மாட்டாது. எமது கட்சிக்கொள்கைகளை தூக்கியெறிந்துவிட்டு, நமது தனித்துவத்தைக் கைவிட்டு விட்டு, அதன் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு நாம் அரசியல் செய்யமாட்டோம்.

சமூகத்தின் மீதான பாதுகாப்பு, அக்கறை காரணமாகவே நாம் இந்த ஜீவ மரணப் போராட்டத்தில் இத்தனை நாட்களாக குதித்து வருகிறோம். பட்டம், பதவி, பணத்துக்காக நாம் ஒரு போதும் சோரம் போகவும் மாட்டோம். பின்வாங்கவும் மாட்டோம், அடி பணிந்து அரசியல் செய்யவும் மாட்டோம்.

அதே போன்று நீங்கள் எமது கட்சிக்கும் தலைமைக்கும் தந்த ஆணையை ஒரு போதும் துஷ்பிரயோகம் செய்யப்போவதுமில்லை.” இவ்வாறு அப்துல்லாஹ் மஹ்ரூப் எம் பி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,
இறைவனுக்கு அடுத்தபடியாக நமது சிறுபான்மைச் சமூகத்திற்கு
அரசியலமைப்பே பாதுகாப்பு அரணாகும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய மீயுயர் அரசியலமைப்பை சகட்டு மேனிக்கு கையிலெடுத்து ருத்ர தாண்டவமாடும் எதேச்சதிகாரத்துக்கு நாங்கள் துணை போனால் எமது சமூகத்தை படுகுழியில் தள்ளுவதாகவே முடிந்துவிடும். எனவே சமூகக் கட்சியென்ற வகையில் இதனை நாங்கள் கைகட்டி, வாய் பொத்தி வாளாவிருக்க வேண்டுமென்று சிலர் நினைப்பது தவறானது.

அந்த வகையிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது ஜனநாயக நீரோட்டத்தைப் பாதுகாக்க விரும்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மனோ கணேசன் தலைமையிலான தமிழர் முற்போக்கு முன்னணி ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஜனநாயகப் போராட்டத்தை நடாத்தி வருகின்றது. அதனை பிழையாக அர்த்தப்படுத்தி எமது கட்சிக் கொள்கைகளை நாம் தூக்கியெறிந்துவிட்டு பிற கட்சிகளுடன் சங்கமித்துக் கொண்டுவிட்டோம் என்று எவரும் நினைக்கத் தேவையில்லை.

கடந்த காலங்களிலும் சமுதாயத்திற்கான போராட்டத்திலும் பிரச்சினைகளிலும் சில கட்சிகளுடன் இணைந்தும் பயணித்திருக்கின்றோம் என்பதை நீங்கள் அனைவரும் மனதில் இருத்திக்கொண்டு, அந்த வகையான இன்னொரு வடிவமாகவே இந்த ஜனநாயகப் போராட்டத்திற்கான இந்த இணைந்த பயணத்தை நோக்க வேண்டுமென்பதையும் நான் நினைவுபடுத்தி எமது கட்சியானது எதிர்காலத்திலும் சமூக போராட்டங்களில் முன்னின்று செயற்படுமென்பதை கட்சிப்போராளிகளாகிய உங்களிடம் உறுதியாக தெரிவிக்கின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

– அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடகப்பிரிவு-

 

 

 

Related posts

Macron urges Trump to stick with 2015 accord

Mohamed Dilsad

ஜனாதிபதிக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு

Mohamed Dilsad

Banned Smith tops ICC rankings despite not playing

Mohamed Dilsad

Leave a Comment