(UTV|COLOMBO)-தாம் உள்ளிட்ட அமைச்சரவை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக இன்றைய தினம் உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை ஏற்றுக் கொள்ள போவதில்லை என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்றைய தினம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.
மஹிந்த உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்களுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என்ற உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளரான, நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர் அர்ஜூன் ஒபேசேகர ஆகியோர் தலைமையில் இந்த மனு மீதான விசாரணைகள் இடம்பெற்றன.
இந்த மனு மீதான விசாரணை மீண்டும் எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
அன்றைய தினம் பிரதிவாதிகளான பிரதமர் பதவியை வகித்த மஹிந்த ராஜபக்ஷ உட்பட 49 அமைச்சரவை உறுப்பினர்களும் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.