(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர் குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இதேவேளை இந்த மனு மீதான விசாரணையில் தலையீடு செய்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி அனுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி, லக்ஷ்மன் வசந்த பெரேரா, பவித்ரா வன்னியாராச்சி, சிசிர ஜெயகொடி, சந்திரசிறி கஜதீர, ஜோன் செனவிரத்ன உள்ளிட்ட 10 பிரதிவாதிகள் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.