(UTV|FRANCE)-காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, 2015ஆம் ஆண்டு, பிரான்ஸின் பரிஸில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க ஒப்பந்தத்துக்கு மேலும் உயிர்கொடுக்கும் வகையில், உலக நாடுகளின் முக்கியஸ்தர்கள், இணக்கப்பாடொன்றுக்கு நேற்று (16) வந்தனர். இதன்மூலம், காலநிலை மாற்றத்தால் அதிகளவு பாதிக்கப்படக்கூடிய ஆபத்தைக் கொண்ட நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், போலந்தில் ஒன்றுகூடி, காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படும் பூகோள வெப்பநிலை உயர்வை, கைத்தொழில் புரட்சி ஏற்படுவதற்கு முன்னரிருந்த வெப்பநிலையை விட 2 பாகை செல்சியஸுக்கும் மேலாக அதிகரிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளுக்கு உறுதி வழங்கினர்.
இது தொடர்பான பேரம்பேசல்களில், காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகளுக்கு, யார் நிதியளிப்பது என்பது முக்கியமான கேள்வியாகக் காணப்பட்டது. குறிப்பாக, அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள், இது தொடர்பான தெளிவைக் கோரி நின்றன. இதில் இணக்கப்பாடு ஏற்பட்டு, வளர்ந்துவரும் பல நாடுகள், காலநிலை மாற்றம் தொடர்பாக ஏற்கெனவே எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு, வசதிபடைத்த நாடுகள் உதவுமென இணக்கப்பாடு எட்டப்பட்டது.
அதேபோல், காபன் வெளியீட்டைக் குறைப்பது தொடர்பாகவும், வளர்ந்துவரும் நாடுகளுக்கும் வசதிபடைத்த நாடுகளுக்கும் இடையில், கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. இவ்விடயத்திலும், இணக்கப்பாடு இறுதியில் ஏற்பட்டது.
இவ்வாறு, 196 நாடுகள் சேர்ந்து, இந்த இணக்கப்பாடுகளை எட்டியுள்ளமை, பரிஸ் ஒப்பந்தத்துக்கு முக்கியமான விடயமாகக் கருதப்படுகிறது.