(UTV|COLOMBO)-எதிர்காலத்தில் இலங்கையுடன் விரிவான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள தமது நாடு எதிர்பார்ப்பதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிலிப்பைன்ஸுக்கான அரச முறை விஜயம் இரு நாடுகளுக்குமிடையிலான தொடர்புகளில் வரலாற்று முக்கியத்துவமுடைய சந்தர்ப்பமாகும் எனக் குறிப்பிட்ட பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் (Rodrigo Duterte), அந்த நம்பிக்கையான நட்புறவுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை பலப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் வலியுறுத்தினார்.
பிலிப்பைன்ஸுக்கான நான்கு நாள் அரச முறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு, இடம்பெற்றதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் இதனை தெரிவித்தார்.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் என்ற வகையில் இரு நாடுகளுக்கும் காணப்படும் சவால்கள் பொதுவானதாகும் எனத் தெரிவித்த பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் பொதுவான பிரச்சினையாக காணப்படும் போதைப்பொருள் கடத்தலை தடுத்தல் போன்ற சவால்களிலும் சர்வதேச மட்டத்திலும் இலங்கையுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள பிலிப்பைன்ஸ் தயாராக உள்ளதாக குறிப்பிட்டார்.
தமக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் இரு நாடுகளினதும் நன்மைக்கான கருத்துப் பாரிமாறல்கள் இடம்பெற்றமை சிறப்பானதாகும் எனவும் இதன்போது கைச்சாத்திடப்பட்ட புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் ஊடாக எதிர்காலத்தில் இரு நாடுகளும் பல நன்மைகளை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான தொடர்புகளை பலப்படுத்தி புதியதோர் பாதையில் பயணிக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
தனது இந்த விஜயத்தின் ஊடாக இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே நீண்டகால நம்பிக்கையான நட்புறவு ஒன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இரு நாடுகளுக்குமிடையே கட்டியெழுப்பப்பட்ட அந்த புதிய நட்புறவினூடாக இரு நாட்டு மக்களினதும் சௌபாக்கியம் மற்றும் முன்னேற்றத்திற்காக இணைந்து பயணிக்க முடியும் என தெரிவித்தார்.
வெகு விரைவில் இலங்கைக்கு வருகை தருமாறு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, இந்த விஜயத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான சிறந்ததோர் சந்தர்ப்பமாக அது அமையும் என தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)