(UTV|COLOMBO)-கைவினைத்துறையில் ஈடுபடும் கைவினைஞசர்களுக்கு காப்புறுதி திட்டம் இவ்வருடம் மார்ச் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் ,தேசிய அருங்கலைகள் பேரவையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 23000 பேர் இந்த திட்டத்தின் மூலம் நன்மை அடைவர் எனவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கைவினைத்தொழில் வரலாற்றில் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்படும் “சில்பா சுரக்ஷ ” எனும் இந்த காப்புறுதித் திட்டதை கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2017 ஆம் ஆண்டு முதற்தடவையாக முன்மொழிந்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சுதேச கைவினைத் துறையினை போஷித்து பேணிப்பாதுகாக்கும் நோக்குடன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவை ஏற்பாடு செய்த ”சில்ப அபிமானி – 2018” கைவினைத் தொழிற்துறை ஜனாதிபதி விருது விழா நேற்று (23) பத்தரமுல்லை அபே கம வளாகத்தில் நடைபெற்றது.
அருங்கலைகள் பேரவையின் தலைவி ஹேசானி போகொல்லாகம தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது கைவினைத்துறை இந்த நாட்டிலே சுயதொழில் வாய்ப்புக்கான பாரிய துறையாக காணப்படுகின்றது. சுமார் 100000 பேர் இந்த துறையில் ஈடுபாடு காட்டுகின்றனர்.மார்ச் மாதத்தில் கொண்டுவரப்படவுள்ள காப்புறுதித் திட்டத்தில் சுமார் 5000 கைவினைஞர்கள் முதற்கட்டமாக நன்மை அடைவர்.இந்த திட்டம் விஸ்தரிக்கப்பட்டு 2023 ஆம் ஆண்டளவில் பதிவு செய்யப்பட்ட அனைவரும் உள்வாங்கப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தேசிய அருங்கலைகள் பேரவை இலங்கையின் கைவினைஞசர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வருடா வருடம் ” சில்பா அபிமானி ” விருதை நடாத்தி வருகின்றது.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய நூற்றாண்டுக்கு மேலான அருங்கலைகளை பாதுகாப்பதற்கும் காட்சிப்படுத்தும் வகையில் கைவினைஞ்சர்கள் இடையே போட்டிகளை நடத்தி விருதுகளை வழங்குவது சிறந்த நடைமுறையாகும். இந்த போட்டிகளில் பல்வேறு நாடுகளைச்சேர்ந்த கைவினைஞசர்களும் ஈடுப்பாடுக்காட்டுவதும் , நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த கைவினைஞசர்களும் ஆர்வங்காட்டுவதும் வரவேற்கத்தக்கது .
எனது அமைச்சு தேசிய அருங்கலைகள் பேரவையின் செயற்பாடுகளை மேலும் விரிவுப்படுத்தி இந்த துறையை முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
நாம் கைவினைஞசர்களுக்கான பயிற்சிகளை விரிவுப்படுத்தி உள்ளோம் . அருங்கலைகள் பேரவையானது கைவினை பயிற்சி நிலையங்களை நாடளாவிய ரீதியில் அமைத்து பல்வேறுப்பட்ட பயிற்சி நெறிகளை ஆரம்பித்துள்ளது.
அத்துடன் ஜப்பானை தலமாக கொண்டு இயங்கும் ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளின் தொட்டறிய முடியாத கலாச்சார மரபுரிமைகளை பாதுகாக்கும் சர்வதேச ஆராய்ச்சி நிலையம் இணைந்து புதிய திட்டங்களை ஆரம்பித்துள்ளோம் . பாரம்பரிய புடவைகள் மற்றும் பெண் கைவினைஞர்கள் ஆகியோருக்கு உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் குறிப்பாக வடக்கு கிழக்கிலே இது பிரதானமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. என்றும் அமைச்சர் தெரிவித்தார்.