(UDHAYAM, COLOMBO) – ஆற்றல் மிக்க இளைஞர் யுவதிகள், அரசியல் அழுத்தங்களுக்கு அப்பால் திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் சகல பாகங்களையும் அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் நோக்கமென்றும் இம்மாதத்திற்குரிய யொவுன்புர நிகழ்ச்சி திருகோணமலையில் இடம்பெறும் என்றும் பிரதமர் கூறினார்.
எடின்பரோ பிரபுவின் பெயரால் ஏற்பாடு செய்யப்பட்ட பரிசளிப்பு நிகழ்ச்சி அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக பிரதமர் கலந்து கொண்டு உரையாற்றினார்,
ஆற்றல் மிக்க இளைஞர் யுவதிகளின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான திட்டத்தை அமுலாக்குமாறு தாம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்:
இலங்கையின் இளைஞர் யுவதிகள் பல்வேறு திறமைகளைக் கொண்டிருக்கிறார்கள். வெசாக், நத்தார், முதலான சமய நிகழ்ச்சிகளில் இவர்களின் திறமை பளிச்சிடுகிறது. சமீபத்தில் இடம்பெற்ற தொலைக்காட்சி றியலிற்றி நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர் யுவதிகள் திறமை காட்டிய விதத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
இளைஞர் பாராளுமன்றத்தில் தேசிய பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய இளைஞர் யுவதிகள் இருக்கிறார்கள்.
கிராமப்புறங்களில் திறமைகள் மறைந்திருக்கின்றன. இந்தத் திறமைகளை வெளிக்கொணர ஏற்பாடொன்று இல்லாமை கவலைக்குறிய விடயமாகும்.
எடின்பரோ கோமகனின் பெயரால் 16 மாவட்டங்களில் நிகழ்ச்சித் திட்டங்கள் அமுலாகின்றன. இவற்றை சகல மாவட்டங்களிலும் அமுலாக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளேன்.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் ரொபோட்டிக்ஸ் போட்டியொன்று நடத்தம்படும் மென்பொருள் வடிவமைத்தல், திறன்பேசி புகைப்படப் போட்டிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்யுமாறும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும்; தெரிவித்தார்.