வீட்டில் வளர்த்து வந்த சிங்கத்திற்கு உணவு வைப்பதற்காக கூண்டுக்குள் சென்ற மைக்கல் பிராசெக்கை சிங்கம் கடித்து குதறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஐரோப்பிய – செக் குடியரசில், ஸ்லின் பிராந்தியத்தில் உள்ள ஸ்டிசோவ் கிராமத்தை சேர்ந்தவர் 33 வயதான மைக்கேல் பிராசெக் தன்னுடைய வீட்டில் கூண்டுகள் அமைத்து 9 வயதான ஆண் சிங்கம் மற்றும் 2 வயதான பெண் சிங்கத்தை வளர்த்து வந்துள்ளார்.
இனப்பெருக்கம் செய்யும் நோக்கில், சிங்கங்களை வளர்த்து வந்த அவர் அதற்கான முறையான உரிமங்கள் எதையும் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த கிராம நிர்வாகம் அவருக்கு ஏற்கெனவே அபராதம் விதித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், மைக்கல் பிராசெக், தன்னுடைய பெண் சிங்கத்துடன் நடை பயிற்சிக்கு சென்றபோது, அந்த வழியாக சைக்கிளில் சென்ற நபரை சிங்கம் தாக்கியமை குறிப்பிடத்தக்கது.
எனினும் செக் குடியரசின் சட்டப்படி, எந்த விலங்குகளையும் கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தக்கூடாது என்பதால், அவை வேறு இடத்துக்கும் மாற்றப்படவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல உணவுவைப்பதற்காக கூண்டுக்குள் சென்ற மைக்கல் பிராசெக்கை, ஆண் சிங்கம் கடித்து குதறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.