(UTV|COLOMBO) முட்கம்பி முகாமுக்குள் முடங்கிக்கிடந்த தமிழ் மக்கள் கூட தனது அரசியல்பயணத்தில் இணைந்து பலம் சேர்த்துள்ளதாகவும் , முஸ்லிம்கள் மாத்திரமன்றி இந்து ,கிறிஸ்தவ , பௌத்த சகோதரர்களும் மக்கள் காங்கிரசின் வளர்ச்சிக்கு வலுவூட்டி வருவதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார், அல் மதீனா முஸ்லிம் பாடசாலையில் நடைபெற்ற “மதி நா” புத்தக வெளியீடு மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் (16) கலந்து கொண்டார்.
அதிபர் பிலால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாகாண கல்விப்பணிப்பாளர், மன்னார் பிரதேசசபை தலைவர் முஜாஹிர், மாந்தை மேற்கு பிரதேச சபை தலைவர் சந்தியோகு, முன்னாள் பிரதியமைச்சர் சுந்தரமூர்த்தி அபூபக்கர், இரணை இலுப்பைக்குளம்பங்கு தந்தை, வவுனியா நகரசபை உறுப்பினர்களான பாரி, லரீப், பிரதேச சபை உறுப்பினர்களான சபீல், அருணாசலம், அமைச்சரின் இணைப்பாளர் ரியாப், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேசத்திலேயே முதன் முதலாக மீள் குடியேற்றம் தொடங்கப்பட்டது. மீள் குடியேற்ற அமைச்சராக இருந்த போது மெனிக் பார்ம் முகாமில் அண்ணன் செல்லத்தம்பு உட்பட இன்னும் சில பிரமுகர்கள் என்னிடம் வந்து “முகாம் வாழ்க்கையில் இருந்து தமக்கு விடிவு பெற்று தர வேண்டுமெனவும், தமது பிரதேசமான மாந்தை மேற்கில் குடியேற்றத்தை ஆரம்பிக்குமாறும் வேண்டினர்.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ,முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோருடன் பேசி பல கஸ்டங்களுக்கு மத்தியிலே தான் குடியேற்றத்தை தொடங்கினோம். அகதிகளை முடிந்தளவில் தமது பழைய வாழ்விடங்களில் அகதிகளை மீளக்குடியேற்றுவதிலும் மெனிக் முகாமில் வாழ்ந்த மக்களுக்கு அன்றாட உணவு மற்றும் அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுப்பதிலும் முடிந்தளவு உதவி இருக்கின்றோம்.
அன்று செல்லத்தம்பு அண்ணனுடனும் அவரை சார்ந்தோருடனும் ஏற்பட்ட அறிமுகமும் அதனை தொடர்ந்து எங்களை அவர்கள் புரிந்து கொண்டதனாலும் எமது அரசியல் பயணத்தில் இணைந்து கொண்டனர்.
2011 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலில் அவரது தலைமையில் மாந்தை மேற்கில் எமது கட்சி சார்பில் 10தமிழர்கள் போட்டியிட்ட போதும் ஒருவருமே வெற்றி பெறவில்லை. அந்த குட்டித்தேர்தலில் ஐந்து முஸ்லிம்கள் மாத்திரமே எமது கட்சியில் வெற்றி பெற்றனர். அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் வேறு சித்தாந்தங்களில் இருந்தனர். செல்லத்தம்பு ஐயாவும் அவரது அணியினரும் தோல்விகளை கண்டு துவளாது தொடர்ந்தும் எம்முடனேயே பயணித்ததன்
விளைவே இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் மாந்தை மேற்கில் 13 வட்டாரங்களில் 11 வட்டாரத்தில் மக்கள் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அண்ணன் செல்லத்தம்பு தவிசாளரானார். மீள் குடியேற்றம் என்பது அப்போது இலகுவாக இருக்கவில்லை கட்டிடங்களோ , பாடசாலைகளோ இருக்கவில்லை, மொத்தத்தில் மக்கள் குடியேறுவதற்கான எந்த விதமான வசதிகளும் இல்லை. எங்கு பார்த்தாலும் ஏகத்திற்கு காடுகளே காணப்பட்டன. இரணைஇலுப்பக்குளம் – காக்கையன்குளம் பிரதேசத்தில் நாங்கள் மீள் குடியேற்றத்தை முன்னெடுத்த போது பட்ட கஷ்டங்கள் சொல்ல முடியாதவை. நாங்கள் பாடசாலைகளை ஆரம்பிப்பதிலும் ஆசிரியர்களை வரவழைப்பதிலும் மிகவும் சிரமப்பட்டோம். இருந்த மாணவர்களை கொண்டு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் ஆசிரியர்கள் பெரும் தட்டுப்பாடாக இருந்தது. இந்த நிலையிலே தான் சுமார் 530ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கி ஓரளவு ஈடு செய்தோம்.
காக்கையன்குளம் வரலாற்றை தொகுத்து அதிபர் பிலால் மிகவும் துல்லியமாகவும் தெளிவாகவும் நூலொன்றை ஆக்கியுள்ளார். இந்த முயற்சியை மேற்கொண்ட அவரையும் அவருக்கு உறுதுணையாக நின்றவர்களையும் பாராட்டுகின்றேன்.
புத்தகத்தை எழுதுவது என்பது சாமான்யமான ஒரு காரியமல்ல , அவ்வாறு எழுதினாலும் அதனை உருப்படுத்தி, வெளியிடுவது என்பது மிக மிக கஷ்டமான பணி என்பதை உணர்வேன். சிலர் வருடக்கணக்கில் எழுதி வைத்துக்கொண்டு வெளியிட முடியாது இருக்கின்றனர். அந்த வகையில் இந்த பாடசாலையில் இவ்வாறான ஒரு நூலை வெளியிட்டு இருப்பது மகிழ்ச்சி தருகின்றது.
இந்த பிரதேசம் இப்போது பாரிய மாற்றங்களை கண்டிருக்கின்றது. அரசியலில் நாம் தாக்குப்பிடிப்போமா? என்று கூட அப்போது சிந்தித்ததுண்டு, முன்னாள் பிரதியமைச்சர் அபூபக்கர் நமக்கு நல்ல எடுத்துக்காட்டு. அவருடன் இணைந்து பணியாற்றி இருக்கின்றேன்.
அவரது பண்புகளையும் பணிகளையும் நேரில் கண்டிருகின்றேன். அவரிடம் கற்ற விடயங்கள் பல இருக்கின்றன. அவரை கூட பலர் விமர்சித்திருகின்றனர். பொதுவாக அரசியல் வாதிகள் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவது வழமையே. எனினும் எம்மைப்பொறுத்தவரையில் விமர்சனகளுக்கு மத்தியிலே தான் தாக்குப்பிடிக்கின்றோம். என்று அமைச்சர் தெரிவித்தார்.
-ஊடகப்பிரிவு-