Trending News

(VIDEO)”பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து வில்பத்து புரளிகளுக்கு முடிவுகட்டுங்கள், ரிஷாத் பாராளுமன்றில் கோரிக்கை”

(UTV|COLOMBO) வில்பத்துவில் ஓரங்குல நிலத்தையேனும் நானோ அல்லது நான் சார்ந்த சமூகமோ அழித்திருந்தால் எந்தத் தண்டனையையும் ஏற்பதற்கு தயாரெனவும் இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடச் செய்ய சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இதன் உண்மையை நிலையை மக்களுக்கு தெளிவு படுத்த உதவ வேண்டுமென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றில் இன்று (22) தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸநாயக்கவின் வாய் மூல வினா ஒன்றிற்கு பதிலளிக்கையில், தற்போது மீண்டும் பூதாகரப்படுத்தப்படும் வில்பத்து விவகாரம் தொடர்பிலும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

சுயாதீன ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் அல்லது சபாநாயகர் தலைமையில் தெரிவுக்குழு ஒன்றை நிறுவி, இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென அமைச்சர் பாராளுமன்றில் வலியுறுத்தினார்.

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளின் பின்னர், கண்டி தலதா மாளிகைக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் நாங்கள் சென்றிருந்த போது, மகாநாயக்க தேரர், வில்பத்து தொடர்பில், என்னிடம் கேள்வியெழுப்பி அது சம்பந்தமான உண்மை நிலைகளை கேட்ட போது, நான் தெளிவு படுத்தினேன். சங்கைக்குரிய மகாநாயக்க தேரரிடம் புதிய ஆணைக்குழுவை நிறுவி இதன் உண்மைத்தன்மைகளை வெளிக்கொணருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

”நாங்கள் நிரபராதிகள், வில்பத்து அநுராதபுரத்திற்கும்- புத்தளத்திற்கும் இடையில் உள்ளது, நான் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவன், புலிகளால் விரட்டப்பட்ட அகதி, அகதி முகாமிலிருந்தே பாராளுமன்றத்திற்கு வந்தவன், எனது தந்தையார் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ இருந்தவரல்ல, நான் பாதிக்கபட்டப் சமூகத்திலிருந்து வந்ததால், நான் சார்ந்த சமூகத்தின் பிரச்சினைகளுக்காக குரல் எழுப்புவதும் அதனை தீர்த்து வைப்பதுமே எனது கடமை, அதனையே நான் செய்கின்றேன்.” இவ்வாறு கூறினார்.

”வட மாகாண முஸ்லிம் அகதிச் சமூகத்திற்கு புகலிடம் தந்த புத்தள பிரதேசத்தில் இடம்பெறும் பிழையான நடவடிக்கைகளை எங்களால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது, இந்த மாவட்டம் ஏற்கனவே அரசின் அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் மாசுபடுத்தப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையம், சீமெந்துத் தொழிற்சாலை என இன்னோரன்ன திட்டங்கள் வலிந்து இந்த பிரதேசத்தில் திணிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்றார் அமைச்சர்.

தற்போது மீண்டும் இந்த மாவட்டத்தை ஒரு சூழல் பாதிப்பை உருவாக்கும் வகையில், கொழும்பிலிருந்து 170 கி.மீ. தூரத்தில் உள்ள அறுவைக்காட்டில் குப்பைகளைக் கொண்டு சென்று புதைக்கின்றனர். நாங்கள் தொடர்ச்சியாக இந்த விடயத்தை தடுப்பதில் தீவிரமாக இருக்கின்றோம். அண்மைய இரண்டு வாரமாக குப்பைத்திட்டத்தை எதிர்க்கும் வகையில் பாராளுமன்றிலும் அமைச்சரவையிலும் வெளியிடங்களிலும் நாங்கள் கருத்துக்களை கூறியும் இதனை தடுக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதன் விளைவாகவே அதனை திசை திருப்பும் வகையில் வில்பத்து புரளியை மீண்டும் கிளப்பியுள்ளனர். இது எதிர்க்கட்சியினால் செய்யப்படவில்லை.

இனவாதிகளை இந்த விடயத்தில் சிலர் தூண்டிவருவதாகவே எமக்கு படுகிறது. ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கடந்த சில நாட்களாக நான் மிக மோசமாக விமர்சிக்கப்படுகின்றேன்.

முன்னாள் அமைச்சர் அநுரபிரயதர்சன யாப்பா சுற்றாடல் அமைச்சராக இருந்த போது, 2012ஆம் ஆண்டு முசலிப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்த காணிகள் கொழும்பிலிருந்து கொண்டு GPS தொழில்நுட்ப முறை மூலம் வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு வர்த்தமானி அறிவித்தல் மூலம் சுவீகரிக்கப்பட்டன. உண்மையில் முஸ்லிம்கள் பரம்பரையாக வாழ்ந்த பாரம்பரிய கிராமங்கள் பல இந்த வர்த்தமானிக்குள் உள்ளீர்க்கப்பட்டன.

இந்த வேளை, அங்கு முன்னர் வாழ்ந்த முஸ்லிம்கள் புத்தளத்தில் அகதிகளாக இருந்தனர் என்பதை ஞாயபகப்படுத்த விரும்புகின்றேன்.நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவினால் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் ஊடக மெனிக் பாமில் இருந்த 3 இலட்சம் அகதிகளை குடியேற்றினேன்.

பின்னர் வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களை நான் குடியேற்ற விழைந்த போது அமைச்சுப்பதவி மாற்றப்பட்டு கைத்தொழில் அமைச்சராக்கப்பட்டேன்.

வன்னி மக்களின் பிரதிநிதி என்ற வகையில் எனது சமூகத்தைச் சார்ந்த இந்த மக்களை குடியேற்றுமாறு நாம் விடுத்த கோரிக்கையை ஏற்று செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் மூலம் அகதி மக்களை குடியேற்ற நடவடிக்கை எடுத்தோம். எனினும் குடியேறுவதற்கு எந்தவிதமான காணிகளும் இல்லாத நிலையில் இங்கு முன்னர் வாழ்ந்த இந்த மக்களுக்குச் சொந்தமான, வனவள திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் 2800 ஏக்கரை விடுவித்து குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மீள்குடியேற்றத்திற்கென உருவாக்கப்பட்ட செயலணியினால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரை ஏக்கர் காணி வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது.இக்காணிகள் முறைப்படி சட்டரீதியாகவே விடுவிக்கப்பட்டன.

முசலி பிரதேசத்தில் உள்ள பாலைக்குளி மறிச்சுக்கட்டி, கரடிக்குளி ஆகிய முஸ்லிம்களின் பூர்வீக கிராமங்களுக்கும் வில்பத்துவுக்கும் துளியளவு எந்தத் தொடர்புமில்லை. காடாக கிடந்த மறிச்சுக்கட்டிக்கும் சிலாவத்துறைக்கும் இடையில் இராணுவம் போக்குவரத்து பாதையை உருவாக்குவதற்காக இருமருங்கிலும் காடுகளை அழித்தது. அதற்கு அணித்தாகவே விடுவிக்கப்பட்ட காணிகள் மக்களுக்கு வழங்கப்பட்டன அதுவும் பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகள் ஊடாக காணிகள் சட்டரீதியாக வழங்கப்பட்டன. பிரதேச செயலகத்தின் ஊடாகவே அவை துப்பரவாக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.

அதன் பிறகு இற்றையவரை அந்த மக்களுக்கு எந்த காணிகளும் வழங்கப்படவில்லை. இந்த அரசாங்கமும் வழங்கவில்லை.

தற்போது ஊடகங்கள் மூலம் கட்டவிழ்க்கப்பட்டுவரும் மிகவும் மோசமான பிரசாரங்கள் சுத்தப்பொயானதாகும் சமூக வலயத்தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் பெரிய பிரளயத்தை கிளப்பி என்னையே மீண்டும் மீண்டும் குறி வைத்துக்கொண்டு செயற்பட்டு வருகின்றனர். இதனை யார் செய்கின்றார்கள் என்று நாட்டு மக்களுக்குத் தெரியும். வில்பத்து என்பது எமது நாட்டின் அருஞ்செல்வமாகும் நாங்கள் இந்த பொக்கிஷத்தை எந்தக்காலமும் அழிக்கவில்லை, அழிக்கவும் எண்ணவில்லை.

24 மணித்தியாலயத்தில் புலிகளால் விரப்பட்ட சமூகமே எமது சமூகம். நாங்கள் குற்றமிழைக்காமலே தண்டிக்கப்பட்டவர்கள். கடந்த சில நாட்களாக தொலைக்காட்சிகளில் மோசமான பிரச்சாரங்களை ஊடகங்கள் எடுத்துச் செல்வதோடு மாத்திரமில்லாது மதகுரு ஒருவர் இல்லாத பொல்லாத இட்டுக்கட்டப்பட்ட பொய்களையெல்லாம் விஷம் போல் கக்கி வருகின்றார். வில்பத்துக்கும் எங்கள் பாரம்பரிய பூமிக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று நான் இந்த உயரிய சபையில் வலியுறுத்துகின்றேன். வில்பத்து பிரதேசத்தில் உல்லாச பயண ஹோட்டல்கள் இருக்கின்றன. அது மாத்திரமின்றி அண்மைய நாட்களில் கஜூவத்தை என்ற பிரதேசத்தில் காடுகள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவைகளை யார் செய்வது என்று தேடிப்பாருங்கள். எமது மக்களுக்கும் இந்த சம்பவங்களுக்கும் என்பதை பொறுப்புடன் கூற விரும்புகின்றேன்.

அமைச்சர் பேசி முடிந்ததும் ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸ்ஸநாயக்க மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறியதாவது ;

பசில் ராஜபக்‌ஷவினால் உருவாக்கப்பட்ட அந்த குழுவில் எனக்கும் தொடர்பு இருப்பதால் நான் சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டும்

எங்கள் கோரிக்கையை ஏற்றே மீள் குடியேற்றத்திற்கென புதிய செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது. பலாத்காரமாகவோ, வலுக்கட்டயாமகவோ இந்தக்குழு கையாளப்படவில்லை. மனிதாபிமான அடிப்படையிலயே இந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அதுமாத்திரமின்றி மக்களுக்கு வழங்கப்பட்ட அரை ஏக்கர் காணிகளுக்கு மேலதிகமாக எந்தக்காணிகளும் அபகரிக்கப்படவில்லை. என்று அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கருத்துக்கு பிறகு, அமைச்சர்களான லக்‌ஷமன் கிரியல்ல மற்றும் ஜோன் அமரதுங்க ஆகியோர் அமைச்சரின் கூற்றுக்களுக்கு ஆதரவளித்து பேசினர்.

(ஊடகப்பிரிவு)

 

 

 

 

 

 

 

Related posts

Peace education introduced in Guatemala, Cambodia, Sri Lanka, Iraq in cooperation with HWPL

Mohamed Dilsad

எந்த மாற்றம் செய்தாலும் நாட்டை கட்டியெழுப்ப இந்த அரசாங்கத்தால் முடியாது

Mohamed Dilsad

John Wick scribe returns for third helping

Mohamed Dilsad

Leave a Comment