Trending News

எதிர்வரும் தேர்தல்களில் தீர்மானிக்கும் சக்திகள் எது? சிங்களக் கடும் போக்கா, சிறுபான்மை வாக்கா?

(UTV|COLOMBO) ஶ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனையின் வேட்பாளரை ஏற்கப் போவதில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திட்ட வட்டமாக அறிவித்துள்ளது. கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர இந்த அறிவிப்பைச் செய்ததால் கட்சியின் உத்தியோகபூர்வ அறிவிப்பாகவே இதைக் கருத வேண்டும். மஹிந்த எனும் தனிநபரைக் குறிவைத்துக் கொண்டு வரப்பட்ட 19 ஆவது திருத்தத்தின் எதிரொலிகள் இன்னும் எந்தத் திசைகளைத் திருப்பித்தாக்குமோ தெரியாது.தற்போதைக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மாத்திரம் மத்தளம் போல் இரண்டு பக்கமும் திருப்பித் திருப்பித் அடித்துக் கொண்டிருப்பது மட்டும் உண்மை.

19 ஆவது திருத்தத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே. கட்சி இரண்டாகப் பிளவு பட்டு ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன உருவானமை,கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 17 சபைகளை மாத்திரம் கைப்பற்றி நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டமை, இந்தக் கட்சியின் தலைவரான ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு கடிவாளம் இடப்பட்டமை, எதிர்வரும் தேர்தலில் தனித்து நின்று ஜெயிக்க முடியாதுள்ளமை எல்லாம் 19 ஆவது திருத்தத்தால் இக்கட்சிக்கு வந்த பின்னடைவுகள். ஐக்கிய தேசியக் கட்சியின் சாயலில் வளர்ந்து அதிகாரங்களூடாகக் கட்சியை வளர்க்கும் திட்டம் இடையில் தகர்ந்து போனமைக்கு 2018 நவம்பர் 26 ஆட்சிக் கவிழ்ப்பே காரணமாகியது.

ஒரு வேளை மைத்திரியை நடுத் தெருவில் நிற்க வைக்க எவரால் இந்த யுக்தி கையாளப்பட்டதோ என்ற எண்ண அலைகள் பலரைத் தாக்குவதும் உண்டு. ஐக்கிய தேசியக் கட்சியுடன் நட்பு தொடர்ந்திருந்தால் ஒருவாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிகாரத்தில் நிலைத்திருக்க லாம்.ஆனால் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியைத் தவிர எதிர்காலத்தில் எவரும் அதிகாரத்தில் நிலைக்க முடியாதெனச் சிலர் இப்போதிருந்தே ஆரூடம் கூறுகின்றனர்.

மொத்தமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 240 ஐக் கைப்பற்றிய பின்னரான கணிப்பீடுகளே இவை. ஆனால் இத்தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்கு களில் 45 வீதத்தையே மஹிந்த தரப்பிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றதாகச் சிலர் வீதாசாரம் காட்டி விகிதாசாரத் தேர்தலில் இது வெற்றியில்லை என்கின்றனர்.

இக் கட்சிக்கு எதிராக 55 வீத வாக்குகள் உள்ளதாகக் கூறும் ”ரணிலின் டையமண்ட்ஸ் எலைன்ஸ்” இவ்வாறான பாரிய அரசியல் கூட்டே எமது எதிர்காலத் தேர்தல் வியூகம் என்று இப்போதிருந்தே வேலைத்திட்டங்களில் இறங்கியுள்ளது. ரணிலின் இந்த எலைன்ஸ் மிக எளிதாக வெல்ல வேண்டுமானால் மைத்திரி,மஹிந்த கூட்டு தோல்வியடைய வேண்டும்.எவரும் எதிர்பாராத வகையில் இப்போது தோல்வியின் விளிம்புக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன என்பன வந்துள்ளன.

ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனை என்ற பொதுப் பெயரில் இக்கட்சிகள் உருவாக்கவுள்ள தேர்தல் கூட்டு பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்பாரக்கப்பட்டது. இவ்வாறு ஒரு கூட்டு உருவாவது இந்நாட்டு மக்களில் முதலாவதாக ரணிலின் வயிற்றையே கலக்கியிருக்கும்.தன்னை வைத்தே இந்தத் தேர்தல் அம்பு செய்யப்படுவதாக ரணில் நினைப்பதில் தப்பும் இல்லை.ஆனால் இவ்வாறான ஒரு கூட்டு கைகூடினாலும் வெற்றிவாய்ப்புக் கைகூடுமா? என்பதில் இக்கூட்டணி நிறுத்தப் போகும் ஜனாதிபதி வேட்பாளரிலேயே தங்கியுள்ளது.

கோட்டாபய ராஜபக்‌ஷவை நிறுத்தினால் சிறுபான்மையினரின் வாக்கும், மைத்திரியை நிறுத்தினால் சிங்களவர்களின் வாக்கும் இக்கூட்டணிக்கு கிடைக்காதென்பது சிலரின் வாதம். ஏற்கனவே மஹிந்த பெற்றுள்ள 45 வீத வாக்குகளில் எண்பது வீதமானவை (35) சிங்களவர்களின் வாக்குகளாகும். எனவே 75 வீத சிங்கள வாக்குகளில் எஞ்சியுள்ள 40 வீதத்தில் ஐக்கிய தேசிய கட்சி எத்தனை வீதத்தைப் பெறும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எவ்வளவு பெறும் என்பதில்தான் தீர்மானிக்கும் சக்தி யார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். எஞ்சியுள்ள 40 வீத சிங்கள வாக்குகளில் 30 வீதத்தை ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொண்டதாக வைத்தால் பத்து வீதத்தை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பெறு மென்பதே கணிப்பீடு.

இந்தப் பத்து வீதத்தையும் மைத்திரி மஹிந்தவுக்கு வழங்கினால் சிறுபான்மையினரின் எஞ்சியுள்ள பத்து வீத வாக்குகளுடன் 55 வீதமாகும்.இதுதான் ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனயின் கணக்கு.ஒருவாறு மைத்திரி-மஹிந்த கூட்டு முறிந்தால் பத்து வீத வாக்குகளுக்காக ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன தனியாக களமாடும்.இந்த ஆட்டத்தில் பெரியளவில் சிறுபான்மையினரின் விக்கட்டுக்களை வீழ்த்த முடியாது என்பது மஹிந்தவுக்குத் தெரியாதல்ல.இதற்காகவே அவர் ஐ.நா,ஜெனீவா அமர்வுகளைக் கையில் எடுத்துள்ளார். தன்னைத் தோற்கடித்த கையோடு இந்த அரசு 2015 ஒக்டோபரில் செய்த வேலைகளைப் பட்டியல் படுத்துவார் ராஜபக்‌ஷ. இறுதி யுத்தத்தில் சிங்கள இராணுவம் ஈட்டிய வெற்றியை படுகொலையாகக் காட்டியுள்ளனர். சிவிலியன்கள் மீது குறி வைத்து தாக்கியமை, பலாத்காரக் காணாமல் போதல், பாதிக்கப்பட்டோருக்கான மனிதாபிமான உதவிகளை படையினர் தடுத்து நிறுத்தியதாக மைத்திரியும் ரணிலும் ஐநாவில் இணங்கியுள்ளனர் என்பார்.

இது மட்டுமா இவ்வாறான குற்றங்கள் புரிந்த எமது சிங்கள இராணுவத்தை விசாரிக்க சர்வதேச நீதிமன்றத்துக்கும் அரசாங்கம் ஒத்துழைத்துள்ளது. hybrid court இந்த நீதிமன்றத்தில் வௌிநாட்டு நீதிபதிகள் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் செல்வாக்கிலுள்ள நீதிபதிகளே எமது சிங்கள இராணுவத்தை விசாரிப்பர். இது மட்டுமா! போதாததற்கு office for missing person காணாமல் போனோருக்கான அலுவலகத்தை 2018 இல் ரணில்,மைத்திரி அரசாங்கம் திறந்துள்ளது.

பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள்,சிறைச்சாலைகளைத் தேவையான நேரத்தில் சோதனையிட உத்தரவிடும் அதிகாரமும் இந்த அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதையும் தாண்டி தகவல் அறியும் சட்டமூலத்தில் தேவையான ஆவணங்களை தேவையான நாடுகளுக்கு வழங்கவும் ரணில் மைத்திரி அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது என்பார்.சிங்கள இளைஞர்கள் (இராணுவம்) எந்த நாட்டில்,எந்த நீதிபதிகளால் விசாரிக்கப் படுவர் என்பதே சூன்யமாகியுள்ளது. இந்த நிலையிலிருந்து நாட்டையும் எமது இராணுவத்தையும் மீட்டெடுக்க ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனைக்கு வாக்களியுங்கள் என்பார் மஹிந்த.

இதனால் ஏற்கனவேயுள்ள 35 வீதத்துக்கு மேலதிகமாக எத்தனை வீத சிங்கள வாக்குகளைப் பெறுவார் என்பதிலும் சிறுபான்மையினரின் (தமிழ்,முஸ்லிம்) 25 வீதத்தில் எத்தனை வீதம் கிடைக்கும் என்பதிலுமே வெற்றியின் எதிர்காலம் தங்கியுள்ளது. ஏற்கனவே மஹிந்த தரப்பினர் 10 வீத சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற்றுள்ளமை உள்ளூராட்சித் தேர்தலில் நிரூபணமானவை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
(சுஐப் எம். காசிம்)

Related posts

Appointment of new Secretaries to Ministries likely today

Mohamed Dilsad

Sri Lanka likely to receive rain today

Mohamed Dilsad

Vijay Sethupathi to play cricketer Muttiah Muralitharan

Mohamed Dilsad

Leave a Comment