Trending News

போர்க்களங்களை திரும்பிப் பார்க்கும் இக்பால் அத்தாஸின் பதில்கள்; பலவந்த வெளியேற்றம் பழிவாங்கலா? பாதுகாப்பா?

(UTV|COLOMBO) அரசியல்வாதிகள்,படைத்தளபதிகள் தளபதிகள் போராட்ட இயக்கங்களின் முக்கியஸ்தர்களுடன் ஊடகவியலாளர்கள் வைத்துக் கொள்ளும் உறவுகள்,தொடர்புகள் எழுத்துத்துறைக்கு எவ்வாறு பங்களிக்கும்,செய்தித் தேடலுக்கு எப்படி உதவும் என்பது சந்தர்ப்பங்களைப் பொறுத்ததா? முஸ்லிம் மீடியா போரம் கொழும்பில் ஏற்பாடு செய்த புலனாய்வுத்துறை முன்னோடி எழுத்தாளரும், உளவுத்துறை இரகசியங்களை எதிர்வு கூறுபவருமான இக்பால் அத்தாஸுடனான சந்திப்பில் கலந்து கொண்ட நான், இச்சந்தேகங்களால் புலிகளின் போராட்டக் களங்களை பின்னோக்கிப் பார்க்கும் நிலைக்கும் தள்ளப்பட்டேன் .

எங்கள் பலவந்த வௌியேற்றத்தின் காரணங்கள் தெரியும் வரை மூன்றாம் இனமாவதற்கான தேவை
எங்களுக்கு இருந்ததில்லை.இதைத் தெரிந்து கொள்ளும் வரை வாழ்நாளின் அந்திம கால எமது மூச்சுக்களும் மூன்றாம் தேசத்துக்காகவே உயிர்வாழும். வடபுலத்து முஸ்லிம்களின் பலவந்த வௌியேற்றம் எந்தப் பின்னணியில் நடந்ததென புலனாய்வுத்துறை எழுத்தாளர் இக்பால் அத்தாஸிடம் கேட்டேன். உளவுத்துறை இரகசியங்களைத் தேடித்துருவுவதில் இக்பால் அத்தாஸுக்கு சிறந்த தேர்ச்சியுள்ளது. இவரது தேடல்கள்,எதிர்வுகூறல்களை வைத்தே, புலிகளும், அரசும் அடுத்த கட்ட வியூகங்களுக்குத் தயாராவதுண்டு.புலிகளின் உளவுத்துறை இரகசியங்களை எதிர்வுகூறுவதிலும் இராணுவத் திட்டங்களை ஆரூடம் கூறும் அவரது அறிவும் இந்தக் கேள்வி யை அவரிடம் கேட்கத் தூண்டியது.

“ரிவிபல” இராணுவ நடவடிக்கையால் மீட்கப்பட்ட ஒட்டுசுட்டான் பிரதேசத்திலிருந்த சிவன்கோயிலை மீளத்திறக்கும் நிகழ்வுக்கு 1998 மார்கழி 06 இல் கொழும்பில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாள ர்களில் நானும் இருந்தேன். வௌிநாட்டு ஊடகவியலாளர்களும் வந்ததால் எங்களைப் பத்திரமாகக் கொண்டுசெல்வதில் அரசாங்கம் முழுப்பலத்தையும் பிரயோகித்திருந்தது. இரத்மலானை விமான நிலைத்திலிருந்து புறப்பட்ட எமது விமானம் அனுராதபுரத்தில் தரையிறங்கியது. அங்கிருந்து உலங்கு வாநு ர்திகளில் நெடுங்கேணிக்கு கொண்டுசெல்லப்பட்டோம்.பின்னர் கவச வாகனங்களில் 14கிலோமீட்டர் தொலைவிலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டானுக்குச் சென்றோம்.

தமிழீழ மண்ணுக்கு வரும் இராணுவத் தளபதிகள் அல்லது சிங்கள அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் புலிகளின் வழமையான பாணியில் ஆட்டிலறி,எறிகணைத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் எங்களுடன் வந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அனுருத்த ரத்வத்தையின் மெய்ப்பாதுகாவலர்கள் உட்பட சுமார் 22 இராணுவ வீரர்கள் காயமுற்றனர். இந்தக் கள நிலவரத்தை விவரித்து எழுதியிருந்த இக்பால் அத்தாஸ், “கவச வாகனங்கள் விரைந்து சென்றதில் கிளம்பிய தூசுகள் விண்ணைத் தொட்டதும், புலிகளின் எறிகணைகள் எழுப்பிய சுவாலைகள் விண்ணை முட்டவும் ஒட்டுசுட்டான்,நெடுங்கேணி மேகங்கள் கரி மழைபொழிய அப்பிரதேசத்து நிலங்கள் செந்நீரால் நீராடி நனைந்திருந்தன” என வர்ணித்திருந்தார். இரத்த வௌ்ளத்தில் படையினர் மட்டுமே கிடந்தனர். ஊடகவியலாளர்களைப் பத்திரமாகப் பாதுகாத்தது இராணுவம் .இது போன்ற பல விபரீதக்களங்களைக் கண்டிருந்த இக்பால் அத்தாஸின் பதில்கள் எப்படியிருக்குமென நான் பட படத்திருந்தேன்.

பலவந்த வௌியேற்றத்தில் இனச் சுத்திகரிப்புச் சிந்தனை இருக்கக் கூடாதென்ற எனது வேண்டுதல் தமிழ்த் தாய் மண்ணிலும் இழையோடியிருந்தது.

காரணத்தைச் சொன்னால் புலிகள் கொன்று விடுவார்கள் என்ற அச்சமும் இப்போது அவருக்கு இல்லை.இதனால் உண்மையான பதிலைப்பெற எனது ஆதங்கம் விழைந்து நிற்கையில், காட்டிக் கொடுத்ததாக் கூறப்படுவதா? காரணம் என்று கேட்டுவிட்டேன்.உடனே “யூ,ஆர், கரெக்ற்” இதற்காக மன்னிப்பும் கேட்டுவிட்டனர் என்றார் இக்பால் அத்தாஸ்.

புலிகளே மன்னிப்புக் கேட்டு விட்ட நிலையில் சிறுத்தைகளின் உறுமல்கள் இன்னும் ஓயவில்லையே? ஓய்ந்தால் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் முடிந்திருக்குமே என்றது எனது ஆதங்கம்.ஆனால் அத்தாஸின் பதிலில் எந்தப்புரிதலும் எனக்கு ஏற்படவில்லை.காட்டிக் கொடுப்பு…. எப்படிச்சாத்தியம். கிழக்கில் ஒருவேளை சாத்தியப்பட்டிருந்தாலும் தொண்ணூறு வீதத் தமிழர்களுக்குள் வளைக்கப்பட்டுள்ள வடபுல முஸ்லிம்களுக்கு இது எப்படிச் சாத்தியம்………

ஒரு வேளை ஓரிருவர் தனிப்பட்ட பழிவாங்கல் மனோ நிலையில் காட்டிக்கொடுத்திருப்பர். இதற்குச் சமூகச் சாயம் பூசுவோர் தமிழ்பேசும் மக்களுக்காக எப்படிப் போராட முடியும்? காட்டிக் கொடுப்புக்கு புலிகள் வழங்கும் மரண தண்டனை யை நிறைவேற்றியிருந்தாலும் முஸ்லிம் தரப்பில் இதன் நியாயம் நிலைத்து,தமிழ்பேசும் மக்கள் என்ற பொதுப் போராட்ட அடையாளம் பலமடைய வழி பிறந்திருக்கும்.இந்த வழி பிறக்காத விதியையே இப்போது இரு சமூகங்களும் நொந்து கொள்கின்றன.இந்த வழி பிறக்கக் கூடாதென்பதில் இராணுவத்தரப்புக்கு இருந்த விழிப்புகள் பற்றி கடந்தவாரம் நிந்தவூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சந்தித்த காரைதீவு தமிழ் தோழரின் விளக்கவுரைகள் எனது பார்வையின் வீச்சுக்களை தமிழ்மொழித் தாய் மண்ணில் துழாவி விட்டிருந்தன.

படையினர் சிலருக்கு முஸ்லிம் பெயர்களிட்டு,அல்லது கைதான போராளிகளை முஸ்லிம் பெயரில் அழைத்து கொத்துக் கொத்தாக சுற்றிவளைக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை அடையாளப்படுத்த இராணுவம் கையாண்ட யுக்திகள் பொது மொழிச் சமூகத்தின் பொருத்தங்களைப் பிரித்தெடுத்ததாகச் சொன்னார் அவர். சிங்கள இராணுவத்துடன் வந்த முஸ்லிம் இளைஞர்களே எமது பிள்ளைகள், கணவன்மார்கள், சகோதரர்களை படையினருக்குப் பலியாக்கியதாக தமிழ் தாய்மார்கள்,சகோதரிகள் நம்பிக்கையூட்டப் பட்டனர்.பொதுவாக தமிழ் சகோதரர்களும் அறியாமையால் இந்த நம்பிக்கையில் முஸ்லிம்களை விரோதிகளாக நோக்க நேர்ந்தது.

இவ்வாறு படை அதிகாரி ஒருவருக்கு முனாஸ் என்ற முஸ்லிம் பெயர்வைத்து, காரைதீவிலிருந்த அதிகமான தமிழ் இளைஞர்களை வதை முகாமுக்கு அழைத்துச் சென்ற சம்பவம் பற்றியும் அவர் எனக்கு எடுத்துரை த்தார் . தமிழ் இளைஞர்களை பலிக்களத்தில் நிற்கவைத்து கிரனைட் குண்டெறிந்து கொல்லமுயன்றபோது கீழே படுத்துக் கொண்டு தான் தப்பியதாகவும் வெடில் பட்டு குற்றுயிராய்க் கிடந்தோர் துடிதுடிக்கத், தான்மட்டும் செத்துக்கிடந்ததாக நடித்து உயிர் பிழைத்ததாகவும் அவர் விளக்கினார்.

இந்தப் போர்த் தந்திரத்தைக்கூட படையினர் கண்டுகொள்ளவில்லையே! இத்தனைக்கும் அந்த தோழர் ஈரோஸ் இயக்கத்தைச் சேர்ந்த முன்னணிப்போராளியாம். கொல்லப்பட்டது அப்பாவிகள்,தப்பித்தது இயக்கத்தவர்.ஈழப்போரின் வரலாற்றுப்பக்கங்கள் ஒவ்வொன்றும் இப்படிக் கண்ணீரால் நனைக்கப் பட்டுள்ளது.இந்தக் கண்ணீரால் நனைக்கப்பட்ட பக்கங்களில்தான் எமது விடுதலை வரலாறு நிரப்பப்பட வேண்டியுள்ளது.

தமிழரும்,முஸ்லிமும் வேறுபாடுகளை மறந்து பொது இனமென்ற புரிந்துணர்வில்தான் இது சாத்தியம்.இவ்வாறான சாத்தியங்களைச் சாதித்துக்காட்ட வடபுல முஸ்லிம்களும் தயாராகத்தானிருந்தனர்.ஆனால் காட்டிக் கொடுப்புக்காக பலவந்த வௌியேற்றம் இடம்பெற்றதாகப் புலிகள் சொன்னதையே இக்பால் அத்தாஸ் சொன்னார்.ஒருவேளை துப்பறிவதில் அத்தாஸ் இவ்விடத்தில் சறுக்கிவிட்டாரோ? அல்லது எதுவும் காரணமில்லாமல் போனதால் முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்ததாக புலிகள் ஒரு காரணத்தைக் கற்பித்தனரோ? ஆம். ஏதோவொன்றை,நினைத்துச் செய்தவினை, எங்கோ முடிந்த கதையாகி புலிகள் மன்னிப்பும் கேட்டுவிட்டனர்.

இவ்வாறு மன்னித்தவர்கள் மீண்டும் வடபுல முஸ்லிம்களை ஏற்றிருந்தால் தமிழ்பேசும் மக்கள் என்ற போராட்ட அடையாளம் பலமடைந்து வடக்கு.கிழக்கு எடுப்பார் கைப்பிள்ளையாகியிருக்காது.

மூன்றாம் இனத்துக்கான தேவைகளும் எழுந்திருக்காது,தனித்துவ சிந்தனைகள் தழைத்திருக்காது.1990 க்குப் பின்னர் 19 வருடங்கள் உயிரோடிருந்த புலிகள் முஸ்லிம்களுடன் ஓரளவு நல்லுறவைப் பேணவிரும்பினர் என்பது உண்மை .ஆனால் நல்லிணக்கத்தைப் பேண,தமிழ் பேசும் தாயகத்தில் முஸ்லிம்களை அரசியல் அடையாளத்துடன் அங்கீகரிக்கவில்லையே!!!

எனவே வடபுல பலவந்த வௌியேற்றம் திட்டமிட்ட இன அழிப்புக்கான முயற்சியாகத்தான் நடத்தப்பட்டிரு க்க வேண்டும்.இல்லாவிட்டால் புலிகளின் பாசிசச்சாயல் இன்னும் வடபுலத்துக்கு முட்டுக் கட்டையாக இருக்காதே?இதனால்தான் இக்பால் அத்தாஸின் பதிலை ஏற்க எனது மனம் மறுதலிக்கிறது.

இந்நிலைமை இன்று வேறு வடிவில் பரிணாமமெடுத்துள்ளது. அரசியலில் ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்து சிங்களப் பேரினவாதத்துக்கு சாமரம்வீசும் போக்கு. இதில் அதிக கவனமெடுப்பது முஸ்லிம் அரசியல்வாதிகள்தான். வௌிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு போரியல் குற்ற விசாரணைகளை நடத்துவது அரசியலமைப்பை மீறும் செயலென “தனித்துவக் கட்சியின் தலைவர் கூறியமை இன்று தமிழ்பேசுவோர் மண்ணில் பெரும் சர்ச்சையாகி யுள்ளது”. நிச்சயமாக இது முஸ்லிம்களின் கருத்தாக இருக்காது தனித்துவரின் தனிப்பட்ட கருத்தே” என்கிறார் சிறிதரன் எம்.பி. இவ்வாறான விடயங்களில் முஸ்லிம்கள் பக்குவமாக நடப்பதே சமூகம் சார்நலனுக்கு ஏற்புடையதாகும்.

2013 இல் மஹிந்த தரப்புடன் சென்ற சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் சமூக இயக்கங்களும் இறுதிப்போரில் மனிதப் படுகொலை எவையும் இடம்பெறவில்லை என சிங்களத்தரப்பைக் காப்பாற்றிய சம்பவங்கள் தமிழர்கள் மனதில் வேலாய்ப்பாய்ந்துள்ளது. எனவே இக்பால் அத்தாஸ் எமக்களித்த பதில் அவருடையதா? அல்லது புலிகளால் அவருக்குச் சொல்லப்பட்டதா? அல்லது வழமையான செவியேறலுாடாகக் கேட்டதைச் சொன்னாரா?

Related posts

Two illegal immigrants held at Thaleimannar sand dunes

Mohamed Dilsad

Cardi B enjoys money that comes with acting

Mohamed Dilsad

பிலிப்பைன்சில் கடும் மழை, நிலச்சரிவு – 4 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment