(UDHAYAM, COLOMBO) – 2017ம் ஆண்டு சிறுபோகத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று – வெல்லாவெளி பிரதேசசெயலாளர் பிரிவில் வேளாண்மை செய்கை தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கான நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான சிறுபோக ஆரம்பக் கூட்;டம் நேற்றைய தினம் வெல்லாவெளி கலாச்சார மத்திய நிலையத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது போரதீவுப்பற்று – வெல்லாவெளி பிரதேசசெயலாளர் பிரிவில் 23100 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக வேளாண்மை செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தின் போது கடந்த பெரும்போகத்தில் விவசாயிகளுக்குக்கிடைத்த விளைச்சல் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட நட்டத்தினை ஈடுசெய்யும் வகையிலான காப்புறுதி நட்டஈடு வழங்கல், நீர்ப்பாசனத்திட்டங்களிலுள்ள பிரச்சினைகள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதன்போது விவசாயிகளுக்குத் தேவையான விவசாயம் சார் திணைக்களங்களினாலும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. சிறுபோக விவசாய வேலைகளில் விதைப்பினை மார்ச் 15ம் திகதி நாளை ஆரம்பித்து இம்மாதம் 31ம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஆரம்பக் கூட்டத்தில் பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், சி.யோகேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான இ.நித்தியானந்தம், ஆர்.துரைரெத்தினம், கிருஷ்ணப்பிள்ளை, எம்.நடராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.