(UTV|COLOMBO) மேற்கு – மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்காக விருத்தியடைந்த மிகவும் கடுமையான சூறாவளியான “FANI” (உச்சரிப்பு “போனி”) 2019 மே 02ஆம் திகதி முற்பகல் 08.30மணிக்கு வட அகலாங்கு 16.2N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.6E இற்கும் அருகில் யாழ்ப்பாணத்திலிருந்து வட கிழக்காக ஏறத்தாழ 880 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
இத் தொகுதி வடக்கு – வடகிழக்கு திசையில் இலங்கையை விட்டு விலகி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் நாட்டில் இத் தொகுதியால் ஏற்படும் பாதிப்பு குறைவடையும் சாத்தியம் காணப்படுகின்றது.
நாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாடு, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ, மத்திய, தென், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போதுமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.