Trending News

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து என் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மைகளை வெளிப்படுத்துங்கள் – சபாநாயகரிடம் அமைச்சர் ரிஷாத் கோரிக்கை…

(UTV|COLOMBO)குண்டுத்தாக்குதல்களின் பின்னர் என் மீது சுமத்தப்படும் குற்றாச்சட்டுக்கள் மற்றும் ஏனைய சமபவங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிந்து அதனை வெளிப்படுத்தும் வகையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறு சபாநாயாகர் கரு ஜயசூரியாவிடம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றிய போது மேலும் கூறியதாவது, முஸ்லிம் என்ற பெயரைத் தாங்கி இந்த கொடிய பயங்கரவாத்தை செய்தவர்களின் பாதகச் செயலால் நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அனைவரும் மிகவும் வேதனையுடன் இருக்கின்றனர். அது மாத்திரமின்றி இந்த குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டு துன்பத்திலிருக்கின்ற அப்பாவி மக்களின் வேதனைகளில் நாங்களும் பங்குகொள்வதோடு பாதிக்கப்பட்டவர்கள் வெகுவிரைவில் குணமடைய வேண்டுமென்றும் பிரார்த்திக்கின்றோம்.

இஸ்லாமிய மார்க்கம் பயங்கரவாத்தை ஒரு போதும் வலியுறுத்திய மார்க்கம் அல்ல. அடைப்படை வாதத்தையோ பயங்கர வாத்தையோ என்றுமே இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஏனைய மதங்களையும் அவர்களின் கலாச்சாரங்களையும் மதித்து அவர்களோடு சகோதர்களாக இணங்கிப்போன வரலாறு இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு இருக்கின்றது. இப்போதும் அப்படித்தான் அவர்கள் வாழ்கின்றார்கள்.

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு மற்றும் ஈஸ்டர் தினத்தில் நடந்த குரூர தாக்குதல்களை எந்தவொரு முஸ்லிமும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. மார்க்கமும் அதற்கு அங்கீகாரம் வழங்கவும்

இல்லை. அதற்கு எடுத்துக்காட்டாகவே தற்கொலை குண்டுதாரிகளின் பூத உடலைக் கூட நாங்கள் ஏற்றுக்கொள்ளாமல் அதனை அடக்கம் செய்வதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை. எமது சமூகத்தில் இவ்வாறு எந்த இளைஞனாவது இப்படிச் சிந்தித்தால் அவர்களுக்கும் ஒரு செய்தியை தெரிவித்து அவ்வாறானவர்களின் நிலையும் இப்படித்தான் அமையும் என்பதையும் உணர்த்தியுள்ளோம்.

பயங்கரவாத்திற்கு மார்க்கமோ, நிறமோ, கட்சியோ இல்லை . சர்வதேச பயங்கரவாதம் இங்குள்ள சில இளைஞர்களையும் தம்வசப்படுத்தி இந்த காட்டுமிராண்டித்தன செயலை மேற்கொண்டு நமது நாட்டை குட்டிச்சுவராக்கியுள்ளது. இதனால் எல்லோரினதும் நிம்மதியும் இல்லாமல் போயுள்ளது. இந்த சமபவத்தை வைத்துக்கொண்டு யாராவது அரசியல் செய்வார்களாயின் அதை விட கொடுமை வேறொன்றுமில்லை . இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சு மிகவும் மோசமாக இருந்தது. அன்று ஜனாநாயக ரீதியில் செயற்படுவதற்காகவும் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுத வழியில் நாட்டம் கொள்ளக்கூடாது என்பதற்காகவுமே பெரும் தலைவர் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கினார். அவரது இறுதிக்காலத்தில் சமூகங்களை ஒன்றுபடுத்தும் தேசிய ஐக்கிய முன்னணியை உருவாக்கினார். இன்று அவரைக்கூட விமர்சிப்பது வேதனையானது.

புத்தளம் பள்ளியில் முஸ்லிம்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட போது அண்ணன் அமிர்தலிங்கம் இந்த உயர்சபையிலயே எமக்காக பேசினார் அதே போன்று இலங்கை-இந்திய ஒப்பந்த்தின் போது இந்த உயர்சபையில் இருந்த பெரும்பான்மைக் கட்சிகளைச் சேர்ந்த எம்மவர்கள் வாய்மூடி மெளனிகளாக இருந்தனர். அத்துடன் வடக்கிலிருந்து நான் உட்பட ஒரு இலட்சம் பேர் வெளியேற்றப்பட்டோம். இஸ்லாமியர் உட்பட பல சமூகத்தினரின் உயிர்கள் கடந்த காலங்களில் காவுகொள்ளப்பட்டன. எனவேதான் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்கி விடக்கூடக்கூடாது என்பதில் அஷ்ரப் விழிப்பாக இருந்தார். நாட்டில் ஒற்றுமைக்காக உழைத்த ஒருவரை இங்கு பேசிய சிலர் தேவையில்லாமல் விமர்சித்தமை வேதையானது.

உணர்ச்சிகரமாக பேச்சுகள் விடிவைத்தராது. நமது நாட்டில் அனைவரும் மிகவும் துன்பத்தில் இருக்கின்றோம். அதே போன்று முஸ்லிம் என்ற பெயரை வைத்துக்கொண்டு இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை மேற்கொண்டுவிட்டனர் என்ற வேதனை மாத்திரமின்றி வெளியில் போகமுடியாத மனம் இல்லாத நிலையில் நாம் வாழ்கின்றோம். எங்களது வீடுகளில் இருக்கும் கத்திகள், வால்கள் தொலைக்காட்சிகளில் காட்டப்பட வேண்டும் என அரசியல்வாதிகள் சிலர் ஆசைப்படுகின்றனர்.

திகனையில் 30 பள்ளிகளை அடித்து நொருக்கினார்கள். இந்த கத்திகளில் அல்லது வாள்களில் எதனையாவது கொண்டு வந்து முஸ்லிம்கள் யாராவது எதிர்த்தாக்குதல் நடத்தினார்களா? அது மாத்திரமின்றி பள்ளிவாயல் நிர்வாகிகளோ உலமாக்களோ ஒருபோதும் அதற்கு அனுமதிக்கப்போவதுமில்லை. தேடுதலின் போது கிடைக்கப்பெற்ற ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை நடக்கின்றது. விசாரணை முடியும் வரை பொறுமைகாப்பதே எல்லாருக்கும் நல்லது. இதனை வைத்துக்கொண்டு 22 இலட்சம் முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்காதீர்கள் நாங்கள் பொறுமையாக இருந்த போதும் எங்கள் உள்ளங்களை தொடர்ந்தும் உடைக்கின்றீர்கள். இந்த உயர் சபையில் பேசிய சிலர் நாங்கள் தான் குண்டை க்கொண்டு வந்து இந்த நாசகார செயலை செய்தது போல் எங்கள் மீது விரல்களை நீட்டுகின்றீர்கள். நாங்களும் இங்கே சரிக்குச் சமர் விவாதித்தால் இருக்கின்ற ஐக்கியமும் இல்லாமல் போய்விடும் என்றே பொறுமை காத்து வருகின்றோம்.

30 வருட யுத்த்தை நீங்கள் மீண்டும் உங்கள் மனக்கண் முன் நிறுத்திக்கொள்ளுங்கள். மீண்டும் ஒரு யுத்தமோ பயங்கரவாதமோ எமக்கு வேண்டவே வேண்டாம். ஒற்றுமையாக வாழ்ந்து நாட்டை சுபீட்ச பாதைக்கு இட்டுச் செல்வோம். இங்கு பேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் என் மீதும் எம் சமூகத்தின் மீது மிகவும் அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தினீர்கள். எனவேதான் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் தலைமையில் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் புத்திஜீவிகளும் ஒன்றிணைந்து இதனை மிகவும் வண்மையாக கண்டிப்பதாக

வலியுறுத்தினோம். பயங்கரவாத்தை என்றுமே நாம் ஆதரித்தவர்கள் அல்ல இனியும் நாங்கள் அவ்வாறான வழியில் செல்பவர்கள் அல்ல என்பதையும் வெளிப்பபடுத்தினோம்.

இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நான் பாராட்டுகின்றேன். அவருடைய செயல்பாடுகள் மாத்திரமின்றி அவரின் தொடர்ச்சியான பேச்சுக்கள் எமக்கு மன ஆறுதலை தருகிறது . உங்கள் உணர்வுபூர்வமான, ஆத்திரமான பேச்சுக்கள் மூலம் ஜனாதிபதி முஸ்லிம்களை கொடுமைப் படுத்த வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள். ஊடகங்களில் சின்னச் சின்ன விடயங்களை காட்டி சிங்கள மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிரச்சினை உருவாக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்

என்னைப்பற்றியும் தனிப்பட்ட முறையில் பல்வேறு குற்றாச்சாட்டுக்களை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார். அது தொடர்பில் நீதிமன்றத்தின் துணையை நான் நாடவுள்ளேன்.அவருக்கான கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துளேன். என்னிடம் 3500 ஏக்கர் காணி இருந்தால் அதனை கண்டுபிடிப்பது கடினமா என கேட்டுக்கொள்கின்றேன். 52 நாட்கள் அரசியல் பிரளளேயத்தின் போது எனது உதவியை நாடி அதற்கு நான் வழிப்படாததாலாயே என் மீது இந்த பழியை அவர் சுமத்துகின்றார். என் மீதான குற்றாச்சாட்டை நான் முற்றாக மறுக்கின்றேன்.

எனது சொத்துக்கள் தொடர்பில் நான் ஒவ்வொரு வருடமும் ஜனாதிபதி செயலகத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் அனுப்பிவருகின்றேன். நீங்கள் அதனை தாராளமாக பரிசீலிக்கலாம். நான் இஸ்லாமியன். அதன் வழிமுறைப்படி வாழ்க்கை நடத்துபவன் நான் ஒரு சதமேனும் தவறான வழியில் உழைக்கவில்லை ஹலாலாக உழைத்து வாழ்பவன். நான் முறைகேடாக உழைத்தால் அதற்காக சட்ட நடவடிக்கை எடுக்க உங்களால் முடியும். பயத்துடனும் சோகத்துடனும் இந்த நாட்டு மக்கள் இருக்கும் போது அரசியலுக்காக இந்த வீண்பழிகளையும் அபாண்டங்களையும் என் மீது சுமத்துக்கொண்டு திரிவது உங்களுக்கு கேவலமில்லையா.

இந்த தருணத்தில் சில ஊடகங்களும் மிக மோசமாக நடந்துகொள்கின்றன. ஊடக தர்மம் என்பது அவர்களுக்கு வெகுதூரமாகவிட்டது. இந்த இக்கட்டான, துக்கரமான நிலையில் அமைதியையும் சமாதானத்தையும் இனங்களுக்கு இடையில் செளஜன்யத்தையும் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பான ஊடகங்கள் விஷத்தைக் கக்கிக்கொண்டு தினந்தோறும் அலைகின்றன. இனங்களுக்கு இடையில் குரோதங்களை தூண்டி பிரச்சினைகளுக்கு தூபமிடும் சாதனங்களாக இந்த ஊடகங்கள் மாறி இருக்கின்றன. ஊடகத்திற்கே தர்ம்ம் இல்லாத போது எவ்வாறு இந்த நாட்டில் சமாதானம் மலர முடியும்? இந்த சந்தர்ப்பத்தில் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் அவர்களை நன்றியுடன் நோக்குகின்றோம்.அவர் மாத்திரமின்றி கிறிஸ்தவ பாரதிமார் மற்றும் இந்த மத பெரியார்கள் சமாதானத்தை நேசிக்கும் அனைவரும் மிக கெளரவமாகவும் பொறுப்புணர்வுடனும் நடந்துகொண்டனர்.

குர்ஆர்னிலோ ஹதீஸிலோ எங்குமே பயங்கரவாதத்தையோ அடிப்படைவாத்தையோ ஆதரிக்குமாறு சொல்லப்படவில்லை. எனவே குர்ஆனுக்கு பிழையான அர்த்தங்களை வழங்க வேண்டும். பெருமானாரின் காலத்தில் இடம்பெற்ற யுத்த சம்பவங்களில் இறக்கப்பட்ட இறைவசனங்களை(ஆயத்து) இப்போது கொண்டுவந்து இந்த வேளையில் அதனை பிரயோகிக்க வேண்டாம். எம் பெருமானார் ஸல் அவர்கள் அந்நிய மதத்தினருடன் எவ்வாறு வாழ வேண்டும் என எமக்கு சொல்லித்தந்துள்ளார்கள். ”யுத்த காலத்தில் கூட இலை, மரம், கொடிகளை வெட்டாதீர்கள். சிறுபிள்ளை, பெண்கள், நோயாளிகளை கொல்லாதீர்கள். புறமுதுகு காட்டி ஓடுபவவர்களை கொலை செய்ய வேண்டாம்” என சொல்லித்தந்துள்ளனர். எனவே இஸ்லாமிய வாழ்க்கையை நீங்கள் பிழையாக சித்தரிக்க முனையாதீர்கள் நாங்கள் இந்த நாட்டில் அனைத்து இனங்களுடனும் ஒன்றுபட்டு இந்த பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழித்து நாட்டில் நிம்மத்தியை உருவாக்க பாடுபட முன்னிற்போம். ஆயிரக்கணக்கான வருடங்களாக வாழும் ஒரு சமூதாயத்தை நோக்கி ”இருப்பதென்றால் இருங்கள். இல்லையேல் வெளியேறுங்கள்” என்று நீங்கள் நாக்கூசமால கூறுகின்றீர்கள். உங்கள் இது மனசாட்சிக்கு சரியான என கேட்கின்றேன்.

இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்கள் பின்புலத்தில் உள்ள அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். சாய்ந்தமருது மக்கள் இதனாலயே இந்த பயங்கரவாதிகள் காட்டிக்கொடுத்தனர் அவர்கள் எமக்கு முன்னுதாரனாமாக இருந்தார்கள். இந்த பயங்கரவாதத்தை நிர்மூலமாக்க வேண்டுமென்ற உறுதியில் முஸ்லிம் சமூகம் செயற்படும் போது நீங்கள் அதனை உணர்ந்துகொண்டு உங்கள் பேச்சுக்கள் , செயற்பாடுகளை நேர்மையாக மேற்கொள்ளுங்கள். என நான் வேண்டிக்கொள்கின்றேன்.

 

ஊடகப்பிரிவு

 

 

 

Related posts

“People of Sri Lanka” book launching ceremony under President’s patronage

Mohamed Dilsad

இன்றைய காலநிலை…

Mohamed Dilsad

Ten-month-old twins found murdered

Mohamed Dilsad

Leave a Comment