(UTV|COLOMBO) இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க பொதுமக்களிடம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாதுகாப்புப் பிரிவினர் தொடர்பில் நம்பிக்கை வைத்து செயற்படுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்புப் பிரிவினர் உயர்ந்த பட்ச அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்கள். நாளாந்த நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. பாடசாலைகளின் பாதுகாப்புத் தொடர்பிலும் பாதுகாப்புப் பிரிவினர் உயர்ந்த பட்ச அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இராணுவத் தளபதி தற்போதைய நிலையில் இலங்கையில் சுமார் 200 பயங்கரவாதிகள் மாத்திரமே இருப்பதாகக் குறிப்பிட்டார். அவர்களில் 90 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளார்கள். தொடர்ந்தும் பாரிய அளவிலான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் பல பிரதேசங்களில் கைப்பற்றப்பட்ட வாள்கள் மற்றும் கத்திகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.