(UTV|COLOMBO) இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் நான்காவது கடமையான நோன்பை ரமழான் மாதம் முழுவதும் நோற்ற பின்னர் ஈதுல் பித்ர் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.
சந்திரனின் சுழற்சியை வைத்து கணக்கிடப்படும் இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதம் புனித ரமழான் மாதமாகும்.
அகிலத்திற்கும் ஓர் அருட்கொடையான புனித அல்குர்ஆன் ரமழான் மாதத்திலேயே பூமிக்கு அருளப்பெற்றது. இந்த மாதத்தில் விழித்திருந்து, பசித்திருந்து, தனித்திருந்து ஒரு மாதகாலமாக நோன்பு நோற்பதுடன், நோன்பானது ஒவ்வொரு முஸ்லிமுனுடைய புலனடக்கத்தையும், மனக் கட்டுப்பாட்டையும் உருவாக்கும் சிறந்த ஆன்மீக பயிற்சியாகவும் அமைந்துள்ளது.
வெறுமனே பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் மாத்திரமின்றி, இந்த பயிற்சியின் மூலம் இறையச்சத்தை தன்னகத்தே வளர்த்துக் கொள்வதே நோன்பின் அடிப்படை நோக்கமாகும் என்று அல் குர்ஆன் தெளிவுபடுத்தியயுள்ளது.
ரமழான் மாதத்தை தொடர்ந்து ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.
புனித நோன்பு பெருநாளை இன்றைய தினம் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் எமது யூ டிவி செய்தி பிரிவு தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றது.