Trending News

ஜனாதிபதி ரஷ்யா பயணம்

(UDHAYAM, COLOMBO) – ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

1974 ஆம் ஆண்டில் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மேற்கொண்ட ரஷ்ய விஜயத்தின் பின்பு 44 ஆண்டுகளின் பின்னர் இலங்கையின் அரச தலைவர் ஒருவர் ரஷ்யாவிற்கு மேற்கொள்ளும் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.

ரஷ்ய ஜனாதிபதியின் விஷேட அழைப்பின் பேரில் விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு உயர் மரியாதையுடன் வரவேற்பதற்கு ரஷ்ய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த ஆண்டு இந்திய கோவா நகரில் நடைபெற்ற பிறிக்ஸ் – பிம்ஸ்ரெக் இணை மாநாட்டின் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஏற்பட்ட தனிப்பட்ட நட்பு ஜனாதிபதியின் இந்த விஷேட அழைப்புக்கு காரணமாகும்.

உலகின் பலமிக்க அரச தலைவர்களுள் ஒருவரான ரஷ்ய ஜனாதிபதியிடமிருந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு கிடைத்த இந்த உத்தியோகபூர்வ அழைப்பானது இரு நாடுகளினதும் நட்புறவான வெளியுறவுத் தொடர்புகளில் முக்கியமான சந்தர்ப்பமென குறிப்பிடலாம்.

இலங்கைக்கு பல்வேறு அனுகூலங்கள் கிடைக்கக்கூடிய பொருளாதார, வர்த்தக, சுற்றுலா, விஞ்ஞான, தொழில்நுட்ப, கல்வி மற்றும் கலாசார துறைசார் ஒப்பந்தங்கள் ஜனாதிபதி விஜயத்தின்போது கைச்சாத்திடப்படவுள்ளன.

இலங்கை மற்றும் ரஷ்ய நாடுகளுக்கிடையில் இராஜதந்திர தொடர்புகள் ஆரம்பமாகி 60 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நடைபெறவுள்ள வைபவத்தில் ஜனாதிபதி; கலந்துகொள்ளவுள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் வியாபார தொடர்புகளை மேம்படுத்தும் நோக்குடன் இரு நாடுகளையும் சேர்ந்த வர்த்தகர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வர்த்தக சந்திப்பிலும் ஜனாதிபதி; கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிகக் குறைந்த கடன்சுமை மற்றும் வலுவான ஏற்றுமதி வருமானத்தையும் கொண்ட ரஷ்யா, உலகில் பாரியளவான கனிய மற்றும் பெற்றோலிய படிமங்களையும், சிறந்த மொத்த தேசிய உற்பத்திப் பொருளாதாரத்தையும் ரஷ்யா கொண்டுள்ளதுடன், கலை மற்றும் விஞ்ஞானதுறையில் விசேட பாரம்பரியத்தையும், சிறந்த தொழில்நுட்ப உற்பத்திகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இலங்கை தேயிலை ஏற்றுமதியில் சுமார் 17 வீதத்திற்கு ரஷ்யாவில் சந்தை வாய்ப்பு வழங்கப்படுகிறது.இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால, சிநேகபூர்வமான மற்றும் நம்பகரமான தொடர்புகளை மேலும் உறுதிப்படுத்தி இருதரப்பு உறவுகளின் புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் இந்த விஜயம் உறுதுணையாக அமையும்.

Related posts

SriLankan Airlines and Gulf Air ink codeshare agreement

Mohamed Dilsad

பெற்றோல் மற்றும் டீசல் விலை 05 ரூபாவால் குறைகிறது

Mohamed Dilsad

Swords, daggers, loaded gun discovered in Maligawatte

Mohamed Dilsad

Leave a Comment