(UTV|COLOMBO) பொலிஸாருக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாட்டை எழுத்து மூலமாகவும் வாய் மூலமாகவும் கானொலி மூலமாகவும் இணையத்தளத்தின் ஊடாக முறைப்பாடுகளை செய்யக்கூடிய வகையில் தற்பொழுது தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் இணையத்தளம் மேம்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 28ஆம் திகதி தேசிய பொலிஸ் ஆணைக்குழு இந்த வேலைத்திட்டத்தை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கொழும்பில் நடைபெறவுள்ள வைபவத்தில் பொதுமக்களுக்காக ஆரம்பித்து வைக்கவுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று பொலிஸ் தொடர்பில் பொதுமக்கள் காணும் சில தவறுகளைக் கூட தமது கையடக்க தொலைப்பேசி ஊடாக பதிவுசெய்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தாம் செய்த முறைபாடு தொடர்பில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை கண்டறிவதற்கும் சந்தர்ப்பம் கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முறைப்பாட்டை சமர்ப்பிக்கும் பொழுது கணணியின் ஊடாக வழங்கப்படும் குறியீட்டை 1960 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்புக் கொண்டு குறிப்பிடுவதன் மூலம் இதனை அறிந்துக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி மொரட்டுவ பல்கலைக்கழகம் இதற்கான தொழிநுட்பத்தை வழங்கியுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)