(UTV|COLOMBO)- உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை நினைத்திருந்தால் சஹ்ரானின் மனைவி தடுத்திருக்க முடியும் என நீதி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் சமாதான நீதிவான்கள் பேரவையின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ. மஜீத் தெரிவித்தார்.
நிந்தவூரில் இடம் பெற்ற மனித உரிமை தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு பங்கு கொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமது கணவர் அல்லது பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்பதை மனைவியாக, தாயாக, பொறுப்புணர்வுடன் அறிந்து நடக்க வேண்டும். அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை தடுக்க பெண்கள் முன்வர வேண்டும். அவ்வாறு நடந்தால் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள பாரிய அனர்த்தங்களை எம்மால் தடுக்க முடியும்” என மேலும் தெரிவித்தார்.
வாழும் இடத்தில் மனிதன் தன் சுதந்திரம் பறிக்கப்பட்டால் அல்லது மேற்சொன்ன விடயங்கள் சூறையாடப்பட்டால் அதனை மனித உரிமை மீறல் எனலாம். அப்படியான மனித உரிமை மீறும் சம்பவங்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த சில நாட்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இதில் மதஸ்தலங்கள் தாக்கப்படுதல், வியாபார ஸ்தானங்கள் தாக்கப்படுதல், மத அடிப்படையிலான ஆடைகளுக்கு தடை விதிப்பு, ஏனைய மதத்தை பின்பற்றும் கடும்போக்குவாதிகளால் முஸ்லிம்கள் வஞ்சிக்கப்படுதல், என்பன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இது குறித்து மனித உரிமைகள் ஆணையகம், ஹியுமன் றைட்ஸ் வொச்இ உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்த போதிலும் இவைகள் நிறுத்தப்படுவதாக இல்லை. இந்த செயற்பாடுகளை எமது பேரவை கண்டிக்கிறது என்றார்.