Trending News

பயங்கரவாத தாக்குதலுக்கு பின் இலங்கை முஸ்லீம்கள்: ஒரு பார்வை!

(UTVNEWS | COLOMBO) – ஏப்ரல் 21 அன்று கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் பெரிய விடுதிகளைக் குறிவைத்து நடந்த குண்டுவெடிப்பில் சுமார் 290 பேர் உயிரிழந்தனர். இதன் பிறகு இலங்கை முஸ்லிம்கள் சமூகத்தில் பெரிய பின்னடைவைச் சந்தித்தனர். இது 2009ல் இலங்கையில் முடிவுக்கு வந்த உள்நாட்டு போருக்கு பிறகு நடத்திய மிகப் பெரிய தாக்குதல் ஆகும்.

இந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு முஸ்லிம்கள் மேல் தாக்குதல்கள் நடந்ததாக இரண்டு மாகாணங்களில் இருந்து செய்திகள் வந்துள்ளன.

இலங்கை அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பு காரணத்துக்காக முஸ்லிம் பெண்கள் முகத்தில் புர்கா போடக்கூடாது என ஆணை பிறப்பித்தது பெரிய விவாதத்திற்குள்ளானது.

அமைச்சரவையில் சிலருக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்பட்டதும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும், பதவி விலகுவதாக கூறியதும் அரசியல் ரீதியான குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் இப்போது அவர்கள் பதவியில் தொடர ஒப்புக்கொண்டனர்.

இந்த தற்கொலை தாக்குதலை நடத்தியது தேசிய தௌஹீத் ஜமாத் என்னும் அமைப்பின் உறுப்பினர்களே ஆவர். அவர்கள் தீவிரவாத அமைப்பிற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதிமொழி ஏற்ற வீடியோ ஒன்றும் வெளியானது.

இந்த தாக்குதல் நடந்த அடுத்த நாள், புத்த மதத்தவருக்கும் இஸ்லாமியர்களுக்கும் நடுவில் வன்முறை வெடித்ததால், ஜனாதிபதி சிறிசேன நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.

மசூதிகள் மற்றும் முஸ்லிம்கள் சொத்துகள் மீது பல தாக்குதல் நடந்ததாக வடமேல் மாகாணங்களில் இருந்து செய்திகள் வந்துள்ளன.

மே 13 அன்று குருநாகல் நகரத்தில் ஒரு கும்பல் மசூதிகள், கடைகள் மற்றும் இஸ்லாமியர்களின் வீடுகளை சூறையாடியது.

புத்தளத்தில் அதே நாளில் ஒரு கும்பல் 45 வயதான ஒரு மர வியாபாரியை குத்திக் கொலை செய்தது. இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதல் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு நடந்த மிகப் பெரிய வன்முறை ஆகும்.

இலங்கை முஸ்லிம் அமைப்பின் துணைத் தலைவர் ஹில்மி அஹமது, “இந்த கும்பல் பேருந்தில் வந்தது. இந்த கலவரம் முழுவதுமே திட்டமிட்டு செய்யப்பட்டது” என கூறியதாக தி ஹிந்து பத்திரிக்கை மே 14 அன்று குறிபிட்டிருந்தது.

அதேபோல் அருகில் உள்ள மேற்கு மாகாணத்திற்கு இருக்கும் மினுவாங்கோடா நகரத்தில் வாழும் சிலர், பொலிஸ் அதிகாரிகளிடம் தாக்கப்படுவோம் என்று அச்சம் கொள்வதாக தகவல் கொடுத்துள்ளனர்.

மே 13 அன்று அங்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும் ஒரு கும்பல் முஸ்லிம்களின் 41 கடைகள் மற்றும் பல வீடுகளையும் சூறையாடியது.

வடமேல் மாகாணத்தில் உள்ள வென்னபுவ நகராட்சி, முஸ்லிம்கள் சந்தையில் வியாபாரம் செய்ய தடைவிதித்ததற்கு மனித உரிமை கண்காணிப்பு மையம் ஆட்சேபனை செய்தது.

NEGOMBO – SRI LANKA – MAY 06 : Sri Lankans view a damaged shop after mobs attacked Muslim-owned shops at the Poruthota village in Negombo, about 35 kilometers North of Colombo, Sri Lanka on May 06, 2019 where a Catholic church was targeted in multiple suicide bombings in April that killed more than 250. Two people have been reported arrested by Sri Lankan police after the incident. ( Chamila Karunarathne – Anadolu Agency )

ஏப்ரல் 29ல் நாட்டின் அரசாங்கம் முஸ்லிம் பெண்கள் புர்கா அணியத் தடை விதித்தது.

இந்த முடிவு நாட்டின் பாதுகப்புக்காக எடுக்கப்பட்டது யாரும் அடையாளம் காண இயலாத வகையில் அவர்களுடைய முகத்தை மூடக்கூடாது என ஜனாதிபதி கூறியுள்ளார்.

அனைத்து இலங்கை ஜமாய்த்துல் உலாமா என்னும் இலங்கை முஸ்லீம் அமைப்புடன் சேர்ந்து எல்லா முஸ்லீம் அமைப்புகளும் முக்காடு அணியாமல் இருக்கக்கோரி ஆதரவு அளித்தார்கள்.

“இதைக்குறித்து தி ஹிந்து நாளிதழ் ஏப்ரல் 30 வெளியிட்ட செய்தியில், எங்களுடைய கிறிஸ்துவ சகோதர சகோதரிகளுடன் எங்களுக்கு இருக்கும் நல்ல உறவை காட்ட இது நல்ல சமயம். அதற்காக எங்களுடைய முழு ஒத்துழைப்பு கொடுப்போம்” என அல் முஸ்லீம் ஆத் உடைய நிறுவனர் தாஹா ரெஃபாய் கூறியதாக இருந்தது.

ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளத்தில், எவ்வாறு இந்த தடை பல வகையான முகத்தை மூடும் ஆடைகளுக்கும் பொருந்தும் என்று விவாதத்தை ஏற்படுத்தியது.

இதை அமைச்சர் ஹர்ஷா டி சில்வா ஒரு ட்வீட் மூலம் ஹிஜாப் அணிந்து செல்ல தடை இல்லை ஆனால் மற்றவைகளில் முகம் எவ்வளவு மறைக்கப்படுகிறது என்பதை பொருத்தது என்று தெளிவுப்படுத்தியிருந்தார்.

ஆனால் சில விமர்சகர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு நடுவில் அது முரண்பாடாகவே இருந்தது.

சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசிய வலயத்திற்குப் பொறுப்பான பிரதி பணிப்பாளர் தினுஷிகா திசாநாயக்க, பெண்கள் என்ன அணிய வேண்டும் என்பது அவர்கள் உரிமை, அவர்கள் நம்பிக்கை. அவர்களை முக்காடு அணியக் கூடாது என சொல்வது மிரட்டுவது மற்றும் அவமானப்படுத்துவது போன்றதாகும் என தன்னுடைய இணையதளத்தில் கூறியுள்ளார்.

நியூஸ் 18 என்ற ஊடகத்தில் ஆர்வலர் சலீம் இவ்வாறான தடை அனைத்து முஸ்லீம்களையும் தீவிரவாதி என குறிப்பிடுவது போன்றதாகும் என கூறினார்.

இந்த தடை பாகுபாடாகும் என சில பெண்கள் கூறுவதாக சில செய்திகள் கூறுகின்றன.

அதே நேர்க் காணலில் கொழும்புவைச் சேர்ந்த பெண் ஒருவர், நிகாப் அணிவது ஒரு சமூக பாகுபாடாகும். அதை பொது இடத்தில் அணிய சொல்லக் கூடாது என கூறினார்.

அந்த நேர்காணலிலேயே மேற்கு மாகாணத்தில் வெல்லம்ட்பிடியா என்னும் இடத்தில் 11 வயது முதல் முக்காடு அணியும் ஆசிரியை, இந்த தடை பள்ளிகள் திறக்கும்முன் எடுக்கப்பட்டுவிடும் என நம்புவதாக கூறினார். மேலும் அவர் “என்னால் முகத்தை மூட முடியவில்லையென்றால் நான் பள்ளிக்கு சென்று பாடம் நடத்த மாட்டேன். நான் பாடம் நடத்துவதை விட முகத்தை மூடுவதையே விரும்புகிறேன்” என கூறினார்.

மிரர் என்னும் தினசரி நாளிதழில் ஷ்ரீன் சரூர் என்னும் ஆர்வலர், “நம்முடைய அம்மாக்கள் புர்கா, அபயா போன்றவை அணிந்தார்களா? ஒரு துணியை வைத்து அவர்கள் தங்களுடைய தலையை மறைத்தார்கள். இதனால் நம் முன்னோர்கள் என்ன நரகத்திற்கு செல்வார்களா?” என கூறினார்.

இலங்கையில் மொத்தமாக ஒன்பது சதவீதமே முஸ்லீம்கள் இருக்கிறார்கள் மற்றும் 70 சதவீதம் பெளத்த மதத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் அதிலும் பெரும்பாலானோர் சிங்களர்கள் ஆவர்.

பெளத்த பிக்குகளே பெரும்பாலும் செல்வாக்கு வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதிலும் கடும்போக்கு கொண்ட பொதுபல சேனா பெளத்த மதவாதிகள் முஸ்லீம்களையே அனைத்திற்கும் குற்றம் சாடுவார்கள். இது பிரிவினையை உண்டாக்கும்.

2018 ல் மத்திய மாகாணத்தில் உள்ள கண்டியிலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறையிலும் கலவரம் வெடித்தது. இந்த இரண்டு இடம்தான் நாட்டிலேயே அதிக முஸ்லீம்கள் வாழும் இடம் என்பது குறிப்பிடப்படவேண்டியது.

ஜுலை 7 பொதுபல சேனா கண்டியில் கலகொடஅத்தே ஞானசார தேரரின் தலைமையில் ஒரு நடைபயணத்தை மேற்கொண்டனர். இது பெரும்பான்மையானோரின் விருப்பப்படி முறையான சிங்கள அரசாங்கம் வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்பட்டதாகும்.

இந்த நடைப்பயணத்தின் போது எதிர்ப்பை தவிர்க்க அனைத்து முஸ்லீம் கடைகளையும் மூட உத்தரவிட்டிருந்தனர்.

ஞானசார மே மாதம் அதிபரின் பொதுமன்னிப்பில் விடுதலையானார்.

அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் முரண்பாடான பேச்சிற்குமான குற்றம் சாட்டப்பட்டு 2018, ஜுன் 14 கைது செய்யப்பட்டார். அவர் விடுதலையானதும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாட்டில் உள்ள இஸ்லாமிய நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மற்றொரு புத்த துறவி ஞானரத்ன தேரர் தன்னை பின்பற்றுபவர்களை முஸ்லீம் கடைகளில் எதையும் சாப்பிட வேண்டாம் என கூறினார்.

ஜூனில் வெளியான ஒரு வீடியோவில், யாரெல்லாம் அந்த கடைகளில் சாப்பிடுகிறீர்களோ அவர்களுக்கு எதிர்காலத்தில் குழந்தை பிறக்காது என கூறினார். இது கடந்த வருடம் முஸ்லீம் கடைகளில் மலட்டுத்தன்மை உண்டாக்குவதற்கான மாத்திரையை சேர்க்கிறார்கள் என சமூகவலைதளத்தில் வெளியான பொய்யான புகைப்படத்தைக் கொண்டு கூறியது ஆகும்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு பிறகு, ஜனாதிபதி உள்னாட்டு ஒற்றுமைக்காக அழைப்பு விடுத்தார். நாம் பிரிந்து தனியாக நின்றோம் என்றால் நாடு தோற்றுவிடும். இன்னொரு குண்டு வெடிக்கும் எனக் கூறினார்.

ஆனால் அந்த அழைப்பு உள்நாட்டு அரசாங்கப் பிரச்சினைகளை சரிசெய்யவில்லை. கடந்த வருடம் முதல் மைத்திரபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க இடையில் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலுக்கு பிறகு அவர்களின் விசுவாசிகளுக்கு இடையே குற்றம் சாட்டுதல் தொடங்கியது.

இந்த சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் விதமாக ஜுன் மாதத்தில் அனைத்து முஸ்லீம் அமைச்சர்களும் தாக்குதலுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதால் பதவி விலக முடிவெடுத்தனர்.

ஆனால் 11 ஜுலை அன்று முஸ்லீம்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு அளித்தால் அவர்கள் பதவியை தொடர்வதற்கு ஒப்புக்கொண்டனர்.

இந்த அரசியல் குழப்பம் மற்றும் மதக் கலவரம் ஆகியவையை சந்தித்துக் கொண்டிருக்கும் இலங்கை இந்த டிசம்பரில் ஜனாதிபதி தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(பிபிசி)

Related posts

“Political leadership extreme important when fighting terrorism,” says UK Minister for Security

Mohamed Dilsad

பெற்றோலிய கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூடு தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை

Mohamed Dilsad

இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது புகையிரத பணிப்புறக்கணிப்பு

Mohamed Dilsad

Leave a Comment