சுஐப் எம். காசிம்
ஜனாதிபதி வேட்பாளர்களை அறிந்து கொள்வதில் மக்களுக்கிருந்த ஆர்வம் படிப்படியாகத் தணிந்து வரும் நேரமிது.ஒரு தரப்பாருக்கு சஞ்சலத்தையும் மற்றுமொரு தரப்பினருக்கு சந்தோஷத்தையும் ஏற்படுத்தி, எதிர்பார்ப்புகளின் உச்சத்திலிருந்த ஒரு கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் நாட்டு மக்களின் ஆர்வங்கள் தணியத்தொடங்கின.
கடைசியாக நடந்த தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றதும், முன்னாள் ஜனாதிபதி ஒருவர் அந்தக் கட்சியின் தலைமையை ஏற்றதும் ஶ்ரீலங்கா பொது ஜனப்பெரமுனவின் இமேஜை ஏனைய கட்சிகளை விட ஒரு படி உயர்த்தியுள்ளதுதான். எனினும் தனிப்பட்ட ஒருவரின் ஆளுமை, கட்சியின் வெற்றிக்கு எவ்வாறு இட்டுச் செல்லும். 2015 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளே இச்சிந்தனைகளைக் கிளறுகின்றன. மஹிந்த ராஜபக்ஷவின் ஆளுமை,செல்வாக்கு, அவருக்கிருந்த புகழ் அனைத்தையும் ஐக்கிய தேசிய முன்னணி எப்படித் தோற்கடித்தது?.தேர்தல் கூட்டணியை அமைப்பதில் ராஜபக்ஷ தரப்பு விட்ட தவறிலிருந்தே அத்தரப்பின் தோல்வியும் எழுதப்பட்டது.
பலமான கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தியிருந்தால், 57 இலட்சம் வாக்குகளுடன் பங்காளிக் கட்சிகளின் பங்களிப்பும் வெற்றிக்குப் பங்களித்திருக்கும். இதே தவறுகளே இம்முறையும் இடம் பெறுமோ தெரியாது. தேசிய காங்கிரஸ், ஈபிடிபி,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தவிர இன்னும் பத்துக் கட்சிகள் இந்த அணிக்கு எத்தனை வாக்குகளுக்கு பங்களிக்கும். உண்மையில் இதர கட்சிகளின் எதிர்பார்ப்பு, இணக்கப்பாடுகளுக்கு இடமளிக்கப்பட்டிருந்தால் கோட்டாபாய வேட்பாளராகியிருக்க முடியாது. எனவே இம் முறையும் தனிநபர் ஆளுமையே களமிறங்குகிறது. ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் இந்தக் களத்தை எதிர்த்துப் போரிடப்போவது யார்? யார் என்பது இதுவரை தெரியாவிட்டாலும் களமாடப் போவது ஐக்கிய தேசியக் கட்சி என்பது மட்டும் உண்மை.
இக்கட்சி தனிநபர் ஆளுமையை விடவும் கூட்டுப்பலத்தையே அதிகம் நம்பியுள்ளது.இக் கூட்டுப்பலத்தை உருவாக்கும் முயற்சிகள் இது வரை வெற்றியளிக்கவில்லை.பங்காளிக் கட்சிகள் காட்டும் தயக்கம்,ஶ்ரீகொத்தாவின் உட்பூசல்கள், எதிரணி வேட்பாளருக்குப் பின்னாலுள்ள சக்திகள் இவையெல்லாம் ஐக்கிய தேசிய கட்சிக்குப் பெரும் தலையிடியாகியுள்ளன.சிறுபான்மைக் கட்சிகளின் தலைமைகளை வளைத்துப் பிடித்தாலும் அச்சமூக மக்களை வழி நடத்தும் ஆளுமை தமிழ்,முஸ்லிம் தலைமைகளுக்கு உள்ளதா?அல்லது 2015 இல் மந்தைகள் கட்டவிழ்ந்து போனதுபோல்,இம் முறையும் முஸ்லிம் சமூகம் கட்டவிழ்ந்து செல்லுமா? இவ்வாறு கட்டவிழாமல் காப்பாற்றப்போவது எது.? உண்மையில் இத்தலைமைகளின் முடிவுகளே சமூகம் கட்டவிழ்ந்து செல்வதைக் காப்பாற்றும்.
2015 இல் 61 இலட்சம் மக்கள் தவறிழைத்தமைக்கு ஐக்கிய தேசிய முன்னணி நிறுத்திய வேட்பாளரே காரணம்.இதுபோன்ற தவறுக்கும் தெரிவுக்கும் மக்கள் ஆளாகக் கூடாதென்பதே ஶ்ரீகொத்தாவின் உயர்மட்டத் தலைவர்களின் கவலை. இதனால்தான் இதுவரைக்கும் இழுபறி.2015 ஆம் ஆண்டு விட்ட தவறினால் நாட்டின் நிர்வாகம் முற்றாகக் குலைந்து சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத் துறைகள் முரண்பட்டமை ஜனநாயகத்துக்கு விழுந்த கீறல்களாகவே பார்க்கப்படுகிறது.
ராஜபக்ஷக்களுக்கு நிகராக ஒரு தலைவரைப் பெறமுடியாவிட்டாலும் ஒரு கூட்டுப்பலத்தைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையில் ரணில் காலம் கடத்துகிறார். காலம் பதிலளிக்கும் வரை பொறுமை காப்பதும் ரணிலுக்கு அத்துப்படியான ராஜதந்திரங்களில் ஒன்று. தனக்கு வாய்ப்பை உருவாக்குவது,வராவிட்டால் யாரையாவது மாட்டிவிடுவது. இது வரைக்கும் இந்த வாய்ப்பு இவருக்கு கிட்டவில்லை. இம்முறை எப்படியாவது வாய்ப்புக்காக வாதாடுவதென்று விடாப்பிடியாய் உள்ளதால் ஆரூடமாகச் சொல்லப்படும் வேட்பாளர்கள் எவரையும் ரணில் பொருட்படுத்தவும் இல்லை.நாளை மறுதினம் தீர்க்கமான தீர்மானங்கள் வெளிவரவுள்ளன.
ஒருவாறு ரணிலன்றி வேறு வேட்பாளரின் பெயர் வெளியாக வேண்டுமென்பதே மொட்டு அணியினரின் விருப்பம்.வெளிநாடுகளின் தலையீடு,நெருக்குதல்கள் இல்லாதிருந்தால் 2015 இலும் வென்றிருப்போம் என்கிறார் மஹிந்த. வெளிநாடுகளுக்குத் தேவையற்றவர் என்ற விம்பம் சஜித் பிரேமதாசவுக்கு கிடைப்பதற்கு மஹிந்தவின் இந்த வாக்குமூலமே வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பெயரை மாத்திரம் வைத்துக் கொண்டு சஜித்தால் களமாட முடியுமா? என்பதே ஸ்ரீகொத்தாவுக்குள்ள கவலை.முன்னாள் ஜனாதிபதிகளின் மகனும் சகோதரனும் களமிறங்கச் சாத்தியமான இந்தத் தேர்தல் நாட்டின் அதியுச்ச அதிகாரத்தை இருபது வருடங்களுக்கு கையகப்படுத்தும் போட்டியாகவே பரிணமிக்கப் போகிறது. பிரேமதாசாவை நேசிப்பவர்கள் தன்னை ஆதரிக்க வேண்டுமென்று சிங்களத் தலைவர்களைக் கொன்று குவித்த புலிகளைத் தோற்கடித்த பெருமையை ஞாபகமூட்டவே மொட்டு முனையும். குடும்ப ஆதிக்கம், கொலைகாரர்களின் அதிகாரத் தொல்லையை இல்லொதொழிக்க தனக்கு வாக்களிக்கக் கோருவார் சஜித்.
இரு தரப்புக் கோரிக்கைகளும் நியாயமானதுதான்.வாக்களிக்கத் தூண்டுமா? விருப்பத்தை எற்படுத்துமா? எதுவாயிருந்தாலும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான தேராண்மைவாதத்தை அங்கீகரித்து 2013 இல் காலியில் அலுவலகம் திறந்து அங்கீகாரம் வழங்கிய மொட்டு அணி வேட்பாளரின் மனநிலையை முஸ்லிம்கள் இன்னும் மறக்கவில்லை. சிவப்புத் தொப்பியணிந்த ஒரு சில மௌலவியர் மொட்டை மோப்பம் பிடிப்பதற்காக, முழு முஸ்லிம்களும் சுகந்தம் நுகர மொட்டை நாடுவார்களா? இவ்வாறு நாடுவது முஸ்லிம்களை நடுத் தெருவில் நிர்க்கதியாக்குமா? சஜித்தைப் பொறுத்தவரை சிறுபான்மைச் சமூகங்களின் நாடி, நரம்புகளைப் பிடித்தறிந்து பணியாற்றும் பக்குவமும் பற்றாக்குறையாகவே உள்ளது.இவைகளே இன்று கள எதிரொலிகள்.