Trending News

சமூகங்களை துருவப்படுத்தும் உணர்ச்சியூட்டல்கள்.

(UTVNEWS|COLOMBO) – தமிழர் தரப்பு போராட்ட வியூகங்களின் பரிணாம வளர்ச்சி ஒரு தசாப்த காலத்துக்கு முன்னர் வேறு வடிவத்தில் முகங்காட்டத் தொடங்கியதிலிருந்து வடக்கு, கிழக்குச் சமூகங்களின் அரசியல் ஒன்றித்தல்களை தூரமாக்கி வருகின்றன.

புலிகளின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட”பொங்கு தமிழ்” எழுச்சியூட்டல்களும், தற்போது முன்னெடுக்கப்படும் “எழுக தமிழ்” உணர்ச்சியூட்டல்களும் தமிழ் சமூகத்தின் அரசியல் விடுதலை உணர்வுகள் மங்கி, மறையாமல் பாதுகாக்கும் யுக்திகளே.

விடுதலை வேண்டி நிற்கும் ஒரு சமூகம் எதிரிகளின் அடக்கு முறைகளுக்கு அஞ்சி, சமூகத்தின் மீதான தாகம், வேட்கைகளை கைவிடாமல் பாதுகாக்கவும் விழிப்பூட்டவும் இவ்வாறான எழுச்சி, உணர்ச்சிக் கோஷங்கள் அடிக்கடி ஞாபகமூட்டப்படுவது அவசியம்தான். இந்த ஞாபகமூட்டல்கள் சகோதர சமூகத்தின் அபிலாஷைகளை அல்லது அவர்களையும் பொது மொழித் தேசியத்துக்குள் உள்வாங்கும் விருப்புக்களையும் வௌிப்படுத்தாமலிருப்பதே கவலையளிக்கிறது.

இதே போன்று முஸ்லிம் தரப்புக்களிலிருந்து எப்போதாவது முன்னெடுக்கப்படும் “ஒலுவில் பிரகடனம்” “வடபுல வௌியேற்றம்”, “ஷுஹதாக்கள் தினம்” என்பனவும் சகோதர சமூகத்தின் தாயகக் கோட்பாடுகளில் சகலதையும் ஏற்காது சிலவற்றில் விலகிச் செல்வதையே வௌிச்சமிடுகிறது. மேலும் இக்கோரிக்கைகளுடன் இணைந்த அரசில் சித்தாந்தங்களில் முஸ்லிம் தரப்பு அதிக அக்கறைப்படாதமை,தமிழர் சமூகத்து அரசியலுக்கு முட்டுக்கட்டை போடும் சந்தர்ப்பவாத அரசியலாகவும் பார்க்கப்படுகிறது.

இவ்வாறு இவ்விரு சமூகங்களும் துருவப்படுவது, பிரித்தாளும் பேரினவாத அரசுகளுக்கு வாய்ப்புக் களாகின்றன. இந்த வாய்ப்புக்களையே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பெருந் தேசியக் கட்சிகள் பயன்படுத்தவுமுள்ளன.

புலிகளின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட (2002 முதல் 2004) பொங்கு தமிழ் நிகழ்ச்சிகளில் சகோதர சமூகம் (முஸ்லிம்) முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருந்தது. இணைந்த வட, கிழக்கில் முஸ்லிம்களுக்கு, எதுவென்பதை இக்காலத்தில் எவரும் வாய்திறக்கவில்லை.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் நேரடிப்பார்வைகள் இந்தப் பொங்கு தமிழ் எழுச்சியூட்டல்களில் விழுந்ததால் இந்நிகழ்வுகளில் உரையாற்றிய மிதவாத, நடு நிலைப்போக்குள்ள தமிழ்த்தலைவர்களாலும் இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கான பரிந்துரைகள், தீர்வுகள் குறித்துப் பேசமுடியாமல் போனது. இருந்தாலும் சகோதர சமூகத்துக்கு எதிரான கட்டவிழ்த்தல்கள், இனச்சுத்திகரிப்பு, அநீதிகளுக்கு எதிராக வௌிப்படையாகப் பேச முடியாவிட்டாலும் சில, தமிழ்த் தலைவர்களின் மனச்சாட்சிகள் பேசியமை முஸ்லிம்கள் மத்தியில் இன்றைக்கும் நன்றிகளாக நிழலா டுகின்றன.

அன்றைய சூழ்நிலையில் (2002 முதல் 2004) முஸ்லிம் தரப்பு அரசியல்வாதிகள் முன்னெடுத்த சில நடவடிக்கைகளும் தமிழ்த் தேசியத்துக்குள் நாங்கள் இல்லை என்பதைக் காட்டியிருந்தன.

சர்வதேச மத்தியஸ்தங்களுடனான, சட்டாஹிப், ஒஸ்லோ, ஐரோப்பிய பேச்சுவார்த்தைகளில் தனித்தரப்பு மறுக்கப்பட்ட முஸ்லிம்கள், ஜெனீவா அமர்வுகளில்அரசாங்கத் தரப்புடன் சென்று வழங்கிய வியாக்கியானங்கள் தமிழர் போராட்டத்தை பழிவாங்கல்களுக்காக காட்டிக் கொடுத்ததாகவே தமிழ்ச் சமூகத்தால் நோக்கப்பட்டது. இதனால் மிதவாதத் தமிழ்த் தலைவர்களால் முஸ்லிம்களுக்காகப் புலிகளிடம் பரிந்து பேசும் நிலைமையும் ஏற்படவில்லை. எனவே பொதுத் தேசியத்துக்குள் முஸ்லிம்களை உள்வாங்காத, தவறுகள் புலிகளின் தரப்பிலே அதிகமுள்ளதாக எண்ண முடிகிறது. புலிகளின் இந்தத் தவறுகளையே பேரினவாதம் பிரித்தாளும் தந்திரங்களுக்குக்கையாண்டன.

வடக்கு,கிழக்கு தமிழ் மொழிச் சமூகங்களைப் பொறுத்த வரை, தவறுகள் எந்தப் பக்கமென்ற விவாதம், முட்டை முந்திவந்ததா? கோழி முதல்வந்ததா? என்பதைப் போன்றதே.

புலிகள் இல்லாத இந்தக் காலத்தில் உணர்ச்சியூட்டப்படும் “எழுக தமிழ்” கோஷங்களிலாவது முஸ்லிம் தரப்பு நியாயங்களைக் காணமுடியவில்லை.

வடக்கு – கிழக்கு இணைப்பு,தமிழர்களுக்கான சுயாட்சி, கைதிகள் விடுதலை, காணிவிடுவிப்பு, காணாமலாக்கப்பட்டோர் விவகாரம்,திட்டமிட்ட குடியேற்றங்கள், கலாசார அழிப்புக்களை தவிர்த்தல் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை முன்னெடுத்து நடாத்தப்படும் “எழுக தமிழ்” உணர்ச்சிச் சிந்தனைகள் தமிழ்த் தேசியத்துக்குள் முஸ்லிம்களை உள்வாங்காது உதாசீனம் செய்துள்ளன. இது தவறென்பதுமில்லை. அழையாது விருந்துக்கு வரவில்லையே எனக்குறை கூறுவதுபோல், முஸ்லிம்கள் ஒத்துழைக்கவில்லையென “எழுக தமிழ்” தரப்பினர் இனிமேல் கூற முடியாத நிலையை இது ஏற்படுத்தப்போகின்றது.

இதேபோன்று அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட, தென்கிழக்கு அலகுக் கோரிக்கைகள் தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைமை ஒரு வார்த்தையாவது தமிழர்களிடம் கேட்டறிந்ததா? என்ற விவாதமும் உள்ளது. நீலன் திருச்செல்வனுடன் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் நடத்திய தனிப்பட்ட பேச்சுக்களை சிங்கள அரசுகளின் அழுத்தமாகவே தமிழர் தரப்பு பார்த்தது.

இந்தத் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட்ட 1996, 1997 காலப்பகுதிகள் புலிகளுக்கு எதிராக ஶ்ரீலங்கா அரசு கடுமையான இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததால் தமிழர் தரப்பிலிருந்து எழும்பிய குரல்களை அரசாங்கம் கண்டு கொள்ளவுமில்லை. எனினும் இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கான இப்படியான ஒரு தீர்வை ஏற்பதில் தமிழர்களுக்கு எந்தப்பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதுமில்லை.

வடமாகாணத்திலுள்ள 33 உள்ளூராட்சி சபைகளில் உள்ள ஒரேயொரு முஸ்லிம் பிரதேச சபையான முசலி பிரதேச சபையின் நிர்வாகத்திலுள்ள பிரதேச செயலகத்தில், தமிழர் ஒருவரே மாறி மாறி பிரதேச செயலாளராக உள்ளார். இவரை வேண்டாமென முசலிப்பிரதேச முஸ்லிம்கள் இதுவரை கோரவுமில்லை. ஆனால் கல்முனை பிரதேச செயலகத்தில் மட்டும் ஏன் இந்த அகமுரண்பாடுகள் வெடித்தன என்பதே இன்றுள்ள கேள்வி?

கல்முனைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் பிரதேசங்களில்ஓரக்கண் பார்வையுடன் நடந்து கொண்டதால் ஏற்பட்ட விரக்தியோ இது? எனவே இரு சமூகங்களையும் துருவப்படுத்தாத, அரசியல் சிந்தனைகளில் கவனம் செலுத்துவதே, ஒரு மொழிச்சமூகங்களை பொது எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும்.

எனவே இச்சமூகங்களிலுள்ள சாதாரண தமிழ் தேசியத் தலைமைகளும், மென் போக்கு முஸ்லிம் தலைமைகளும் ஒன்றிணைந்து எமக்கான, பொது எதிரியை வீழ்த்தும் பொதுவான வேலைத்திட்டத்திட்டத்தில் களமிறங்குவதே, வடக்கு, கிழக்கு அபிலாஷைகளை அர்த்தப்படுத்தும்.

-சுஐப் எம்.காசிம்-

Related posts

இந்திய பெண்ணை கரம் பிடிக்கும் ஹசன் அலி (photo)

Mohamed Dilsad

Charges to be filed against Mahanama & Dissanayake

Mohamed Dilsad

Legal action against State officials failing to report for election duty – Elections Commission

Mohamed Dilsad

Leave a Comment