Trending News

இரும்புப் பாதணிக்குள் பரிதாப பத்தொன்பது

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் அரசியலில் 1994 ஆம் ஆண்டிலிருந்து பேசப்படும் விடயத்தில் இது வரைக்கும் நிறைவேறாத ஒன்றுதான், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிக்கும் முயற்சிகள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் காலத்திலிருந்து பேசப்பட்டு வரும் இவ்விடயம் இதுவரைக்கும் நிறைவேறவில்லை. இதுதான் நிறைவேற்று அதிகாரத்தின் அகம்பாவம் பூனைக்கு யார் மணி கட்டுவது (WHO TIED THE BELL FOR THE CAT) என்ற பயத்தால் இதுவரைக்கும் எலிகள் செத்து மடிவதைப் போன்றுதான், இந்த நிறைவேற்று அதிகாரமும் சிலரைச் சாகடிக்கிறது. யாரைச் சாகடிக்கிறது இந்த அதிகாரம் சிறுபான்மையினரையா? அல்லது சிறுபான்மைத் தலைவர்கள் சிலரையா? அல்லது இந்த அதிகாரத்துக்கு வர முயன்று முடியாமல் போன பலரையா? இந்த அதிகாரத்திலுள்ள பன்முகத் தோற்றங்கள், இது அகப்படும் ஜனாதிபதிகளின் மனநிலைகளைப் பொறுத்தே வேறுபடும்.

டி.பி விஜேதுங்க போன்றோரிடம் அகப்பட்டால் பிரதமரே நாட்டின் பிரதான அதிஷ்டசாலி. மஹிந்த ராஜபக்‌ஷ போன்றோரிடம் அகப்பட்டால் பிரதமர் உட்பட அமைச்சர்கள் அனைவருமே அற்பஜாதி. ஜெயவர்தனவின் பாராளுமன்றப் பலத்தால் கொண்டு வரப்பட்ட இந்த அதிகாரத்தை அனுபவிக்கும் எவரும் விட்டுப் பிரிய விரும்புவதுமில்லை, விட்டுக்கொடுக்க விழைவதுமில்லை.

“ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மட்டும்தான் மாற்ற முடியாத” இந்த அதிகாரம் இன்று நாற்பது வருடங்களாக எமது நாட்டை ஆட்சியாளனின் தேவைகளுக்கு ஏற்ப ஆட்டிப்படைக்கிறது, புரட்டிப்போடுகிறது. பேரம் பேசும் பலத்துடனிருந்த எத்தனையோ சிறுபான்மைக் கட்சிகளைப் பணிய வைத்திருக்கிறது .

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் போராட்டங்களுக்கான களங்கள் கருக்கட்டிய 1980 ஆம் ஆண்டு காலங்களில் அறிமுகமானதால், குறிப்பாக தமிழர்களைக் குறிவைத்துக் கொண்டுவரப்பட்ட சட்டமாகவே இது பார்க்கப்பட்டது. பின்னர் 1989 ஆம் ஆண்டில் தென்னிலங்கைப் புரட்சியை அடக்குவதற்கு இச்சட்டம் பாவிக்கப்பட்ட முறைகளும் 2019 ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் சிவில் சமூகத்தை இச்சட்டம் தீண்டிய முறைகளும் பொதுவாக ஜநாயக, சிவில் சமூகங்களின் நடைமுறைகளுக்கு எதிரானதாகப் பார்க்க வைக்கப்பட்டது. இவற்றைவிட 2010 முதல் 2015 வரையான மஹிந்தவின் இரண்டாம் தவணை ஆட்சிக்காலமே இவ்வதிகாரத்தின் கொடூரங்களைப் பளிச்சிடச் செய்தன.

குடும்ப ஆட்சி, ஏகாதிபத்தியப் போக்கு, நீதித்துறையின் பிரதம தலைமையையே ஆசனத்திலிருந்து தூக்கியெடுத்த ஆணவம், பிராந்திய வல்லரசுகளில் ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு முழு உலகையுமே எச்சரிக்கும் இறுமாப்பு, ஏன் சட்டம் இயற்றும் உச்ச அதிகாரமுள்ள பாராளுமன்றத்தையே கண்டுகொள்ளாமல் இப்படிப் பல முகங்களைக் காட்டியது இவ்வதிகாரம். இப்படிச் சென்றால் எப்படியும் ஆட்சி பீடமேற முடியாதென அஞ்சித்தான் சிலர் 2015 இல் 19 ஆவது திருத்தமென சில கடிவாளங்களைக் கொண்டு வந்தனர். இப்போதுள்ள நிலையில் எஞ்சிய அதிகாரங்களுடன் ராஜபக்‌ஷக்களின் எச்சங்கள் ஆட்சிபீடமேறுவது, அல்லது ஐக்கிய தேசிய கட்சியில் தன்னை மீறி ஒருவர் இவ்வதிகாரத்துக்கு வருவது ரணிலுக்குப் பிடிக்கவில்லை. ரணிலுக்குப் பிடிக்காவிட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் பிடிக்காது.

52 நாள் அரசில் ரணிலுக்கு நடந்த கதி, இதற்குப் பின்னரும் நடக்காதிருக்க வேண்டும். இல்லாவிட்டால் ரணில் இந்த அதிகாரத்துக்கு வரவேண்டும். இந்தப் பிணைப்பின் பின்னணியில்தான் அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் யோசனை ஓடிவந்திருக்கும். ரணிலின் அதிகாரத்தைக் காப்பாற்றுவதில் சுமந்திரனுக்குள்ள அக்கறை, தனது சமூகத்தின் அபிலாஷைகளில் இருந்திருந்தால், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியை அணுகி தமிழர்களின் காணிகளை விடுவித்திருப்பார், கைதிகளை விடுவித்திருப்பார், வடக்கிலுள்ள மேலதிக படைகளை வௌியேற்றி தமிழ் சிவில் சமூகத்தின் அநாவசிய அச்சங்களைப் போக்கியிருப்பார். இருந்தகாலத்தில் இதைச் செய்யவில்லை.

52 நாள் அரசிலாவது மைத்திரியை நெருங்கிச்சாதிக்கும் சந்தர்ப்பத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கை நழுவவிட்டது. நிறைவேற்று அதிகாரத்தின் பன்முகங்களைத் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியாகக் காணவில்லை என்பதா? அல்லது ரணிலிடம் இல்லாவிட்டால் யாரிடமும் செல்வதில்லை என்ற இறுமாப்பில் இருந்ததோ தெரியாது.தெரிந்திருந்தால் 52 நாள் அரசில் மைத்திரியை அணுகியிருக்கலாம்.

எதுவாயிருந்தாலும் இந்த அதிகாரத்துக்குள் பிரதமர் ஒருபொருட்டல்ல. இது தெரிந்திருந்த, ரணில்தான் இதை இல்லாதொழிக்க முனைகிறார். ரணிலுக்கு மாத்திரமல்ல அதிகாரமுள்ள பிரதமர் பதவியில் குறியாகவுள்ள மைத்திரி, மஹிந்தவும் ரணிலின் 52 நாட்கள் நிர்க்கதி நமக்கும் ஏற்படக்கூடாதென்பதில் குறியாகவுள்ளனர்.

இவ்வாறு ஒழிக்கப்பட்டால் ஜனாதிபதியை எவ்வாறு தெரிவதென்பதிலும் சில சிக்கல்கள் உள்ளன. பாராளுமன்றத்தினூடாகத் தெரிவதா? அல்லது தேர்தலில் தெரிவதா? இவ்வாறு அதிகாரமில்லாத ஜனாதிபதியை பாராளுமன்றம்தான் தெரிவு செய்வதானால் ஐந்து, ஏழு எம்பிக்களை வைத்துக் கொண்டு சிறுபான்மைக் கட்சிகள் எதைச் சாதிக்கச் சாத்தியம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மேலக மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் இம்முயற்சிகளை எதிர்த்துள்ளன. இவ்வதிகாரமுள்ள ஜனாதிபதியை ஆட்சிக்குக் கொண்டுவரப் பங்களித்ததாகக் கூறும் இச்சிறுபான்மைக் கட்சிகள் இதுவரை எதைச்சாதித்தன.

எனவே தேசிய தேர்தல்களில் அல்லது தேசிய தலைமையைத் தெரிவு செய்யும் விடயத்தில் பெரும்பான்மைக் கட்சிகளைப் பணிய வைக்கும் பேரம்பேசும் அதிகாரச் சமநிலையை சிறுபான்மைக் கட்சிகள் பெறும் வகையிலான நடைமுறைகள் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும்.

 

சுஐப்.எம்.காசிம்.

Related posts

CEB Unions to commence island-wide strike following clash with Police

Mohamed Dilsad

10ம் திகதி அஜித்தின் விஸ்வாசம் படம் ரிலீஸ் இல்லை?

Mohamed Dilsad

ரணிலே பிரதமர்: ஐ.​தே.மு தீர்மானம்

Mohamed Dilsad

Leave a Comment