(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 7 இலட்சத்து 17 ஆயிரத்து 918 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் 6 39 515 பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் தபால் மூலம் வாக்களிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 78 403 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவத்தில் சேவையாற்றுவோர் எதிர்வரும் 31 ஆம் திகதி மற்றும் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியும் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலகங்கள், தேர்தல் செயலகங்கள் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றில் சேவையாற்றுவோர் எதிர்வரும் 4 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தினங்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி தாம் சேவையாற்றும் பிரதேசங்களிலுள்ள மாவட்டத் தேர்தல் அலுவலகங்களில் தபால் மூலம் தமது வாக்குப்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.